Home செய்திகள் “உரம் இன்றி உழவு இல்லை”-மட்டக்களப்பில் போராட்டம்

“உரம் இன்றி உழவு இல்லை”-மட்டக்களப்பில் போராட்டம்

உரம் இன்றி உழவு இல்லை

மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் பசளையின்றி சிரமங்களை எதிர்நோக்கியுள்ள நிலையில், மட்டக்களப்பில் உள்ள இராஜாங்க அமைச்சரும், மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும் மௌனமாகயிருப்பதாகவும் தங்களுக்கான பசளையினைப் பெற்றுக்கொள்ள அனைவரும் நடவடிக்கையெடுக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் பசளை விடயம் தொடர்பில் அவர்களின் தற்காலப் பிரச்சினைக்குத் தீர்வு கோரி மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

“உரம் இன்றி உழவு இல்லை”விவசாயிகளின் தற்கால பிரச்சினைக்கு தீர்வுகோரி கண்டனப் போராட்டம் மட்டக்களப்பில் இன்று முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி, கொக்கட்டிச்சோலை, ஆயித்தியமலை, வந்தாறுமூலை,கிரான் ஆகிய பகுதிகளில் உள்ள கமநல அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக இந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

அதே நேரம் விவசாயிகளுடன் இணைந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த கண்டன போராட்டத்தினை மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் முன்னெடுத்துவருகின்றது.

உரமின்றி உழவர் நிலம் இல்லை, உடனே உரத்தைத் தா, விவசாயிகளின் வாழ்க்கையில் விளையாடாதே அரசே, சேதனைப் பசளை பிரவேசத்தால் விளைச்சல் குறைந்தால் நட்டஈடு தருவாயா அரசே?, முடக்காதே முடக்காதே எமது விவசாயத்தினை முடக்காதே,அழிக்காதே அழிக்காதே எமது பொருளாதாரத்தினை அழிக்காதே,திடீர் சேதனம் விவசாயத்தினை முடக்கும் போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை கண்டன போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஏந்தியிருந்தனர்.

விவசாயத்திற்கு சேதனைப்பசளை முக்கியம்தான் என்றாலும் அதனை உடனடியாக செய்யமுடியாது என தெரிவித்த விவசாயிகள், படிப்படியாகவே அவற்றினை செய்யமுடியும் எனவும் ஆனால் அரசாங்கம் முழுமையாக பசளையினை முடக்கியதாகது விவசாயிகளை கடுமையாக பாதித்துள்ளதாகவும் விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

கடந்த காலத்தில் 1000ரூபாவுக்கு பெற்றுக்கொள்ளப்பட்ட பசளை இன்று பத்தாயிரம் ரூபாவுக்கு பெறுவது கடினமான சூழ்நிலை காணப்படுவதாகவும் இது விவசாயத்தில் கடுமையான பாதிப்புகளை விவசாயிகளுக்கு ஏற்படுத்தும் எனவும்  விவசாயிகள் சுட்டிக்காட்டினார்கள்.

Exit mobile version