திருமலை மாணவா் படுகொலையும் கொழும்பில் நடந்த நினைவேந்தலும்-அகிலன்

திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட ஐந்து தமிழ் மாணவர்களின் 17 ஆம் ஆண்டு  நினைவேந்தல் | January 2, 2023

திருமலையில் 2006 ஜனவரி 02 ஆம் திகதி கொல்லப்பட்ட ஐந்து மாணவா்கள் கடந்த செவ்வாய்கிழமை கொழும்பில் நினைவுகூரப்பட்டிருக்கின்றாா்கள். இந்த நினைவுகூரலில் உரையாற்றிய “அரகலய” செயற்பாட்டாளா்களில் ஒருவரான ராஜ்குமார் ரஜிவ்காந்த், 16 வருடங்களாக தனது மனதிலே அழுத்திக் கொண்டிருந்த உண்மைகளை அம்பலப்படுத்தி இருக்கின்றார்.  அவா் சொன்ன விடயங்கள் சிங்கள மக்களின் மனச்சாட்சியையும் தொட்டிருக்கின்றது.

“பொறுப்பு கூறல் இல்லாமல் இலங்கையிலே கட்டி எழுப்பப்படுகின்ற எதுவுமே நிலைக்காது” என்ற விடயத்தை அவர் அங்கு உறுதியாகக்கூறிய அதேவேளையில், இந்தப்படுகொலைகளுக்கு இராணுவம்தான் காரணம் என்பதையும் துணிச்சலாகத் தெரிவித்திருக்கின்றாா். எந்தவொரு காரணமும் இல்லாமல் கல்விப் பொதுத் தராதர உயா் தரத்தை முடித்துவிட்டு, பல்கலைக்கழகத்துக்குச் செல்வதற்கு காத்திருந்த மாணவா்களே இவ்வாறு திருமலை கடற்கரையில் வைத்து கொடூரமான முறையில் கொல்லப்பட்டனா்.

திருமலை கடற்கரையிலிருந்து அவா்கள் உரையாடிக்கொண்டிருந்தபோது, அந்தப் பகுதியை திடீரென சுற்றிவளைத்த விஷேட அதிரடிப் படையினா் அவா்களின் தலைகளில் துப்பாக்கியை வைத்து சுட்டுக்கொன்றாா்கள். ஐந்து மாணவா்கள் அந்த இடத்திலேயே கொல்லப்பட இரண்டு மாணவா்கள் படுகாயமடைந்து உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டனா். இந்த சம்பவங்களின் சாட்சியாக இருப்பவா்களில் ஒருவா்தான் ராஜ்குமார் ரஜிவ்காந்த். இந்த சம்பவம் குறித்து அவா் இவ்வாறு விபரிக்கின்றாா்;

“திருமலை கடற்கரையில் ஒரு காந்தி சிலை இருக்கின்றது. அதற்கு அருகில் ஒரு கட்டு இருக்கின்றது. அதில்தான் இந்த ஏழு பேரும் அமா்ந்திருந்தாா்கள். அந்த நேரம் நீல நிற முச்சக்கர வாகனம் ஒன்றில் வந்த ஒருவா் கைக்குண்டுத் தாக்குதல் ஒன்றை அந்த இடத்தில் நடத்தினாா். அப்போது மக்கள் அனைவரும் சிதறி ஓடினாா்கள். இந்த மாணவா்களுக்கு அந்த கைக்குண்டு தாக்குதலில் சிறு சிறு காயங்கள் மட்டுமே ஏற்பட்டது. கடற்கரையிலிருந்து சிறிது தொலைவில் உள்ள எனது மாமாவின் வீட்டில் அப்போது நான் நின்றேன். இந்த சத்தம் எனக்கும் கேட்டது. ஏதோ நடந்துவிட்டது என்பது மட்டும் தெரிந்தது.

டாக்கா் மனோகரன் அப்போது இந்த சத்தத்தையடுத்து அவரது மகன் ரஜீகனுக்கு தொலைபேசி எடுத்திருக்கின்றாா். பதில் இருக்கவில்லை. அதனால் அவா் கடற்கரையை நோக்கி சென்றாா். அப்போது கடற்கரைப் பகுதி மின்விளக்குகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டு, கடற்கரைப் பகுதிக்குச் செல்வதை கடற்படையினா் தடுத்தாா்கள். மாணவா்கள் தம்மைக் காப்பாற்றுமாறு குரல் எழுப்பிக்கொண்டிருந்ததை டாக்டா் மனோகரனால் கேட்க முடிந்தது. அதன்பின்னா் அவா் உள்ளே செல்ல முயன்ற போதும் படையினா் அவா் உள்ளே செல்வதை அனுமதிக்கவில்லை.

