Home ஆய்வுகள் “பாராளுமன்றத்தில் இளையோர் அதிகரிக்க வேண்டும்”: அனைத்துலகப் பாராளுமன்றத்தின் மையக் கருத்து – சூ.யோ. பற்றிமாகரன்

“பாராளுமன்றத்தில் இளையோர் அதிகரிக்க வேண்டும்”: அனைத்துலகப் பாராளுமன்றத்தின் மையக் கருத்து – சூ.யோ. பற்றிமாகரன்

ஐ.நா.வின் இவ்வாண்டுக்கான அனைத்துலகப் பாராளு மன்றத்தின் மையக் கருத்து ஈழ மக்களுக்கு முக்கியத்துவம்

யூன் மாதம் 30ஆம் திகதி ‘அனைத்துலகப் பாராளுமன்றத்’ தினமாக ஐக்கிய நாடுகள் சபையால் கொண்டாடப்பட்டு வருகிறது.

1889ஆம் ஆண்டு யூன் மாதம் 30ஆம் திகதி, உலகின் பாராளுமன்றங்கள், மக்களாட்சி, சமத்துவம், மனித உரிமைகள், வளர்ச்சிகள்,  அமைதி என்பவற்றை முன்னெடுக்கும் ‘பாராளுமன்றத்தினர்கள் இடையிலான உட்தொடர்புக்கான அனைத்துலக ஒன்றியம், தொடங்கப்பட்ட வரலாற்று நினைவேந்தல் நாளாக இந்த அனைத்துலகப் பாராளுமன்றத் தினம் அமைகிறது.

2021ஆம் ஆண்டுக்கான அனைத்துலகப் பாராளுமன்றத்தின் மையக் கருத்தாக “நான் பாராளுமன்றத்தில் இளையோர் அதிகரிக்க வேண்டும் – என்பதற்கு ஆம் எனச் சொல்கிறேன்” என்பது அறிவிக்கப்பட்டுள்ளது. உலகின் 193 நாடுகளில் 79 ஈரவைகளையும், 114 ஓரவையையும் கொண்ட 272 பாராளுமன்றக் கட்டிடங்களில் 46000 பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்னெடுக்கப்படும் மக்களாட்சியைக் கொண்டதாக இன்றைய உலகின் பாராளுமன்ற ஆட்சி முறை காணப்படுகிறது. இப்பாராளுமன்றப் பிரதிநிதிகளில் 25வீதமானவர்களே பெண் உறுப்பினர்கள். இருபது வயதுக்கும் முப்பத்தொன்பது வயதிற்கும் இடைப்பட்டவர்களாக உள்ள இன்றைய உலகில், 40வயதுக்கு உட்பட்ட பாராளுமன்றப் பிரதிநிதிகள் 17.5 வீதமானவர்களே. 30 வயதுக்கு உட்பட்டவர்கள் 2.2 வீதமாகவும் 1 வீதத்தினரே இளம் பெண்களாகவும் உள்ளனர்.images 79 “பாராளுமன்றத்தில் இளையோர் அதிகரிக்க வேண்டும்”: அனைத்துலகப் பாராளுமன்றத்தின் மையக் கருத்து - சூ.யோ. பற்றிமாகரன்இன்றைய உலகம் கோவிட் 19இற்குப் பின்னரான புதிய சவால்களை எதிர் கொள்ள வேண்டிய உலகமாக உள்ளது. கோவிட் காலத்தில் ‘டிஜிட்டல்’ தொழில் நுட்பமே வர்த்தகம், கல்வி வேலைகள் தொழில்கள் உட்பட வாழ்வின் அனைத்துத் துறைகளையும் தொடர்பறாது தொடர்வதற்கு உதவியுள்ளது. இது இளையோர்கள் ‘டிஜிட்டல்’ தொழில் நுட்பத்தின் வழி உலகை மீளவும் கொண்டு வருவதற்கான தேவையினைத் தெளிவாக வெளிப்படுத்தி உள்ளது. இந்நிலையில் இளையோர் மக்களின் பிரதிநிதிகளாக அதிக அளவில் சட்ட ஆக்கங்களையும், முக்கிய தீர்மானங்களையும் நிறைவேற்றும் மக்கள் ஆட்சியின் அதிகார மையமாக உள்ள பாராளுமன்றத்தில் இடம்பெற வேண்டும் என்கிற வேண்டுகோள் காலத்தின் தேவையாக முன்வைக்கப்பட்டுள்ளது.

