ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் :சர்வதேசம் அழுத்தம் கொடுக்கின்றதா? மௌனம் காக்கின்றதா?

ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல்

உண்மையான சர்வதேசம் எனின் ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் இடம்பெறுகின்ற போது அதற்கான பிரதிபலிப்பினைக் காட்டி நீதியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

முல்லைதீவு மற்றும் திருகோணமலை பகுதியில் இராணுவத்தினராலும் குண்டர்களினாலும் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமையினை கண்டித்தும் ஊடகவியலாளர்களை தாக்கியவர்களை கைதுசெய்யக்கோரியும் மட்டக்களப்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கருத்து தெரிவிக்கையில்,  “இந்த நாட்டிலே தமிழ் ஊடகவியலாளர்கள் தாக்கப்படுவதும், கொலை செய்யப்படுவதும் தொடர்ச்சியாக இருந்து வருகின்ற விடயம். தற்போதைய ஜனாதிபதியின் அண்ணன் ஜனாதிபதியா இருந்த காலத்திலும் நாங்கள் பல ஊடகவியலாளர்களைப் பலி கொடுத்திருக்கின்றோம். சுமார் 45 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். அதில் 36 பேர் தமிழ் ஊடகவியலாளர்கள்.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த போது ஊடக சுதந்திரம் மதிக்கப்படும், ஊடகவியலாளர்களுக்கான பாதுகாப்பு வழங்கப்படும் என்ற செய்தியையே சொல்லியிருந்தார்கள். ஆனால் அதன் செயற்பாடுகளைப் பார்த்தால் தொடச்சியாக ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்படுவதும், தாக்கப்படுவதுமாகவுமே இருக்கின்றது.

2009ம் ஆண்டு யுத்தம் மௌனிக்கப்பட்ட காலத்தில் இருந்து சர்வதேசத்திடம் நாம் பலவற்றைத் தெரிவித்திருக்கின்றோம். தற்போது யுத்தமற்ற சூழலொன்று நடைபெறுகின்றது. இதன் போதும் பலவிதமான அச்சுறுத்தல்கள் இருக்கின்றதென்பதை எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட தமிழ்த் தேசியம் சார்ந்த கட்சிகள்   தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம்.

அத்தோடு ஊடகவியலாளர்களும் இது தொடர்பில் தெரியப்படுத்தி இருக்கின்றார்கள். ஆனால் சர்வதேசம் அழுத்தம் கொடுக்கின்றதா? மௌனம் காக்கின்றதா? என்பது தெரியவில்லை. உண்மையான சர்வதேசம் எனின் இவ்வாறான அச்சறுத்தல்கள் ஊடகவியலாளர்களுக்கு இடம்பெறுகின்ற போது அதற்கான பிரதிபலிப்பினைக் காட்டி நீதியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

karunakaran ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் :சர்வதேசம் அழுத்தம் கொடுக்கின்றதா? மௌனம் காக்கின்றதா?

அதே நேரம் இந்த நிகழ்வில் கலந்துகொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

“இந்தப் போராட்டமானது, முல்லைத்தீவில் இராணுவத்தினரால் ஊடகவியலாளர் தாக்கப்பட்டமைக்கும், திருகோணமலையில் ஊடகவியலாளர் தாக்கப்பட்டமைக்கும் மேலாக தற்போதைய அரசாங்கத்தின் முன்னைய ஆட்சியின் போது படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் என அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் நீதி கோரும் ஒரு போராட்டமாகவே இதனைப் பார்க்கின்றோம்.
ஊடகவியலாளர்கள் உண்மையை வெளியில் கொண்டு வருபவர்கள். உண்மையை விரும்பாத இந்த அரசினால் கடந்த காலங்களிலே இவ்வாறு ஊடகவியலாளர்களைப் படுகொலை செய்யப்பட்டிருப்பது மாத்திரமல்லாமல், பயங்கரவாதத் தடைச் சட்டத்தைக் காரணம் காட்டி இந்த நாட்டிலே ஒரு இராணுவ ஆட்சியை அமைப்பதற்கான முயற்சிகள் நடந்து கொண்டிருப்பது கண்கூடாகத் தெரிகின்றது” என்றார்.