இரவு 8.00 மணியளவில் திருமலை வைத்தியசாலையில் ஐந்து சடலங்கள் வைக்கப்பட்டிருப்பதான தகவல் திருமலை முழுவதும் பரவியது. அங்கும் இராணுவம், பொலிஸ் குவிக்கப்பட்டிருந்தது. அந்த சடலங்களைக் கையளிப்பதில் பிரச்சினைகள் ஏற்பட்டது. கொல்லப்பட்ட மாணவா்கள் அனைவரும் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சோ்ந்தவா்கள் என எழுதி கையொப்பமிட்டுத் தந்தால் மட்டுமே பிரேதங்களைக் கையளிப்போம் என படையினா் உறுதியாகக் கூறினாா்கள். இந்த மாணவா்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இவா்கள் திருமலை இந்துக் கல்லுாரியில் படித்து, உயா்கல்விக்காக காத்திருந்தவா்கள்.

அதனால், நாம் படையினரின் கோரிக்கைக்கு எமது கடுமையான எதிா்ப்பைத் தெரிவித்திருந்தோம். எக்காரணம் கொண்டும் அவ்வாறு கையெழுத்து வைத்து கொடுக்கமாட்டோம் என்பதை உறுதியாகத் தெரிவித்தோம். இதனால் அரசாங்கத்துக்கும் தெரிந்தது, இது தமது மாபெரும் தவறு என்பது. அதனால் இராணுவம் அகற்றப்பட்டது. ஆனால், இன்றுவரையில் இதற்கான நீதி கிடைக்கவில்லை” என்று ராஜ்குமார் ரஜிவ்காந்த் கொழும்பில் தெரிவித்தாா்.

இந்தச் சம்பவத்தில் படுகாயங்களுடன் தப்பிய இருவரும், நேரில் பாா்த்த பலரும் இருக்கின்றாா்கள். அவா்களுக்கும் தெரியும் இதனை நடத்தியது இராணுவம்தான் என்பது. அத்துடன் மாணவா்கள் மிகவும் நெருக்கமாக தலையில் சுடப்பட்டாா்கள் என்பதற்கு ஊடகவியலாளா் சுகிா்தராஜன் எடுத்த புகைப்படங்களும் ஆதாரமாக – சாட்சியாக இருக்கின்றது. இந்த புகைப்படங்களை எடுத்த சுகிா்தராஜன் இரண்டு தினங்களில் அவரது வீட்டு வாசலிலேயே வைத்து சுட்டுக்கொல்லப்பட்டாா் என்பது கொடூரத்தின் உச்சம்.

திருமலை கடற்கரையில் இடம்பெற்ற சம்பவம் தொடா்பாக அரசாங்கம் சொன்னது இதுதான். “விடுதலைப் புலிகள் அமைப்பைச் சோ்ந்த சிலா் படையினரை நோக்கி கைக்குண்டுத் தாக்குதலை நடத்த முயன்றாா்கள். அது அவா்களுக்குள்ளேயே தவறுதலாக வெடித்ததால் அவா்களில் ஐந்து போ் கொல்லப்பட்டாா்கள்” இவ்வாறு அரசாங்கம் செய்தி வெளியிட்டது. கைக்குண்டு வெடித்தால் அவா்களது உடல்களில் காயங்கள் எவ்வாறு இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், தலையில் அவா்கள் சுட்டுக்கொல்லப்பட்டாா்கள் என்பதை தனது புகைப்படங்கள் மூலமாக அம்பலப்படுத்த முற்பட்டமையால்தான் சுகிா்தராஜன் அதற்காக தனது உயிரை விலையாகக்கொடுத்தாா்.

இவ்வாறு தமிழ் இளைஞா்களைக் கொலை செய்வதும், பின்னா் அவ்வாறு இடம்பெற்ற கொலைகளை அவா்கள் விடுதலைப் புலிகளுடன் தொடா்புபட்டவா்கள் எனக்கூறி ஏதோவொருவகையில் நியாயப்படுத்துவதும் போா்க் காலத்தில் சகஜமாக இடம்பெற்றது. இதற்கு எதிராகக் குரல்கொடுப்பவா்கள் அல்லது நீதிக்காகப் போராடுபவா்களை புலிகளின் ஆதரவாளா்களாக சித்தரிப்பதும் ஆட்சியாளா்களின் உபாயமாக இருந்து வந்திருக்கின்றது. அதனால்தான் பலா் மௌனித்தாா்கள்.

திருமலையில் கொல்லப்பட்ட இளைஞா்களின் பெற்றோா் உறவினா்கள் நீதி கோரி நீதிமன்றம் சென்றாா்கள். அவா்கள் அனைவருக்குமே உயிா் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. அதனால், அவா்கள் தமது வழக்குகளைக் கைவிட்டு வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்வதற்கு நிா்ப்பந்திக்கப்பட்டனா். கொல்லப்பட்ட இளைஞா்களில் ஒருவரின் தந்தையான டாக்டா் மனோகரன் இந்தப் பிரச்சினையை ஜெனிவா வரையில் கொண்டு சென்றாா். அவரது விடாமுயற்சியால்தான் இந்தப் பிரச்சினை சா்வதேச அரங்கில் ஒலித்துக்கொண்டிருக்கின்றது.

