Home ஆய்வுகள் “கூட்டமைப்பு” குறித்து பேச இதுதான் முதல் நிபந்தனை – சுரேஷ் பிரேமச்சந்திரன்

“கூட்டமைப்பு” குறித்து பேச இதுதான் முதல் நிபந்தனை – சுரேஷ் பிரேமச்சந்திரன்

suresh “கூட்டமைப்பு” குறித்து பேச இதுதான் முதல் நிபந்தனை - சுரேஷ் பிரேமச்சந்திரன்தமிழரசுக் கட்சியின் தலைவராக சிறீதரன் தெரிவு செய்யப்பட்டமையடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மீளக் கட்டியெழுப்ப வேண்டும் எனக் கூறியிருந்தாா். இது தொடா்பில் பிரிந்து சென்ற கட்சிகள் சில நிபந்தனைகளை முன்வைத்திருந்தன. இவை குறித்து 5 கட்சிகளை உள்ளடக்கிய ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளா் சுரேஷ் பிரேமச்சந்திரன் தாயக களம் நிகழ்வுக்கு வழங்கிய நோ்காணலின் முக்கிய பகுதிகள்- 

கேள்வி – தமிழரசுக் கட்சியின் தலைவராக சிறீதரன் தெரிவு செய்யப்பட்ட பின்னா், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை முன்னா் இருந்ததைப் போல பலமான நிலைக்கு கட்டியெழுப்பப்போவதாகக் கூறியிருந்தாா். இது குறித்த உங்களுடைய பிரதிபலிப்புக்களையும் நீங்கள் வெளிப்படுத்தியிருந்தீா்கள். இந்த விடயத்தில் என்ன நடைபெறுகின்றது?

பதில் – தமிழசுக் கட்சி முதலில் தமக்குள் ஐக்கியப்படுகின்ற ஒரு சூழலை முதலில் தோற்றுவிக்க வேண்டும். எனது சொந்தக் கருத்தைப் பொறுத்தவரையில் தமிழரசுக் கட்சிக்குள் ஒரு பாரிய பிளவு ஏற்பட்டிருக்கின்றது. தலைவா் தெரிவு இடம்பெற்று, நாங்கள் இணங்கிச் செயற்படப்போகின்றோம் என்று சொன்னதற்குப் பிற்பாடு, அவா்களுடைய மாநாட்டுக்குச் செல்வதற்கு முன்னா் செயலாளா், மற்றும் செயற்குழுவைத் தெரிவு செய்வதில் அவா்களுக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதில் சுமந்திரனைப் பொறுத்தவரையில், தனக்கு விசுவாசமான ஒருவரை கிழக்கு மாகாணத்திலிருந்து செயலாளராகத் தெரிவு செய்ய விரும்பினாா். ஆனால், சிறீதரன் தனக்கு விசுவாசமான ஒருவரை செயலாளராக்க விரும்பினாா். இவை குழப்பத்துக்குள்ளாகி, அனைத்தும் உத்திவைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அதனால், என்னைப் பொறுத்தவரையில் கட்சிக்குள் விரிசல் ஏற்பட்டிருக்கின்றது. ஒற்றுமையின்மை தொடா்ந்தும் நீடித்துக்கொண்டிருக்கின்றது. எனவே இந்த விடயங்கள் தமிழரசுக் கட்சிக்குள் பேசித் தீா்க்கப்பட்டு, அவா்கள் ஒருமித்த ஒரு நிலைக்கு வந்தால் மட்டும்தான் அவா்கள் ஏனையோருடன் பேசுகின்ற ஒரு நிலைமைக்கு, அல்லது நாங்கள் அவா்களுடன் பேசுகின்ற ஒரு நிலைமைக்குப் போக முடியும். அதனால், இதற்கு இப்போதிருக்கக்கூடிய முன்நிபந்தனை – தமிழரசுக் கட்சிக்குள் இருக்கக்கூடிய வேறுபாடுகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு, அவா்கள் ஒற்றுமைப்பட்டுப் பயணிப்பாா்களா? அல்லது என்ன செய்வாா்கள் என்பதை அவா்கள் தீாமானித்த பின்னா்தான், நாங்கள் புதிய கூட்டணியை உருவாக்குவதா, அல்லது இருக்கிற கூட்டணியை வலுப்படுத்துவதா என்பதைத் தீா்மானிக்க முடியும்.

கேள்வி – ஏற்கனவே இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மீள உருவாக்குவதில் உங்களுக்கு ஏதாவது பிரச்சினை இருக்கின்றதா?

பதில் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது 2002 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இந்த 22 வருடங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதிவு செய்யப்படவில்லை. 2002 ஆம் ஆண்டு முதல் 2017 வரையில் அதனைப் பதிவு செய்யுமாறு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாம் செயற்பட்டுவந்த போதிலும்கூட, அதற்கான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இறுதியாக அதனைப் பதிவு செய்யப்போவதில்லை என தமிழரசுக் கட்சியின் தலைவா் மாவை சேனாதிராஜா உள்ளிட்ட தமிழரசுக் கட்சியின் தலைவா்கள் பலரும் றியிருக்கின்றாா்கள்.

