அமெரிக்காவின் சமச்சீர் அற்ற நீதி

அமெரிக்காவின் சமச்சீர் அற்ற நீதி

அமெரிக்காவின் சமச்சீர் அற்ற நீதி: ராஜ் ராஜரத்தினம் எழுதியிருக்கும் Uneven Justice: The Plot to Sink Galleon என்ற நூல் உலகளவில் பெரும் எதிர்ப்பார்ப்பைக் கிளறி விட்டிருக்கிறது.

ராஜ் ராஜரத்தினம் யார்? அவருக்கும் தமிழீழ நடைமுறை அரசிற்குமான தொடர்பு என்ன? என்பதை கீழே இணைத்துள்ள பதிவில் இதுவரை வாசிக்காதவர்கள் வாசித்துத் தெரிந்து கொள்ளலாம்.

நூலில் அவர் இது குறித்து எதுவும் எழுதவில்லை என்பதை நூல் மதிப்புரைகளினூடாக அறிய முடிகிறது. அதைப் புரிந்து கொள்ளவும் முடிகிறது. அதைப் பேசி அவர் மீண்டும் சிறை செல்ல முடியாதல்லவா!

ஆனால் அவர் காலத்தின் பின்னாவது இந்த சதி வலையமைப்புக் குறித்து வெளி வரும் என்று நம்புவோம்.

ராஜ் ராஜரத்தினம் கைதும், தமிழீழ நடைமுறை அரசின் அழிவும்!

அமெரிக்க பங்குச்சந்தை அதிபர் ராஜ் ராஜரத்தினம் நீண்ட கால சிறைவாசத்தை அடுத்து சில நாட்களுக்கு முன்பு விடுவிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்கா தமிழீழ நடைமுறை அரசை அழிக்க எடுத்த ஒரு முக்கிய நடவடிக்கைகளில் ஒன்றுதான் ராஜ் ராஜரத்தினத்தை ஊழல் குற்றவாளியாக்கியமை.

தமிழின அழிப்பு திடீரென்று நடந்த நிகழ்வு அல்ல. அது 2001 இலிருந்து படிப்படியாக திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட பல நிகழ்வுகளின் கூட்டு விளைவு.

எமது கண்ணுக்கு தெரிந்த நிகழ்வுகள் மட்டுமல்ல எமது அறிவுக்கு புலப்படாத பல விடயங்களும் அதன் பின்னணியில் இருந்ததை நாம் பிற்பாடுதான் அறிய முடிந்தது.

புரிந்துணர்வு உடன்படிக்கையினூடாக தமிழர் சேனைகளை அழிப்பதனூடாக தமிழீழ நடைமுறை அரசை அழித்தொழிக்கும் நயவஞ்சக நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட இணைத்தலைமை நாடுகள் – குறிப்பாக அமெரிக்கா மற்றும் இந்தியா சிங்களத்துடன் இணைந்து வரைந்த திட்டம்தான் புரொஜெக்ட் பெக்கன்.( Project Beacon)

புலத்தில் தமிழ்த்தேசிய செயற்பாடுகளை முடக்குதல், புலிகளின் அனைத்துலக ஆயுத மற்றும் அரசியல் கட்டமைப்புக்களை உடைத்தல், தாயகத்தில் புலிகளை மக்களிடம் இருந்து வேறுபடுத்துதல், இறுதியாக புலிகளை படைத்துறை ரீதியாக அழித்தொழிப்பு செய்தல் ஆகிய நடவடிக்கைகளை முன்னெடுக்கும் தமிழர் தேசத்திற்கு எதிரான அனைத்துலக நகர்வின் தாக்குதல் திட்டத்தின் பெயர்தான் ” புரொஜக்ட பெக்கன்”

எங்கேயோ அமெரிக்காவில் இருந்த ராஜ் ராஜரத்தினம் என்ற பங்கு சந்தை தொழிலதிபர் திடீரென்று ஊழல் வழக்கில் அமெரிக்காவில் FBI ஆல் குற்றவாளியாக்கப்படுகிறார். விடயம் தெரியாதவர்களுக்கு இது ஒரு சாதாரண விடயம்.
ஆனால் நாம் மொத்தமாக அழித்தொழிக்கப்படப் போகிறோம் என்பதை கட்டியம் கூறிய நிகழ்வு இது.
இது புராஜெக்ட் பெக்கானின் ஒரு பகுதி.

