Home ஆய்வுகள் இனவழிப்பை மறுக்கும் போக்கு-Srebrenica Genocide

இனவழிப்பை மறுக்கும் போக்கு-Srebrenica Genocide

இனவழிப்பை மறுக்கும் போக்கு-Srebrenica Genocide தமிழில்: ஜெயந்திரன்

இனவழிப்பை மறுக்கும் போக்குஇனவழிப்பை மறுக்கும் போக்கு-Srebrenica Genocide

சேர்பிய படைகளால் பல நாட்களாக, திட்டமிடப்பட்ட வகையில் 8000க்கும் அதிகமான பொஸ்னிய முஸ்லிம்கள் மற்றும் சிறுவர்கள் கொல்லப்பட்ட, ஸ்றபிறெனிற்சா (Srebrenica Genocide) இனவழிப்பில் உயிர்பிழைத்தவர்கள் அந்தப் படுகொலையின் 26வது வருடத்தைத் தற்போது நினைவுகூர்ந்திருக்கிறார்கள்.

பாரிய மனிதப் புதைகுழிகளில் ஏற்கனவே புதைக்க ப்பட்டிருந்த 19 பொஸ்னிய முஸ்லிம்களின் எச்சங்கள், தோண்டியெடுக்கப்பட்டு, டீஎன்ஏ சோதனைகள் மூலம் அவை அடையாளங் காணப்பட்டு, பிரேதப் பெட்டிகளில் வைக்கப்பட்டு, அந்தக் கிழக்கு பொஸ்னிய நகரத்தின் ஓரத்தில் கொல்லப் பட்டவர்களுக்காகக் கட்டப்பட்ட துயிலும் இல்லத்தில் புதைக்கப் பட்டிருக்கின்றன.

படுகொலை நடைபெற்ற அந்தக் காலப் பகுதியில் அருகிருந்த வொல்யாவிற்சா (Voljavica) என்ற கிராமத்தைச் சேர்ந்த, ஒன்பது வயது நிரம்பிய வாஹிட் சுல்ஜிச் (Vahid Suljic) தனது குடும்பத் தாருடன் ஸ்றபிறெனிற்சாவில் அடைக்கலம் தேடியிருந்தார்.

இனவழிப்பிலிருந்து அவரால் உயிர் பிழைக்க முடிந்தது. ஆனால் அவர் நேரடியாகப் பார்த்த விடயங்கள் அனைத்தும் அவருக்கு உளவியல் ரீதியான பாதிப்பை அதிகமாக ஏற்படுத்தி யிருக்கின்றன.

சுல்ஜிச் தனக்கு நடந்தவற்றை விபரித்ததுடன், சேர்பியர்கள் இனவழிப்பைத் தொடர்ந்து மறுத்து வரும் சூழலிலும், இன முரண்பாடுகள் மீண்டும் தோன்றியிருக்கும் சூழமைவிலும் இனவழிப்பு மீண்டும் ஒருமுறை நடைபெறுவதற்கான வாய்ப்பு இருக்கின்றது என்று அவர் அல்ஜசீராவுக்குத் தெரிவித்தார்.

ஸ்றபிறெனிற்சாவுக்குத் தப்பிச் செல்லல்

பெரும் சேர்பியா, பெரும் குறொஏசியா ஆகிய இரு நாடுகளைப் புதிதாக அமைக்க முயன்ற முறையே சேர்பிய, குறொஏசிய படைகளின் தாக்குதலுக்கு 1992க்கும் 1995க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் பொஸ்னியாவும் ஹேர்சோகொவினாவும் உள்ளானது. இப்போரில் கிட்டத்தட்ட ஒரு இலட்சம் பொது மக்கள் கொல்லப் பட்டார்கள்.

பொஸ்னியாவில் இருந்து, சேர்பியப் படைகள் அங்கிருந்த சேர்பியர் அல்லாதவர்களை அப்பிரதேசத்திலிருந்து இனச்சுத்திகரிப்பு செய்யும் நோக்குடன், 1992ம் ஆண்டின் வசந்தகாலத்தில் அங்குள்ள கிராமங்கள், நகரங்கள், பெருநகரங்கள் என்பவற்றின் மேல் தாக்குதலைத் தொடுத்தார்கள்.

சேர்பியாவைச் சேர்ந்த துணை இராணுவக் குழுக்களினால் பொஸ்னிய முஸ்லிம் மக்கள் சித்திரவதை செய்யப் படுவதாகவும், கொல்லப் படுவதாகவும் வோல்யா விற்சாவுக்கு அருகே சேர்பிய எல்லையில் அமைந்திருந்த சித்திரவதை முகாம்களுக்குக் கொண்டு செல்லப் படுவதாகவும் 1992ம் ஆண்டின் மே மாதத்தில் முதன் முதலாக அறிய வந்த போது, சுல்ஜிச்சின் குடும்பத்துக்குப் பிரச்சினைகள் ஆரம்பமாகின.