மேலும் பாராளுமன்றப் பிரதிநிதி என்பவர் தங்களுக்கான மக்கள் ஆட்சியினை உறுதிப்படுத்த, சமத்துவத்தைப் பேண, மனித உரிமைகளை நிலை நாட்ட, வளர்ச்சிகளை மேம்படுத்த, பாதுகாப்பான அமைதி வாழ்வை மக்கள் பெறுவதற்காக உழைக்க, மக்களால் சுதந்திரமான தேர்தலில் அளிக்கப்படும் வாக்குகள் மூலம் தெரிவாகின்றவர். சுருக்கமாகச் சொன்னால் மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட, மக்களோடு நின்று  மக்களுக்காப் பணியாற்ற வேண்டிய பொறுப்புள்ள ஒருவர். அதுவும் எந்தக் கொள்கையை, கோட்பாட்டை ஒருவர் தான் பிரதிநிதியானால் நிறைவேற்றுவேன் என மக்களிடம் இருந்து அவர்களின் வாக்கைப் பெற்றாரோ அந்தக் கொள்கையை, கோட்பாட்டை நிறைவேற்ற வேண்டிய உறுதியுடன் செயற்பட வேண்டியவர் பாராளுமன்றப் பிரதிநிதி.

பாராளுமன்றப் பிரதிநிதி மக்களின் விருப்புக்களை, தேவைகளை வெளிப்படுத்தி அவற்றை மக்கள் அடைய உழைக்கும் மக்களின் பிரதிநிதி மட்டுமல்ல, மக்களின் இறைமையைப் பகிர்ந்து அவர்களுக்கான அரசை அமைக்கவும், பேணவும் தீர்மானம் எடுத்துச் செயற்பட வேண்டிய பொறுப்பும் கடமையும் உரிமையும் உள்ளவர்.

பாராளுமன்றப் பிரதிநிதி மூலமாகவே மக்களில் இருந்து என்றுமே பிரிக்க முடியாத தன்னாட்சி உரிமை உள்ளக தன்னாட்சி உரிமையாக  தமக்கான ஒரு அரசை அமைத்துத் தங்களுக்கான பாதுகாப்பை, அமைதியை, வளர்ச்சியை அளிக்கும் வரை அந்த அரசுக்குத் தம்மை ஆளும் உரிமையை மக்கள் அளிக்கின்றனர்.

உள்ளகத் தன்னாட்சி உரிமையினைப் பகிர்வதால் உருவாக்கப்படும் அரசாங்கத்தின் மக்கள் பிரதிநிதிகளின் வாக்களிப்பு மூலம் சட்டவாக்கத்தைச் செய்யும் பாராளு மன்றமும், மக்களின் பிரதிநிதி களிலிருந்து உருவாக்கப்படும் அமைச்சரவையால் நிர்வாகமும், சட்டத்தின் முன் அனைவரும் சமமெனச் சட்ட ஆட்சியை முன்னெடுத்துச் சட்டத்தை அமுல் நடாத்தும் நீதி முறைமையும் மக்களாட்சியில் உள்ளது.

சட்டவாக்கம், நிர்வாகம், சட்ட அமுலாக்கம் என்பதற்கான தனித்தனி கட்டமைப்புக்களை அரசாங்கம் கொண்டிருத்தலை வலுவேறாக்கம் என்பர். வலுவேறாக்கம் இன்றி வலுக்கள் ஒருவரிடத்தில் குவிக்கப்பட்டு சர்வாதிகார ஆட்சியாகப் பாராளுமன்ற ஆட்சி மாறுவதைத் தடுக்க வேண்டிய பொறுப்பும் பாராளுமன்றப் பிரதிநிதிகளுக்கு உண்டு. இதனாலேயே பாராளுமன்றப் பிரதிநிதிதான் மக்களாட்சியின் அடித்தளம் என்பர்.

