உலகின் காட்டுவளம் மிக விரைவாக அழிந்து வருகின்றது

காட்டுவளம் மிக விரைவாக அழிந்து வருகின்றது

பிரித்தானியாவின் நிலப்பரப்புக்கு இணையான நிலப்பரப்பு கொண்ட காட்டு வளங்கள் கடந்த வருடம் உலகில் அழிக்கப்பட்டுள்ளதாக காட்டு வளங்களை அவதானிக்கும் அனைத்துலக அமைப்பு தெரிவித்துள்ளது.

கோப்-26 மாநாட்டில் உலகத்தலைவர்கள் மேற்கொண்ட தீர்மானத்திற்கு எதிராகவே நடவடிக்கைகள் அமைந்துள்ளன. 253,000 சதுர கி.மீ பரப்பளவுள்ள காடுகள் கடந்த வருடம் அழிக்கப்பட்டுள்ளன. அதாவது ஒவ்வொரு நிமிடமும் 10 உதைபந்தாட்ட மைதானங்கள் அளவுள்ள காடுகள் அழிக்கப்படுகின்றன.

2020 ஆம் ஆண்டும் இதே அளவான காடுகள் அழிக்கப்பட்டிருந்தன. 2019 ஆம் ஆண்டுக்கு பின்னர் காடு அழிப்பு மிகவும் வேகமாக இடம்பெற்று வருகின்றது.

காடுகளின் அழிவு உலகின் வெப்பநிலையை அதிகரிப்பதுடன், காலநிலை மாற்றத்திற்கும் காரணமாகின்றது. கடந்த ஆண்டு அழிக்கப்பட்ட மழைக்காடுகள் 2.5 கிகா தொன் அளவுள்ள கார்பன் டை ஒக்சைட்டுகளை வழிமண்டலத்தில் இருந்து உள்வாங்கக்கூடியவை. இது இந்தியாவில் ஒரு வருடம் பயன்படுத்தப்படும் எரிபொருட்களில் இருந்து வெளியேறும் கார்பன் டை ஒக்சைட்டுகளின் அளவுக்கு இணையானது.

மனிதர்களின் நடவடிக்கையினால் தான் காடுகள் அதிக அழிவுகளை சந்தித்து வருகின்றன. மிருகங்களை வளர்த்தல், பயிர்செய்கை போன்ற காரணங்களுக்காகவே காடுகள் அழிக்கப்படுகின்றன.

கொங்கோ மற்றும் பொலிவியா போன்ற நாடுகளிலேயே அதிக காடுகள் அழிக்கப்படுகின்றன.

Tamil News