தங்களுக்கும் இதே ஆபத்து காத்திருக்கிறது என்பதை உணர்ந்துகொண்ட சுல்ஜிச் குடும்பம், பக்கத்தில் உள்ள காட்டுக்குத் தப்பிச்சென்று, அங்கு இரண்டு வாரங்கள் மறைந்திருந்தார்கள் அந்த நேரத்தில் சேர்பிய துணை இராணுவக் குழுக்கள் அவர்களது கிராமத்துக்கு வந்து, தப்பிச்செல்ல முடியாது அங்கேயே வீடுகளில் தங்கியிருந்த முதியோரை அங்கே உள்ள ஒரு வீட்டில் வைத்து உயிருடன் எரித்துக் கொன்றதாக சுல்ஜிச் கூறினார்.

தமது உயிரைப் பாதுகாத்துக் கொள்வதற்காக 250 பொஸ்னிய மக்களைக் கொண்ட ஒரு குழு அங்கிருந்து 15 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்திருந்த ஸ்றபிறெனிற் சாவுக்குக் காடுகள் ஊடாக ஒரு நீண்ட நடைப் பயணத்தைத் தொடங்கினார்கள். அந்த நேரம் ஸ்றபிறெனிற்சா பொஸ்னிய இராணு வத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது.

அவர்களது நடைப் பயணத்தின் போது, சேர்பியப் படைகள் இரு இடங்களில் அவர்களை இடை மறித்து இயந்திரத் துப்பாக்கிகளின் உதவியுடன் அவர்கள் மேல் தாக்குதலைத் தொடுத்தார்கள். ஒவ்வொரு இடத்திலும் 30-50 வரையிலான சுடுநர்கள் இருந்ததாக சுல்ஜிச் சொன்னார். 60-70 வரையிலான பொஸ்னியர்கள் அந்த இடை மறிப்புத் தாக்குதல்களின் போது கொல்லப்பட்டார்கள்.

அவரது 10 வயது நிரம்பிய சகோதரி உட்பட அவரது குடும்பத்தினர் அனைவரும் அருகே இருந்து அருவியில் ஒழிந்திருந்து பின்னர் இரவானதும் ஸ்றபிறெனிற்சாவுக்கு தங்களது பயணத்தைத் தொடர்ந்தார்கள்.

“காட்டு விலங்குகள் வேட்டையாடப் படுவது போல நாங்கள் வேட்டையாடப் பட்டோம். பல இடங்களில் எங்களைக் கொல்ல அவர்கள் முயன்றார்கள்” என்று சுல்ஜிச் மேலும் கூறினார்.

ஸ்றபிறெனிற் சாவைச் சுற்றிவர இருந்த இடங்களிலுள்ள மக்கள் அனைவரும் பாதுகாப்புக்காக அங்கே வந்து கொண்டிருந்ததை ஏற்கனவே அறிந்திருந்த சேர்பியப் படைகள், ஸ்றபிறெனிற்சாவை எல்லாத் திசைகளிலிருந்தும் முற்றுகைக்கு உள்ளாக்கி யிருந்தன. இதற்காக அவர்கள் நீண்ட நாட்களாகவே ஆயத்தம் செய்திருந்தார்கள்.

‘பாதுகாப்பான இடம்’ என்று அறிவிக்கப்பட்டு, ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு வழங்கப் பட்டிருந்த போதிலும் ஸ்றபிறெனிற்சாவில் இனவழிப்பு அரங்கேறியது. கிட்டத்தட்ட 50000 மக்கள் அங்கே அடைக்கலம் தேடி யிருந்தார்கள்.

இனவழிப்பு (Srebrenica Genocide) இனவழிப்பை மறுக்கும் போக்கு-Srebrenica Genocide

ஸ்றபிறெனிற்சாவின் ‘பாதுகாப்பான பிரதேசம்’, 1995, யூலை 11ம் தேதி சேர்பிய படைகளின் கைகளுக்குள் வீழ்ந்தது. முன்னர் மின்கலத் தொழிற் சாலையாக இருந்து பின்னர் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஐக்கிய நாடுகள் இராணுவப் படையணியின் தளமாக விளங்கிய கட்டடத் தொகுதியின் உள்ளும் புறமும் அடைக்கலம் தேடியிருந்த ஆயிரக் கணக்கான மக்களில் சுல்ஜிச்சும் அவரது குடும்பமும் இருந்தனர்.

