இலங்கையிலுள்ள விவசாயிகளுக்கு 9,300 மெட்ரிக் தொன் உரத்தை வழங்கியது அமெரிக்கா

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, அனுராதபுரம், திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் மொனராகலை மாவட்டங்களில் உள்ள 193,000 சிறு நெல் விவசாயிகளுக்கு விநியோகிப்பதற்காக அமெரிக்கா 9,300 தொன் யூரியா உரத்தை விவசாய அமைச்சிடம் உத்தியோகபூர்வமாக கையளித்துள்ளது. 

யு.எஸ். ஏஜென்சி ஃபார் இன்டர்நெஷனல் டெவலப்மென்ட் (யு.எஸ்.ஏ.ஐ.டி) நிதியுதவியுடன் FAO ஆல் கொள்வனவு செய்யப்பட்ட இந்த உரமானது, USAID-ஆதரவு உர உதவியின் முதல் ஏற்றுமதியாகும், மேலும் எதிர்வரும் மாதங்களில் நாடு முழுவதும் உள்ள ஒரு மில்லியன் விவசாயிகளை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“அமெரிக்க மக்களால் வழங்கப்படும் இந்த உரமானது, இலங்கை விவசாயிகளுக்கு எதிர்வரும் மாதங்களில் எண்ணற்ற இலங்கை குடும்பங்களுக்கு உணவளிக்க உதவும்” என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் கொழும்பு துறைமுகத்தில் நடைபெற்ற கையளிப்பு நிகழ்வில் தெரிவித்தார்.

“உரம் மாத்திரம் இலங்கையின் அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்யாது என்பதை நான் அறிவேன், ஆனால் இந்த சவாலான நேரத்தில் இலங்கை மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் அமெரிக்காவின் மிகப் பெரிய முதலீடு மற்றும் ஆதரவின் ஒரு அம்சமே இந்த உதவியாகும். மொத்தத்தில், கடந்த ஆண்டில் சிறு வணிகங்களுக்கான புதிய உதவி மற்றும் மேலதிக கடன்களில் $240 மில்லியனுக்கும் அதிகமான தொகையை நாங்கள் அறிவித்துள்ளோம் – நாங்கள் அதைத் தொடர்வோம். இன்றைய உரம் போன்ற உதவிகள், இலங்கை மக்களுக்கு அமெரிக்காவின் நல்லெண்ணத்தையும் உண்மையான அர்ப்பணிப்பையும் காட்டுகின்றன என்றார்