Home காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் “என் மகன் என்னோடு இல்லாத இந்தத் தனிமையே எனக்குக் கனமானது”

“என் மகன் என்னோடு இல்லாத இந்தத் தனிமையே எனக்குக் கனமானது”

428 Views
“என் மகன் என்னோடு இல்லாத இந்தத் தனிமையே எனக்குக் கனமானது” மகனைத் தேடி அலையும் தாய்பாலநாதன் சதீஸ்

இலங்கையில் உள்நாட்டு யுத்தம் மௌனிக்கப்பட்டு, பன்னிரண்டு வருடங்களைக் கடந்த நிலையிலும், இலங்கை அரச படைகள் மற்றும் அதன் புலனாய்வுப் பிரிவுகளால் கடத்தப்பட்டு, கைது செய்யப்பட்டு, காணாமல்  ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்றும் தொடர்ச்சியான முறையில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

ஆனாலும் இலங்கை அரசு, காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாகத் தொடர்ச்சியாகப் பொறுப்புக் கூறுவதைத் தவிர்த்து வருகின்றது.

குடும்பத் தலைவரை,  பிள்ளைகளை, பெற்றோரை வாழ்க்கைத் துணையை என தமது உறவுகளை இவ்வாறு அரச படைகளிடம் இழந்து விட்டு, அவர்கள் மீண்டும் வந்துவிட  மாட்டார்களா? என்ற ஏக்கத்துடன், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர், போராட்டங்களுடன் துயர் நிறைந்த தமது வாழ்க்கையினை நடத்தி வருகின்றனர்  .

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களில் உள்ள பலர், தம் சொந்தங்களைத் தேடியலைந்து, உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டு, மதுப் பழக்கம் போன்றவற்றிற்கும் அடிமையாகி உள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்ட தன் மகன், இன்று வருவான், நாளை வருவான் என்ற நம்பிக்கையோடு,  தன் முதுமையை மறைத்து விட்டு வவுனியா மாவட்டத்தில், தமிழர் தாயகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினரால் ஒழுங்கு செய்யப்பட்டு, நடைபெற்று வரும் போராட்டத்தில்  இரவு பகல் பாராது, தன் மகனுக்காகக் காத்திருப்பவர் தான் அமிர்தம் இலட்சுமி என்ற தாய்.

14வருடங்களுக்கு முன்னர் தனது கணவனை இழந்த  அந்தத் தாய், மன உறுதியோடு காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை  இன்று வரையிலும் தேடி வரும்  நிலையை எப்படிச் சொல்வது?

வயது முதிர்ந்து, உடல் பலமிழந்து, ஆதரித்து ஆறுதல் கூற பெத்த பிள்ளையும் இன்றி, தனிமையில் தள்ளாடும் அந்தத் தாயின்  கோரிக்கை எவரது செவிகளுக்கும் கேட்கவில்லையா?

 “என் மகன் என்னோடு இல்லாத இந்தத் தனிமையே எனக்குக் கனமானது. இந்தத் தனிமையே போதும் இறைவா. என் மகனை என்னிடம் கொண்டுவந்து சேர்த்துவிடு. ஆசையாகப் பெற்றெடுத்த பிள்ளையைப்  பறிகொடுத்து விட்டு 13 வருடங்களாகத் தேடியலையும் என்னை ஏன் யாருமே புரிந்து கொள்ளவில்லை. எனது  போராட்டத்திற்கு ஏன் இன்னும் நீதி கிடைக்கவில்லை?” என்று புலம்பும் அந்தத் தாயின் துயரத்திற்கு எப்போது விடிவு கிடைக்கும்? அவர் தொடர்ந்து நம்முடன் பேசும் போது,

“வவுனியா மாவட்டம் கற்குழி என்னும் கிராமத்தில்  வாழ்ந்து வருகின்றேன். எனது கணவர் 2007 ஆம் ஆண்டு சுகயீனம் காரணமாக இறந்து விட்டார். எனக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் மட்டும் தான். ஒரு பிள்ளை 2004 ஆம் ஆண்டு இந்தியா சென்று விட்டார்.  எனது இரண்டாவது மகன் சத்தியரூபன் தான் எனக்கு ஆறுதலாக இருந்தான்.

2008 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் 19ஆம் திகதி என்னுடைய மகன் இரண்டு நண்பர்களோடு வீட்டில்  இருந்த போது,  நள்ளிரவு பன்னிரண்டு மணியளவில் மின்சாரம் தடைப்பட்டது. அப்போது வெள்ளைவானில் சிலர் வீட்டிற்கு வந்தனர். அவர்களின் கைகளில்  துப்பாக்கிகள் இருந்தன.

