Tamil News
Home ஆய்வுகள் ஊடகத்துறையும் திலீபனும்

ஊடகத்துறையும் திலீபனும்

தியாக தீபம் திலீபனின் ஏழாம் நாள் உண்ணா நோன்பு நாளின் நினைவுகளுடன், அவர் தோழன் ராஜனின் கருத்துக்கள் இவ்வாறு அமைந்தது.

இன்று ஏழாம் நாள். திலீபன் ஒரு ஆள் உதவி இல்லாமல் சரிந்து படுக்கவோ நிமிர்ந்து படுக்கவோ எழும்பி இருக்கவோ பலம் அற்றவராக, உயிர்ப்பும் மனவலிமையும் உள்ளவராக காட்சி தந்தார். ஆறாம் நாள் கிட்டண்ணாவின் அம்மா வந்து சென்ற பின் இன்று என்மனதில் கிட்டண்ணாவும் திலீபனுமாக முன்னெடுத்த பல நடவடிக்கைகள் மனக்கண் முன் வந்தது. கிட்டண்ணாவும் திலீபனும் யாழ் மாவட்டத்தில் இணைந்து அன்றைய காலத்தில் செய்த இராணுவ அரசியல் பணி, யாழ் குடாநாட்டை கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது மட்டுமன்றி அனைத்து மாவட்டங்களிலும் போராட்டங்கள் தொடர்வதற்கும் வீச்சுடன் வளர்ச்சியடைவதற்கும் வழிசமைத்தது. கிட்டண்ணா கண்டிப்பான அப்பாவாகவும் திலீபன் அரவணைக்கும் அம்மாவாகவும் இருந்ததை இன்று வாழும் அன்றைய நண்பர்கள் நினைவு கூருவார்கள். ஆனால் இன்று கிட்டண்ணா தொலைவில் இருக்கும் போது திலீபன் உண்ணா நோன்பை தொடங்கியிருந்தார்.

இறுதியில் இருவருமே இந்திய சதிக்கு பலியானமையும் அவர்கள் சாவிலும் ஒருவித ஒற்றுமையை காட்டி நின்றது.

இன்று காலை யோகி அண்ணா இந்தியா ரூடே. சஞ்சிகை நிருபர். தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிருபர் படப்பிடிப்பாளருடன் வந்திருந்தார். இந்திய அதிகாரிகளின் பேச்சுவார்த்தைப் பற்றிய நிகழ்வுகளை பகிர்ந்தார். எந்த முன்னேற்றமும் இல்லை என்பது புரிந்தது. பத்திரிகையாளர்களை காணும்போது ஆரம்பத்தில் திலீபன் ‘களத்தில்’ பத்திரிகையை தொடங்கி தானே எழுதியும் தானே விஜயா அச்சகத்தில் குலம் அண்ணா, குலேந்திரன் அண்ணாக்களுடன் நீண்ட நேரம் செலவழித்து நேர்த்தியாக அச்சிட்டு முதல் பத்திரிகையை கொண்டு வந்து கிட்டண்ணாவிடம் கொடுத்து கலந்துரையாடி மகிழ்ந்ததும், போராளிகள் வீரமரணம் அடையும் போது அவர்கள் படங்களுடன் சுவரொட்டி தயாரிக்க புளொக் செய்வதற்காக தவம் அண்ணா வீட்டில் தவம் கிடந்து அதை செய்வித்து அச்சகம் கொண்டு ஓடி போஸ்டர் அச்சிட்டு குடா நாடு முழுவதும் ஏரியா பொறுப்பாளர்களிடம் கொடுத்து ஒட்ட வைத்ததும் மீட்டிப் பார்க்கிறேன்.

திலீபன் எல்லோருக்கும் போஸ்டர் அச்சிட்டார். துண்டு பிரசுரம் எழுதினார். பத்திரிகை ஆசிரியராக இருந்தார். அவருக்கே நாங்கள் இவ்வளவும் செய்யவேண்டிய நிலைமைக்கு ஆளாகப்போகின்றோம் என்று நினைக்கும்போது அந்த உணர்வுகளை வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை.

இந்த வேளையில் குடாநாட்டு பத்திரிகை ஆசிரியர்கள் திலீபனை வந்து பார்த்து சென்றதை நினைக்கும்போது, பத்திரிகையாளர் பங்கு இந்த போராட்டத்தின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியதை யாரும் மறக்க முடியாது. உதயன் பத்திரிகை ஆசிரியர் கானமயில்நாதன், செய்தி ஆசிரியர் வித்தியாதரன், ஈழமுரசு ஆசிரியர் கோபு ஐயா, செய்தி ஆசிரியர் காக்கா அண்ணா, ராதையன் அண்ணா, ஈழநாடு மாணிக்கம் அண்ணா, யோகநாதன் அண்ணா, முரசொலி ஆசிரியர் திருச்செல்வம் அண்ணா, செய்தி ஆசிரியர் பிறேம், தட்சணாமூர்த்தி எல்லோரும் தங்கள் கடமைகளை தீலிபனோடு சேர்ந்து ஆற்றியவர்கள். இதில் பலபேர் ஆயுதங்கள் மெளனிக்கப்பட்ட போதும் பேனா என்ற ஆயுதத்தால் இன்றும் திலீபனின் நாட்டுப் பற்றிற்காகவும் இனத்தின் உரிமைக்காகவும் பேனா என்ற ஆயுதத்தை பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். அன்றைய காலகட்டத்தில் இடம்பெற்ற அவலங்களை உடனுக்குடன் வெளிக்கொணர்ந்த பத்திரிகை படப்பிடிப்பாளராக கடமையாற்றியவர்களின் பணிகளையும் நினைத்து பார்க்கும் போது, எப்படி எல்லாம் கனவுகளுடன் செயற்பட்டோம் ஏன் எங்கள் கனவும் திலீபன் கனவும் இன்று வரை நிறைவேறாது தொடர்கதையாக நீண்டு செல்கிறது? என்று மனம் அங்கலாய்க்கும்.

களத்திலும் புலத்திலும் சூழமைவுக்கு ஏற்ப நெறிபிறழாத ஊடக தர்மத்தின் பாற்பட்டு துணிந்து எம் உரிமைக்குரலை உயர்த்தி இம்மக்களுக்கு வழிகாட்டி, உலகத்துக்கு எம் வலியையும் வேதனையையும், மன உறுதியையும், உரிமையையும் உரக்க உரைக்க வேண்டிய பொறுப்பு எம் ஊடகங்களுக்கு உண்டு. இதன் மூலம் எம் இளைய தலைமுறையை, அடக்கு முறைகளுக்கு எதிராக போராடவும் நீதிக்காக குரல் கொடுக்கவும், உறுதியுடன் எழுந்துநிற்க கூடிய திலீபன்களாக உருவாக்க வேண்டியது இன்றைய காலத்தின் தேவையாகிறது.

Exit mobile version