ஒரு அரசாங்கம் தனது குடிகள் எனப்பட்டவர்களுக்கு பாதுகாப்பான அமைதியையும், வளர்ச்சியையும் அளிக்கும் நல்லாட்சி மனித உரிமைகள் வளர்ச்சிகள் என்பவற்றை வழங்க மறுக்கும் பொழுது, அந்தக் குடிகளின் பிரதிநிதிகளான பாராளுமன்ற உறுப்பினர்கள், அந்தக் குடிகள் உலகின் குடிகளாகவும் உள்ளனர் என்ற முறையில் உலகிலுள்ள நாடுகளையும் உலக அமைப்புகளையும் தங்கள் மக்களுக்கு உதவுமாறு மக்கள் பிரதிநிதிகள் கோருவதையே வெளியக தன்னாட்சி உரிமையின் பிரயோகம் என்பர். ஒரு மக்கள் இனத்தின் பிரச்சினை உலக மயமாக்கப்படுவதற்கு உதவ வேண்டிய கடமை உள்ளவர் அம் மக்கள் இனத்தின் பிரதிநிதி;.

தனது பாராளுமன்றத் தொகுதியின் ஏழை மக்கள், கைவிடப்பட்ட மக்கள், மூத்தோர், உடல்வலுக் குன்றியவர்கள், பெண் தலைமைத்துவக் குடும்பங்கள், யுத்தத்தால் பாதிக்கப்பட்டோர், நீதி கருச்சிதைவு செய்யப்படுவதால் துடிதுடித்து வாழ்பவர்கள், வலுக் கட்டாயமாகக் காணாமல் ஆக்கப்பட்டோர் போன்ற அதீத மனிதாய தேவைகளில் உள்ளவர்களை இனங்கண்டு, அவர்களுக்கான விடுதலைக்கு உதவுவது பாராளுமன்றப் பிரதிநிதியின் தலையாய நோக்காக அமைய வேண்டும்.

இவற்றை எல்லாம் சரிவர நிறைவேற்றுவதற்கு இளையோர்கள் பாராளுமன்றப் பிரதிநிதிகளாவது அதிகரிக்க வேண்டும் என்பதே ஐக்கிய நாடுகள் சபையினரின் இன்றைய அறிவிப்பின் தேவையாகிறது.

ஈழத்தமிழ் மக்களைப் பொறுத்த மட்டில், மேற் சொன்ன பாராளுமன்றப் பிரதிநிதிக்குரிய பண்புகளுடன் பல தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் செயற்படாமல்,  அரசாங்கத்திடம் மண்டியிட்டும், மன்றாடியும் ஈழத் தமிழர்களின் அரசியல் உரிமைகளைப் பெறும் கையாலாகாத தனமுள்ளவர்களாக இருந்து வருகின்றனர். இது சிறீலங்காப் பாராளுமன்றக் கொடுங்கோன்மை மூலம் ஈழத் தமிழர்களை பல்வேறு முறைகளில் இன அழிப்புச் செய்கின்றனர்.

இதிலிருந்து விடுபடுவதற்கு ஈழத் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களிடை இளவயதினரான தமிழ் ஆண்களும் பெண்களும் பாராளுமன்ற உறுப்பினர்க்குப் போட்டியிட வேண்டும். அங்கு மட்டுமல்ல புலம்பதிந்து வாழும் நாடுகளிலும் இந்நாடுகளின் பாராளுமன்றத் தேர்தல்களில்  ஈழத் தமிழ் இளையோர்  ஆண்களும் பெண்களும் போட்டியிட வேண்டும்.

ஈழத்தமிழ் இளையோர் ஒவ்வொரு நாட்டிலும் தமக்கான மாதிரிப் பாராளுமன்றம் ஒன்றை உருவாக்கி, அதனைப் பாராளுமன்றம் ஒன்று எவ்வாறு நடைபெறுகிறதோ அவ்வாறு அதே மாதிரி அமைப்பில் நடைமுறைப்படுத்த வேண்டும். இது பாராளுமன்ற ஆட்சி முறைக்கான மிகச்சிறந்த பயிற்சியாகவும், நாளாந்தம் அரசியல் அறிவில் வளர்வதற்கான மிகச் சிறந்த முயற்சியாகவும் அமையும். ஐக்கிய நாடுகள் சபையின் இளையோர் பாராளுமன்ற அமைப்பை மாதிரியாகக் கொண்டு இதனைக் கட்டமைக்க முடியும். ஈழத்து இளையோர்க்காக அமைக்கப்படும் இத்தகைய அமைப்பு, காலப் போக்கில் ஈழத் தமிழர்களுக்கான சபையாகவும் பரிணமித்து, அவர்களுக்கான பொது வேலைத் திட்டங்களை முன்னெடுத்து, ஈழத் தமிழர்களின் அரசியல் உரிமைகளைப் பெற உதவும்.

 

Exit mobile version