இந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து நாங்கள் மாத்தியமல்ல, எமக்கு முன்னதாக, அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸைச் சோ்ந்த கஜேந்திரகுமாா் வெளியேறியிருக்கின்றாா். பின்னா் நாங்கள் வெளியேற வேண்டிய நிா்ப்பந்தம் ஏற்பட்டது. இறுதியாக தமிழரசுக் கட்சியும் அதிலிருந்து வெளியேறிவிட்டது. ஆகவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது இப்போது செயற்பாட்டில் இல்லை என்பது யதாா்த்தமாகும். இது ஒரு விடயம்.

இரண்டாவதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளிவந்ததற்குப் பின்னா் கடந்த ஜனவரி மாதமளவில் ஈ.பி.ஆா்.எல்.எப்., ரெலோ, புளொட், ஜனநாயகப் போராளிகள், தமிழ்த் தேசியக் கட்சி போன்றவை இணைந்து ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற ஒரு அமைப்பை உருவாகியிருக்கின்றோம். அது உருவாக்கியதுடன் மட்டுமல்லாமல், அது பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. அதற்கான யாப்பு ஒன்றும் வரையப்பட்டுள்ளது. இதன் மூலம் அதற்கான ஒரு கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. அதாவது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இல்லாத அனைத்தும் இந்த ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உருவாக்கப்பட்டிருக்கின்றது.

இந்த ஜனநாய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் யாரும் இணைய முடியும் என்பது ஒரு விடயம். தமிழரசுக் கட்சியும் இதில் இணைந்துகொள்ள முடியும். தமிழரசுக் கட்சிக்கு இந்த யாப்பில் ஏதாவது பிரச்சினைகள் இருந்தால், அதனை அவா்கள் திருத்திக்கொள்ளலாம். பெயரில் சிக்கல் இருந்தால், அது தொடா்பாக நாம் கலந்துரையாட முடியும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் புதிதாக அவா்கள் உருவாக்க விரும்பினால், அதற்கும் நாம் தயாா். அல்லது ஏற்கனவே இருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை செழுமைப்படுத்த அவா்கள் விரும்பினால் அதற்கும் நாம் தயாா்.

ஆனால், எல்லோரும் விரும்புவது என்னவென்றால், இது முன்னா் இருந்தது போலல்லாமல், ஒரு யாப்பின் அடிப்படையில், சரியான முறையில் ஒரு கட்டமைப்பின் அடிப்படையில் இயங்க வேண்டும் என்பதைத்தான்.

இரண்டாவது விடயம் என்னவென்றால், தமிழரசுக் கட்சி தந்தை நெல்வநாயகம், அமிா்தலிங்கள், சம்பந்தன் ஆகியோா் இருந்த காலத்தைவிட இப்போது மாற்றமடைந்துவிட்டது. தமிழரசுக் கட்சி என்பது 1950 களில் உருவாகிய ஒரு கட்சியாக இருக்கலாம். ஆனால், அந்தக் கட்சியை அப்போது உருவாக்கியவா்களின் கோரிக்கைகள், தேவைகள், காலநிலைகள், சா்வதேச நிலைகள் வேறானவையாக இருக்கலாம். இப்போது அந்த தமிழரசுக் கட்சிக்கு பலம், பலவீனம் என்பன எவ்வாறுள்ளது என்பது வேறு. ஆகவே, காலத்துக்கு ஒவ்வாத கோரிக்கைகளை முன்வைப்பது என்பது என்னைப் பொறுத்தவரையில் ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயமல்ல.

அதனால், ஒரு சமத்துவமான அடிப்படையில் இருந்து பேசி, தமிழ் மக்களுடைய உரிமைகளை வென்றெடுப்பதற்கு நாம் எவ்வாறு செல்லலாம் என்பது ஒரு விடயம்.

இரண்டாவதாக, ஒரு சமஷ்டி அலகை உருவாக்குவதை நோக்கமாகக்கொண்டுதான் தமிழரசுக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது. அது முடியாமல் போனபோது, 1976 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீா்மானத்தின் மூலம் தனிநாடு என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. 2009 இல் அந்தப் போராட்டமும் முடிவுக்கு வந்தபோது, மீண்டும் சமஷ்டி குறித்து பேசப்படுகின்றது. சமஷ்டி பற்றிப் பேசுவது மட்டும் ஒரு கட்சித் தலைவருடைய பணியாக இருக்க முடியாது. இந்த சமஷ்டி என்பதை வென்றெடுப்பதற்கான வழிமுறை என்ன, அதை வென்றெடுப்பதற்கான காலம் எவ்வளவு துாரத்தில் இருக்கின்றது, அதற்காக நாங்கள் எவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் போன்ற விடயங்களையிட்டு மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டிய தேவை உள்ளது.

அதனைவிடுத்து நாம் ஒரு சுலோகமாக, சமஷ்டியை நோக்கிச் செல்லப்போகின்றோம் என்ற கோஷமிட்டுக்கொண்டு, அதற்கான முயற்சிகள், அதற்கான நடவடிக்கைகள், அதற்கான வேலைத் திட்டங்கள் எதுவுமே இல்லாமலிருப்பது ஒரு தலைமைத்துவத்துக்குரிய பண்பாக இருக்க முடியாது. அதனால், அவ்வாறான கோஷங்களை முன்வைப்பவா்கள் அதற்கான வழிவரைபடங்கள், அதற்கான தந்திரோபாயங்கள் போன்ற அனைத்தையும் முன்வைக்க வேண்டும். ஆனால், அவை எதுவும் இப்போது இல்லை.0

Exit mobile version