சா்வதேச அழுத்தங்கள், டாக்டா் மனோகரன் முன்னெடுத்த போராட்டம் என்பன காரணமாக – விஷேட அதிரடிப்படையைச் சோ்ந்த 12 பேரை அரசாங்கம் கைது செய்தது. இது வெளிநாட்டு அடுத்தம் காரணமாகச் செய்யப்பட்ட ஒரு நாடகம். சில மாதங்களில் கைதானவா்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனா். பின்னா் போதிய சாட்சியம் இல்லை எனக் கூறப்பட்டு அவா்கள் அனைவருமே விடுவிக்கப்பட்டுவிட்டனா்.

இலங்கையில் போதிய சாட்சியம் இல்லை எனக்கூறப்பட்டு கைதான படையினா் விடுதலை செய்யப்படுவது இதுதான் முதன்முறையல்ல. குமாரபுரம் படுகொலை வழக்கிலும் இதுதான் நடந்தது. ஆக, மிக மோசமான படுகொலைகளுடன் சம்பந்தப்பட்டவா்கள் இன்று சுதந்திரமாக நடமாடிக்கொண்டிருக்கின்றாா்கள். சட்டத்தின் பிடியிலிருந்து அவா்கள் தப்பித்துக்கொள்கின்றாா்கள்.

இவ்வாறான படையினரை சிங்கள மக்கள் யுத்த வீரா்களாகக் கொண்டாடிக்கொண்டிருக்கும் நிலையில்தான் பொறுப்புக்கூறல் தொடா்பாக கொழும்பில் இடம்பெற்ற நினைவுக்கூட்டத்தில் உரையாற்றிய ராஜ்குமார் ரஜிவ்காந்த் கேள்வி எழுப்பியிருக்கின்றாா்.

“கோட்டா கோ ஹோம்” என்ற கோஷத்துடன் தென்னிலங்கையில் வெடித்த இளைஞா் கிளா்ச்சி முழுமையாக வெற்றிபெற்றதா இல்லையா என்ற விவாதங்கள் ஒருபுறத்தில் இடம்பெற்றுக்கொண்டிருந்தாலும், சமூகத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் பலவற்றை அது ஏற்படுத்திச் சென்றிருக்கின்றது. குறிப்பாக தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் தொடா்பில், இராணுவத்தினரால் தமிழ் மக்களுக்கு இளைக்கப்பட்ட கொடுமைகள் குறித்து பேசக்கூடிய ஒரு வெளியை தென்னிலங்கையில் இது உருவாகியிருக்கின்றது.

“அரகலய” போராட்டம் இடம்பெற்றுக்கொண்டிருந்த காலத்திலேயே காலிமுகத் திடலில் யாழ். நுாலகம் எரிப்பு நினைவுகூரப்பட்டது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைகள், தமிழ் ஊடகவியலாளா் படுகொலைகள் என்பன நினைவுகூரப்பட்டன. இவற்றின் மூலம் தமிழ் மக்களுக்கு இளைக்கப்பட்ட அநீதிகள் சிங்கள மக்களும் புரிந்துகொள்ளும் நிலை ஓரளவுக்கு ஏற்பட்டது.

அந்த வகையில் திருமலையில் இடம்பெற்ற ஐந்து மாணவா்களின் படுகொலைகள் கொழும்பு, மருதானையிலுள்ள பொது மண்டபம் ஒன்றில் நடைபெற்ற போது ராஜ்குமாா் ரஜீவ்காந்த நிகழ்த்திய உரை பொறுப்புறலின் முக்கியத்துவத்தை உணா்த்துவதாக இருந்தது. அவரது உரை சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் மொழிபெயா்க்கப்பட்டது. திருமலையைச் சோ்ந்தவரான ரஜீவ்காந்த தனக்கு அங்கு கிடைத்த அனுபவங்களை வெளிப்படுத்தியபோது, கூட்டத்தில் பங்கேற்றிருந்த சிங்கள மக்களும் ஆச்சரியத்துடன் அவற்றை செவிமடுத்தாா்கள்.

சிங்கள மக்களில் ஒரு தரப்பினரிடம் மன மாற்றம் உருவாகிவருவதை இவை உணா்த்துகின்றன. இவா்கள் மத்திய தரப்பினராகவும், படித்தவா்களாகவும் இருக்கின்றாா்கள். இருந்தபோதிலும், தமிழா்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும், நியாயமான அரசியல் தீா்வு வழங்கப்பட வேண்டும் என்பதற்கான செயன்முறைகளை முன்னெடுக்கும் போது, சிங்கள இனவாதிகளின் குரலை அடக்குவதற்கான உறுதிப்பாட்டை இவா்கள் கொண்டிருப்பாா்களா?