நெருப்புடன் விளையாடுவோர் அழிந்து போவார்கள் – அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை

அமெரிக்க பாராளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி சீனாவின் எச்சரிக்கையையும் மீறி தைவானுக்குச் சென்றிருக்கிறார். இது மிகவும் ஆபத்தானது என்று சீனா கூறியுள்ளது.

“நெருப்புடன் விளையாடுகிறார்” என்று சீனா விடுத்திருக்கும் அறிக்கையில் கூறியுள்ளது. நெருப்புடன் விளையாடுவோர் அழிந்து போவார்கள் என்றும் சீனா எச்சரித்துள்ளது.

தைவான் தங்களது ஆட்சிக்கு உள்பட்ட பிரதேசம் என்று சீனா கூறி வருகிறது. ஆனால் அமெரிக்கா இதை ஏற்கவில்லை. மேலும் “நான்சி பெலோசியின் பயணம் சர்ச்சையையோ, மோதலையோ ஏற்படுத்துவதற்கான எந்தக் காரணமும் இல்லை” என்று அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புச் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி கூறியுள்ளார்.

தைவானில் வந்திறங்கிய நான்சி பெலோசி, தனது பயணம் நீண்ட கால அமெரிக்காவின் கொள்கைக்கு இசைவானது என்றும் எந்த நாட்டின் இறையாண்மையையும் மீறவில்லை என்றும் கூறியுள்ளார்.

இந்நிலையில்,”தைவானின் துடிப்பான ஜனநாயகத்தை ஆதரிப்பதில் அமெரிக்காவின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை” மதிப்பதாகவே தனது பயணம் அமைந்திருப்பதாகவும், அமெரிக்க கொள்கைக்கு முரணாக இல்லை என்றும் நான்சி பெலோசி கூயிருக்கிறார்.

இதனிடையே, நான்சி பெலோசியின் தைவான் பயணம் தொடர்பாக விளக்கமளிக்குமாறு அமெரிக்கத் தூதருக்கு சீனா சம்மன் அனுப்பியுள்ளது.

கடந்த 25 ஆண்டுகளில் தைவானுக்குப் பயணம் மேற்கொண்டிருக்கும் மிக மூத்த அமெரிக்க அரசியல்வாதி நான்சி பெலோசி என்பது குறிப்பிடத்தக்கது.