Home ஆய்வுகள் முள்ளிவாய்க்கால் மண்ணில் காலம் எமக்கு ஒரு பாடத்தை உணர்த்திச் செல்கின்றது | வேல்ஸ் இல் இருந்து...

முள்ளிவாய்க்கால் மண்ணில் காலம் எமக்கு ஒரு பாடத்தை உணர்த்திச் செல்கின்றது | வேல்ஸ் இல் இருந்து அருஸ்

432 Views

வேல்ஸ் இல் இருந்து அருஸ்

முள்ளிவாய்க்கால் மண் காலம் உணர்த்தும் பாடம்

இருபத்தியோராம் நூற்றாண்டின் மிகப்பெரும் இனப்படுகொலை ஒன்று ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவுடன் இடம்பெற்று முடிந்து 13 ஆண்டுகள் கடந்து சென்றுள்ளன. போரில் பல ஆயிரம் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டும், பொருமளவானவர்கள் காயமடைந்து தமது வாழ்நாளின் மிகுதி நாட்களை முழுமையாக வழமுடியாதவர்களாக இன்றும் துன்பப்பட்டு வருகையில், பொருமளவானவர்கள் தங்கள் உறவுகளை பறிகொடுத்துவிட்டு இன்றும் தேடி வருகின்றனர்.

மேற்குலக நாடுகள், ஐக்கிய நாடுகள் சபை, பிராந்திய வல்லரசுகள் என பல தரப்பினர் போலியாக வழங்கிய வாக்குறுதிகளை நம்பி இலங்கை இராணுவத்திடம் சரணடைந்தவர்களும், உறவினர்களால் ஒப்படைக்கப்பட்டவர்களும், பலவந்தமாக கடத்திச் செல்லப்பட்டவர்களும் என அந்த பட்டியலின் நீளம் அதிகம்.

வாக்குறுதி கொடுத்தவர்களும் மறந்து விட்டனர், இலங்கை அரசும் அவர்களை தொடர்ந்து துன்புறுத்துகின்றது, தமிழர் தரப்பினரும் அதனை பெருமளவில் கண்டு கொள்வதில்லை. பல தசாப்பதங்களாக இடம்பெற்ற உரிமைக்கான விடுதலைப் போரின் தற்போதைய நகர்வை கொண்டு நகர்த்தும் சாவி அவர்கள் கையில் தான் இருக்கின்றது என்பதை கூட எம்மில் பலர் மறந்து விட்டோம்.

பூகோள அரசியல் நலன்களுக்காவும், பொருளாதார நலன்களுக்காகவும் பலி கொடுக்கப்பட்ட மற்றும் கொடுக்கப்படும் இனங்களில் ஒன்றாக தமிழ் இனமும் இணைந்துகொண்டுள்ளது.

1804 ஆம் ஆண்டில் ஹெயிட்டியில் 3000 மக்கள் கொல்லப்பட்டதை இனப்படுகொலை என பதிவு செய்த மேற்குலக அமைப்புக்கள், அதன்பின்னர் இதுவரையில் 35 இற்கு மேற்பட்ட இனப்படுகொலைகளை பதிவு செய்துள்ளன. அதில் அண்மையில் இடம்பெற்ற றோஹிங்கியா, சிரியா மற்றும் ஈராக்கில் இஸ்லாமிய அமைப்பினரால் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைகள் என்பனவும் அடக்கம்.