அவர்களை  யாரென்றே அடையாளம் கண்டுகொள்ள முடியாதளவிற்கு முகத்தை மூடி மறைத்திருந்தனர். வீட்டினுள்ளே நுழைந்த அவர்கள், என் மகனைப் பிடித்துக் கொண்டு போனார்கள். “என்ர பிள்ளையைக் கொண்டு போகாதையுங்கோ. விடுங்கோ” எனக் கதறி அழுது,  கெஞ்சியும் அவர்கள் கேட்கவில்லை. “என்ர பிள்ளையை ஏன் கொண்டு போறீர்கள்” என வீதி வரையும் கதறி அழுதுகொண்டு ஓடினேன். என்னை இழுத்து வீதியிலே தள்ளிவிட்டு ஒரு பதிலும் கூறாமல் என்  மகனை  வெள்ளை வானில் ஏற்றிக் கொண்டு சென்று விட்டார்கள்.

அதன் பின்னர்  காவல் நிலையத்திற்குச் சென்று தகவல் வழங்கிவிட்டு, மனித உரிமைகள் ஆணையகத்திடமும் முறைப்பாடொன்றைப் பதிவு செய்து, சில மனித உரிமைச் செயற்பாட்டில் உள்ள நிறுவனங்களிற்கும் சென்று “என்ர  மகனைக் கடத்திக் கொண்டு போய் விட்டார்கள்” என முறைப்பாடு  கொடுத்தேன்.

அப்போது  அந்த நிறுவனங்களில் உள்ளவர்கள், “அம்மா உங்கட மகனைத் தேடிப் பார்க்கிறோம்” என்று கூறி அனுப்பினார்கள். “ஆனால் இன்று வரையும் யாருமே என்ர  மகனைப் பற்றி ஒரு தகவலும் தரவில்லை.

என்ர  மகனைக் கடத்திக் கொண்டு செல்லும் போது அவனுக்கு 20 வயது. அன்றிலிருந்து இன்றுவரை 13 வருடங்களாக எனது மகனைத் தேடி வருகின்றேன். இன்று வரையிலும் கண்டுபிடிக்க முடியவில்லை. என்ர மகன் இப்போ எங்கே எப்பிடி இருக்கிறானோ?

என்ர மகனின் ஒரே ஒரு படம் தான் இருந்தது. அதை வீட்டுக்குள்ளே வைச்சிருந்தனான். என்ர உறவுகள் சும்மா என்னுடன் சண்டை போட்டு, என்ர வீட்டையும் எரிச்சிட்டாங்கள். அதிலே மகனின் படமும் வீட்டுக்குள்ளே இருந்து எரிஞ்சு போட்டுது. படம் என்ர கையில இருக்கும் மட்டும் மகனைப் படத்தில  பார்த்து ஆறுதல் அடைஞ்சன்.

இப்போது படமும் இல்லை. என்னிடம் என்ர மகனும் இல்லை. என்ர மகன் எப்படியாவது என்னைத் தேடி வருவான் என்ற நம்பிக்கையில்தான் இன்றுவரை இந்தப் போராட்டப் பந்தலிற்கு வந்து மகனை மீட்கப் போராடிக் கொண்டிருக்கிறன்.” என்று கூறினார்.

இப்படிக் கூறும் போது அந்தத் தாயின் வார்த்தைகள் ஒவ்வொன்றிலும் வலியும், வேதனையும் பின்னிப் பிணைந்ததாகத் தான் இருந்தது. தன்னந்தனியாக நின்று பெற்ற மகனைத் தேடியலையும் இந்த வயோதிபத் தாயின் கதறலுக்கும்  கண்ணீருக்கும்  யார் பொறுப்பு?

காணாமல்  ஆக்கப்பட்டோர் தொடர்பான பிரச்சினை இன்று நேற்று ஆரம்பமாகிய பிரச்சினை இல்லை. 1980ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை நேரடியாகவும், மறைமுகமாகவும் நிகழ்ந்து வரும் ஒரு வகை இன அழிப்புத்தான்.

உலகமே! மனித உரிமை அமைப்புக்களே! தம் உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டு, பல வருடங்கள் ஆன போதும்,   இன்று வருவார்கள், நாளை வருவார்கள் என எத்தனையோ  உறவுகள் வீதிகளிலே உண்ணாமல், உறங்காமல் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

காணாமல் போனவர்களின் நிலைப்பாடு பற்றி இலங்கை அரசாங்கத்திற்கு எடுத்துக் கூறி,  இந்த மக்களுக்குப் பொறுப்புக் கூற வேண்டியதும், நீதியினைப் பெற்றுக் கொடுப்பதும்  அரசியல் தலைமைகள் மற்றும் மனித உரிமை அமைப்புக்களின் கடமையல்லவா?

தந்தை இறப்பு : 2007 ஆம் ஆண்டு

தாய் பெயர் : அமிர்தம் இலட்சுமி

மகன் பெயர்: அமிர்தம் சத்தியரூபன்(கைது  : 2008.11.19)

இடம் – வவுனியா கற்குழி கிமாமம்.

NO COMMENTS

Leave a Reply

Exit mobile version