கரையொதுங்கிய உடல் கூட காணாமலாக்கப்பட்டுள்ளது-பாராளுமன்றத்தில் சிறீதரன் எம்.பி.

கரையொதுங்கிய உடல் கூட.
இலங்கையால் பாகிஸ்தானுக்கு தானமாக வழங்கப்பட்ட 35000 கண்களும் சிங்களவர்களுடையதா தமிழர்களுடையதா? அவ்வாறு கண்களை தானம் செய்தவர்களின் பெயர் பட்டியல் எங்கே? எனகே கேள்வி எழுப்பிய தமிழ் தேசியக்கூட்டமைப்பின் யாழ் மாவட்ட எம்.பி. யான எஸ்.சிறிதரன் ஆட்கள் காணாமலாக்கப்பட்ட நிலையில் தற்போது யாழ் கடற்கரையோரத்தில் கரையொதுங்கிய உடல் கூட காணாமலாக்கப்பட்டுள்ளது என்றார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிதி அமைச்சு ,பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்ட செயற்படுத்துகை அமைச்சு ,நிதி மூலதன சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சு,சமுர்த்தி உள்ளக பொருளாதார ,நுண்நிதிய ,சுயதொழில் மற்றும் தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இது தொடர்பில் கேள்வி எழுப்பிய சிறிதரன் எம்.பி. மேலும் கூறுகையில்,

பாகிஸ்தானில் இலங்கையரான பிரியந்த குமார அடித்துக்கொலை செய்யப்பட்டபோது அங்குள்ள கண் வைத்தியர் ஒருவர் கூறியதாக ஊடகங்களில் ஒரு செய்தி வெளியானது. இலங்கையிலிருந்து 35000 கண்கள் தானமாக பாகிஸ்தானிலுள்ள வைத்தியசாலைகளுக்கு அனுப்பப்பட்டதாக பாகிஸ்தானின் கண் சிகிச்சை நிபுணர் ஒருவர் கூறியுள்ளார் என்பதே அந்த செய்தி. இது உண்மையா பொய்யா ?இவ்வாறு 35000 கண்கள் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றால் அவை யாருடைய கண்கள்? அவ்வாறு வழங்கப்பட்டிருந்தால் அவ்வாறு வழங்கியவர்களின் பெயர் பட்டியல் எங்கே? இந்த கண்கள் சிங்களமக்களுடைய கண்களா அல்லது தமிழ் மக்களினுடைய கண்களா?யாருடைய கண்கள் அவ்வாறு தானம் செய்யப்பட்டன?இது பொய்யென்றால் பாகிஸ்தானின் ஒரு பிரபல வைத்தியர் ஏன் பொய் கூறுகின்றார் ?இவையெல்லாம் எமக்கு முன்னாலுள்ள பெரிய கேள்விகள்.

கடந்த 27 ஆம் திகதி வல்வெட்டித்துறை ,மணல்காடு ஆகிய இரு இடங்களிலும் கடற்கரையோரமாக இரு உடல்கள் கரையொதுங்கியுள்ளன. 28 ஆம் திகதி நெடுந்தீவில் ஒரு உடல் கரையொதுங்கியுள்ளது.30ஆம் திகதி கட்டைக்காட்டில் ஒரு உடல் கரையொதுங்கியுள்ளது.2 ஆம் திகதி பருத்தித்துறை சக்கோட்டையில் ஒரு உடலும் வெற்றிலைக்கேணியில் ஒரு உடலுமாக இரு உடல்கள் கரையொதுங்கியுள்ளன.இவ்வாறு 6 மனித உடல்கள் கரையொதுங்கியுள்ளன.

இதுவரை இந்த உடல்கள் யாருடையவை? இவர்கள் எந்த நாட் டை சேர்ந்தவர்கள்?என்ற எந்த விடயமும் வெளியில் வரவில்லை. இதில் நெடுந்தீவில் கரையொதுங்கிய உடல் யாழ் வைத்தியசாலையில் இப்போதும் வைக்கப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை மணல்காடு, சக்கோட்டையில் கரையொதுங்கிய 3 உடல்கள் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. கட்டைக்காட்டில் கரையொதுங்கிய உடல் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. வெற்றிலைக்கேணியில் கரையொதுங்கிய உடல் எங்கேயென யாருக்கும் தெரியாது.

மருதங்கேணி பொலிஸார் அந்த உடலை சென்று பார்த்துள்ளனர் . ஊடகங்களில் அந்த உடல் பற்றிய செய்தி வெளிவந்துள்ளது.ஆனால் இப்போது அந்த உடலை காணவில்லை. எவ்வாறு ஒரு கரையொதுங்கிய உடல் காணாமல்போகும்?அதனை யார் எங்கே கொண்டு சென்றனர் என்பது தெரியாதுள்ளது. கரையொதுங்கியுள்ள உடல்கள் யாருடையவை என்றும் தெரியவில்லை. கரையொதுங்கிய உடல் காணாமலும் போயுள்ளது.இது பல்வேறு சந்தேகங்களைக்கொடுக்கின்றது.

சரணடைந்தவர்கள், காணாமல்போனவர்களை இப்போது வைத்துத்தான் கொலை செய்து கடலில் வீசியுள்ளார்களா? அந்த உடல்கள்தான் கரையொதுங்கியுள்ளனவா?என்று கூட காணாமல் போனவர்களின் உறவுகளினால் சந்தேகங்கள் தெரிவிக்கப்படுகின்றன. இந்த கண்தானம் மற்றும் கரையொதுங்கும் உடல்களினால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். அரசு பதிலளிக்க வேண்டும். இதற்கான பதிலை கொடுக்காதவரை மக்களிடம் அச்சம் அதிகரிக்கும். எனவே இந்த உயர்ந்த சபை ஊடாக கரையொதுங்கும் உடல்கள், காணாமல்போன உடல் மற்றும் 35000 கண் தானம் தொடர்பில் உரிய பதிலை எதிர்பார்க்கின்றோம். விசாரணையை கோருகின்றோம் என்றார்.

ilakku Weekly Epaper 159 December 05 2021 Ad கரையொதுங்கிய உடல் கூட காணாமலாக்கப்பட்டுள்ளது-பாராளுமன்றத்தில் சிறீதரன் எம்.பி.