இதன் ஆழ அகலம் தெரியாத யாராலும் இது என்றுமே புரியப்படாது. அதை இங்கு விளக்க இடமும் காணாது. நாள் முழுக்க இருந்து எழுதினாலும் எழுதித் தீராத அரசியல் அது.

புலிகளின் பெரும் பகுதி பணம் இவரது பங்குச் சந்தையினூடாகவே தமிழீழ நடைமுறை அரசின் சுழற்சிக்குட்பட்டிருந்தது.

விளைவு தமிழின அழிப்பிற்கான நேரம் வந்த போது இவர் குற்றவாளியாக்கப்பட்டார்.

எனவே இலங்கை/ இந்தியாவில் மட்டுமல்ல அமெரிக்காவிலும் ‘தீர்ப்பு’ களின் – ‘நீதி’ களின் பின்னணியில் மிகப் பெரிய அரசியல் இருக்கின்றன. – அதுவும் “உலக” அரசியல்.

புரிந்துணர்வு உடன்படிக்கை காலத்தில் புலிகள் மேற்குலகத்திற்கு அடிபணிந்து போயிருந்தால் ராஜ் ராஜரத்தினம் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டிருக்க மாட்டார்.
யோசிக்கத் தலை கிறுகிறுக்கும் தியரி இது.

வண்ணத்துப்பூச்சி விளைவு போன்ற பல நுண்ணதிர்வுகள் தமிழின அழிப்பில் கடந்து சென்றதை இப்போது புரிந்து கொள்ளலாம்.

ஆனால் இது எதுவும் தெரியாமல் புலிகளையே குற்றவாளிகளாக முன்னிறுத்தும் அற்பர்களால் நிரம்பி வழிகிறது தமிழ் அரசியல் பரப்பு.

தலைவர் போராடும் தேசிய இனங்கள் சார்ந்து எத்தகைய ஒரு பகடையாட்டத்தை ஆடினார் என்பதும்/ அவர் ஏன் நந்திக்கடல் நோக்கி நகர்ந்தார் என்பதற்குமான வரலாற்று சான்றுகள் இவை.

சிலரின் சந்தேகத்திற்காக இந்த பின்னிணைப்பு.

ராஜ் ராஜரத்தினம் உத்தியோகபூர்வமாகக் கைது செய்யப்பட்டது ஒக்டோபர் 2009.
ஆனால் அவரது நிறுவனத்தையும் அவரையும் குற்றவாளிகள் என எப்பிஐ விசாரணையை முடுக்கிவிட்டு கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்து முடக்கியது 2006 இல். நீண்ட விசாரணையின் பின் 2009 இல் கைது செய்தார்கள்.

ராஜ் ராஜரத்தினத்தின் பங்குச் சந்தை தமிழீழ நடைமுறை அரசின் நிதி சுழற்சிக்கான ஒரு குறிப்பிடத்தக்க மையமாக இருந்த போதும் அது வெளிப்படையான ஒன்றல்ல.

ஆனால் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்தாகி புலிகள் உள்ளக/ வெளியக அனைத்து நிகழ்ச்சி நிரலையும் நுட்பமாக ஊடறுத்து தமிழீழ நடைமுறை அரசை அங்கீகரிக்க வேண்டிய ஒரு நிர்ப்பந்தத்தை தோற்றுவிக்க முயன்றார்கள்.

அதன் ஒரு கட்டமாக 2004 இல் சுனாமி மீள் கட்டுமான நிதியை ராஜ் ராஜரத்தினத்திடமிருந்து தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் உத்தியோகபூர்வ வங்கிக் கணக்கினூடாக பெற்றுக் கொண்டார்கள். தொடர்ந்து 2005 /2006 இலும் அமெரிக்காவில் பதிவு பெற்ற ராஜ் ராஜரத்தினத்தின் வங்கிக் கணக்கிலிருந்து பல மில்லியன் டொலர்கள் தமிழீழ நடைமுறை அரசின் ஒரு அங்கமான தமிழர் புனர் வாழ்வுக் கழகத்தின் வங்கிக் கணக்கிற்கு வந்து சேர்ந்தன.