ஆனால் பல தசாப்தங்களாக திட்டமிடப்பட்டு இன, மொழி மற்றும் பண்பாடு ரீதியாக அழிக்கப்பட்ட தமிழ் இனம் மீதான இலங்கை அரசின் இனப்படுகொலைகளை யாரும் இதுவரை இனப்படுகொலை என கூற மறுக்கின்றனர். 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதிப் போரில் கூட பல பத்தாயிரம் மக்கள் கொல்லப்பட்டதாகவும், இலங்கை அரசு அதனை திட்டமிட்டு மேற்கொண்டதாகவும் ஐ.நாவும், மேற்குலக மனித உரிமை அமைப்புக்களும் தொடர்ந்து தெரிவித்துவருகின்றபோதும், அதனை அவர்கள் இனப்படுகொலை என அடையாளப்படுத்துவதற்கு பின்நிற்கின்றனர். நான் மேலே தெரிவித்த 35 இற்கு மேற்பட்ட இனப்படுகொலைகளும் பல நாடுகளால் குறிப்பாக மேற்குலக நாடுகளால் தமது பூகோள மற்றும் பொருளாதார நலன்களுக்காக இனப்படுகொலை என அடையாளப்படுத்தப்பட்டவையே.

இனப்படுகொலைக்கான வரைவிலக்கணம் இரண்டாம் உலகப்போரின் பின்னர் 1948 ஆம் ஆண்டு வரையப்பட்டபோது அது பின்வருமாறு கூறுகின்றது.

The 1948 United Nations Genocide Convention defines the term as crimes committed “with intent to destroy, in whole or in part, a national, ethnical, racial or religious group”.

எனவே தான் 1995 ஆம் ஆண்டு பொஸ்னியாவில் உள்ள சேரபேனிக்காவில் 8000 முஸ்லீம் மக்கள் கொல்லப்பட்டதை நேட்டோ அமைப்பு இனப்படுகொலை என கூறியது. யூகோஸ்லாவாக்கியா மீது போர் தொடுத்து பல இன மக்களுக்கான புதிய தேசங்களையும் உருவாக்கி கொடுத்திருந்தது.

தற்போது உக்ரைனில் இடம்பெற்றுவரும் போரில் புர்ச்சா பகுதியில் 600 பேர் கொல்லப்பட்டதையே அமெரிக்காவின் அதிபர் ஜோ பைடன் இனப்படுகொலை என கூறியதுடன், ரஸ்ய அதிபரை ஒரு போர்க்குற்றவாளி எனவும் தெரிவித்திருந்தார்.

ஹேக்கில் உள்ள அனைத்துலக நீதி மன்றமும் அவசர அவசரமாக தனது பணிகளை ஆரம்பித்திருந்தது. ஆனால் உக்ரைனின் தென் பகுதியில் உள்ள டொன்பாஸ் பிரதேசத்தில் வாழும் ரஸ்ய மொழிபேசும் மக்கள் மீது உக்ரைன் படையினர் கடந்த 8 வருடங்களாக மேற்குலகத்தின் ஆதரவுடன் மேற்கொண்டுவந்த இனப் படுகொலைகளினால் ஏறத்தாள 14000 மக்கள் கொல்லப்பட்டதாகவும் அவர்களை காப்பாற்றவே தான் சிறப்பு படை நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாகவும் ரஸ்யா தெரிவித்துள்ளது.

ஆனால் கடந்த பல தசாப்தங்களாக ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டும், அதனைவிட பல மடங்கு அதிகமானவர்கள் அகதிகளாக்கப்பட்டும், பல இலட்சம் மக்கள் வெளிநாடுகளில் தஞ்சமடைந்தும் உள்ளதுடன், தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களும், அவர்களின் பண்பாடு மற்றும் கலாச்சாரங்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருவதை ஒரு இனப்படுகொலை என்று கூறுவதற்கு யாரும் இதுவரை முன்வரவில்லை.

தற்போதைய இலங்கை அரசுக்கு எதிராக ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகள் பல தீர்மானங்களை கொண்டுவந்தாலும், அதில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டது ஒரு இனப்படுகொலை என்பதை உறுதி செய்யும் எல்லா வழிகளையும் மூடியபின்னர் அதனை ஒரு போர்க்குற்றமாக சித்திரித்து வருகின்றனர். அதாவது தமிழ் இனத்திற்கு எந்தவிதமான நன்மையும் கிடைத்துவிடாதவாறு அவர்கள் சிந்திய குருதியை வைத்து தமது நலன்களை எப்படி எட்டுவது என்பது தான் அதன் நோக்கம்.