இது புராஜெக்ட் பெக்கான் கூட்டணிக்கு – குறிப்பாக அமெரிக்காவிற்குப் பேரதிர்ச்சி.

ஏனென்றால் சுனாமி கட்டுமான நிதிக்கான உதவி வழங்கலுக்காக ஒரு மாநாடு அப்போது அமெரிக்காவில் நடந்த போது புலிகளின் நடைமுறை அரசிற்கு அங்கீகாரம் வழங்குவது போல் ஆகிவிடும் என்பதற்காக புலிகளுக்கு விசா வழங்க மறுத்திருந்தது அமெரிக்கா.

இதுவே புரிந்துணர்வு உடன்படிக்கையில் புலிகளின் சம தரப்பு அங்கீகாரத்தைக் குலைத்த முதல் சம்பவம்.

அமெரிக்கா இவ்வளவு நுட்பமாகக் காய் நகர்த்திய போதும் புலிகள் அதை முறியடித்து அமெரிக்காவில் பதிவு பெற்ற வங்கிக் கணக்கினூடாக உத்தியோகபூர்வமாக நிதியைக் கையாளத் தொடங்கிய போது ராஜ் ராஜரத்தினம் இலக்கு வைக்கப்பட்டு குற்றவாளியாக்கப்பட்டார்.

அவர் கைது செய்யப்பட்டது 2009 இலேயே ஒழிய அவர் 2006 இலேயே குற்றவாளியாக இனங் காணப்பட்டு விசாரணை வளையத்திற்குள் வந்து விட்டார்.

எழுதித் தீராத கதைகள் இவை.

இதை இன்னும் அழுத்தமாகப் புரிந்து கொள்ள புலிகள் மீதான மேற்குலகின் தடை சிறந்த ஒரு உதாரணம்.

புலிகள் இலங்கையின் அரச தலைவர்களைப் படுகொலை செய்ததாகக் சிங்களம் குற்றம் சுமத்திய போதோ/ ராஜீவ் காந்தியைக் கொலை செய்ததாக இந்தியா குற்றம் சுமத்திப் புலிகளை தடை செய்த போதோ மேற்குலகம் புலிகளைத் தடை செய்யவும் இல்லை, யாரையும் கைது செய்யவும் இல்லை.

ஆனால் ஒரு சமாதான காலத்தில் புலிகளைத் தடை செய்த மேற்குலகம் ஒரு நாடு மிச்சமில்லாமல் புலிகளின் பிரதிநிதிகளை (தமிழர் ஒருங்கிணைப்புக் குழு) தொடர்ச்சியாக கைது செய்து சிறையில் தள்ளினார்கள்.

தமிழீழ நடைமுறை அரசை அழித்தொழிக்கும்
புராஜெக்ட் பெக்கானின் மிக முக்கியமான நடவடிக்கை இது.

இவையெல்லாம் வேலுப்பிள்ளை பிரபாகரனை மண்டியிட வைக்கும் என்று அவர்கள் நம்பினார்கள்.

ஒரு விடுதலைப் போராட்டத்தை/ ஒரு தேசிய இனத்தின் இறைமையை தமது நிகழ்ச்சி நிரலுக்குள் சிக்க வைத்து அடிபணிய வைப்பதனூடாக ஒரு புதிய வரைபடத்தை வரைய முயன்ற உலக பயங்கரவாதத்தின் சதியை உணர்ந்து, அடி பணிய மறுத்து அவர் வேறு ஒரு வரைபடத்தை வரைந்தார்.

அதுதான் போராடும் தேசிய இனங்களின் வருகையை எதிர்பார்த்து நந்திக்கடலில்
காத்துக் கிடக்கிறது.

பரணி கிருஷ்ணரஜனி ilakku Weekly Epaper 159 December 05 2021 Ad அமெரிக்காவின் சமச்சீர் அற்ற நீதி