அவர்களின் நோக்கம் நிறைவேறினால் வருங்காலத்தில் போர்க்குற்றம் என்ற பதமும் மறைந்து போகலாம். விடுதலைப்புலிகளின் போரியல் உத்திகளும், இலங்கை அரசின் இனவாதமும் தான் தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்கு காரணம் என்றபோதிலும் அதனை கூட தமிழ் இனம் தனது இழந்த உரிமைகளையோ அல்லது தமக்கான நீதியை பெறுவதற்கோ பயன்படுத்த முடியாதவாறு அவர்களின் அரசியல் பலம் சிதைக்கப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் என்பது எமது அழிவின் பாதையாக சென்று முடியவில்லை; மாறாக எமது விடுதலைப்போரை அடுத்த கட்டங்களுக்கு நகர்த்தும் பல பாதைகளை திறந்துவிட்டிருந்தது. அது தான் இன்று தென்னிலங்கையில் எதிரொலிக்கின்றது.

முள்ளிவாய்க்கால் திறந்துவிட்ட பாதைகளை பிராந்திய வல்லரசுகளும், உலகவல்லரசுகளும் பயன்படுத்தி வருகின்றனவே தவிர, அதனை பயன்படுத்தி நாம் அடுத்த கட்டத்திற்கு நகர்வதற்கான உறுதியான அரசியல் மற்றும் இராஜதந்திர அணுகுமுறைகள் எம்மிடம் இல்லை. எனவே தான் இலங்கையின் தற்போதைய நெருக்கடியை கூட நாம் அமைதியாக வேடிக்கை பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

ஒவ்வொரு வருடமும் முள்ளிவாய்காலில் மரணித்த எம்மக்களை நாம் நினைவில் கொள்கின்றோம், அவர்கள் எதற்காக மடிந்தார்கள் என்பதையும் நாம் யாவரும் அறிவோம். ஆனாலும் அவர்களின் இலட்சியத்தை எட்டுவதற்கான செயற்திற் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் தான் எம்மால் நகரமுடியவில்லை.

அதற்கான காரணம் என்ன?

செயற்திறன் மிக்க தலைமைத்துவம் இல்லை என்பது ஒருபுறம் இருக்க, ஒரு இலட்சியத்தை நோக்கி கூட்டாக இயங்கும் பக்குவமும் எம்மிடம் இல்லை.

சரியோ தவறோ ரஸ்யாவை எதிர்த்து நிற்கையில் தமக்கிடையேயான வேறுபாடுகளை மறந்து மேற்குலகம் ஒரு அணியில் நிற்பது என்பது அவர்கள் தமது இலட்சியத்திற்காக எவ்வாறு தமக்கிடையேயான கருத்துவேறுபாடுகளை மறந்து கூட்டாக செயற்படுகிறார்கள் என்பதற்கான மிகச்சிறந்த அண்மைய உதாரணம்.

ஒரு செயற்திறன்மிக்க நல்ல தலைவனை உருவாக்குவது எவ்வளவு கடினமானது என்பதை ஒவ்வொரு வருடமும் காலம் எமக்கு முள்ளிவாய்க்கால் மண்ணில் வைத்து உணர்த்திச் செல்கின்றது.

1 COMMENT

  1. […] முள்ளிவாய்க்கால் மண் காலம் உணர்த்தும் பாடம்: இருபத்தியோராம் நூற்றாண்டின் மிகப்பெரும் இனப்படுகொலை ஒன்று ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவுடன் இடம்பெற்று முடிந்து 13..மின்னிதழை முழுமையாக படிக்க கீழ் உள்ள மின்னிதழ் இணைப்பை அழுத்தவும் https://www.ilakku.org/weekly-epaper-182-may-15/ மேலும் தெரிந்துகொள்ள https://www.ilakku.org/  […]

Leave a Reply

Exit mobile version