ஐக்கிய நாடுகளின் இராணுவத்தினர் அணிவதைப் போன்ற சீருடை தரித்த சேர்பியப் படைகள், அத்தளத்துக்கு உள்ளே வந்து அங்கே இருந்தவர்களைக் கண்காணித்ததை சுல்ஜிச் நேரடியாகவே பார்த்திருக்கிறார்.

இரவானதன் பின்னர் மக்கள் தூங்கிக் கொண்டிருந்த போது, சேர்பியப் படைகள் ஆண்களையும் பெண்களையும் வேறு வேறாக அவர்கள் குடும்பங்களிலிருந்து பிரித்துக் கொல்வதற்காக அவர்களைக் கொண்டு சென்றார்கள். பெண்களையும் சிறுமியரையும் தளத்துக்கு வெளியே கொண்டு சென்று வன்புணர்வுக்கு உள்ளாக் கினார்கள்.

சேர்பியப் படைவீரர்கள் செய்தவற்றைத் தடுத்து நிறுத்துவதற்கு நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த வீரர்கள் எந்தவிதமான முயற்சியையும் மேற் கொள்ளவில்லை என்று சுல்ஜிச் சுட்டிக் காட்டினார்.

சேர்பியப் படை வீரர்கள் தாங்கள் எவற்றையெல்லாம் செய்ய விரும்பினார்களோ அவற்றை யெல்லாம் செய்தார்கள். அந்தத் தளம் அவர்களது முழுமையான கட்டுப்பாட்டில் இருந்தது.

தங்களுக்கு உதவிசெய்யுமாறு ஒவ்வொரு இரவும் பொஸ்னிய ஆண்கள் கூக்குரலி டுவதைக் கேட்கக் கூடியதாக இருந்தது என்று சுல்ஜிச் நினைவு கூர்ந்தார்.

அந்தத் தளத்துக்கு அருகே இருந்த வயலின் நடுவே ஓடிய ஆற்றில் தண்ணீர் எடுப்பதற்கு பகல் நேரங்களில் சுல்ஜிச் சென்ற பொழுதெல்லாம்  காட்டில் கூக்குரல் சத்தங்களைக் கேட்டதாக சுல்ஜித் மேலும் தெரிவித்தார்.

“தலைகள் துண்டிக்கப்பட்ட உடல்களை அங்கே நான் கண்டேன்… நான் பார்த்தவற்றை வார்த்தைகளில் விபரிப்பது கடினமானது”.

ஸ்றபிறெனிற்சாவில் (Srebrenica Genocide) கொல்லப்பட்ட 350 பொஸ்னியர்களின் சாவுக்குரிய பொறுப்பில் ஒரு பகுதி நெதர்லாந்துக்கும் இருக்கிறது என்று நெதர்லாந்து உச்ச நீதிமன்றம் 2019ம் ஆண்டில் தீர்ப்பு வழங்கியிருந்தது.

மூன்று நாட்களுக்குப் பின்னர் அந்தத் தளத்துக்குப் பேருந்துகள் வந்து சேர்ந்தன. “விடுவிக்கப்பட்டு பொஸ்னிய இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த துஸ்லா நகரத்துக்குப் பெண்களும் சிறுபிள்ளைகளும் கொண்டு செல்லப்படுவார்கள்” என்று நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த இராணுவ வீரர்கள் அவர்களுக்கு அறிவித்தார்கள். “அதே நேரம் 11 வயதிலிருந்து 77 வயது வரையான ஆண்கள் அனைவரும் இன்னொரு தொகுதி பேருந்துக்காகக் காத்திருக்க வேண்டும்” எனவும் அவர்கள் கூறினார்கள்.

சுல்ஜிச்சின் தந்தையின் சகோதரர் சுல்ஜிச்சை பேருந்துக்குக் கூட்டிச் சென்றார். சேர்பிய இராணுவ வீரர்கள் பலவந்தமாக அவர்களைப் பிரித்தெடுத்தார்கள். அதன் பின்னர் அவரை சுல்ஜிச் ஒருபோதுமே பார்க்கவில்லை.

துஸ்லாவுக்கு (Tusla) நாங்கள் பயணித்துக் கொண்டிருந்த போது, பிடிக்கப்பட்ட ஆண்கள் அனைவரும் கொல்லப் படுவதற்காகக் கொண்டு செல்லப்படுவதை நாங்கள் பார்த்தோம். போர்க் காலத்திலும் அதற்கு முன்னரும் நான் சேர்ந்து விளையாடிய எனது அயலவர்கள் பலரும் அவர்கள் நடுவில் இருந்ததை நான் அவதானித்தேன். கடும் பீதியும் உளவியல் தாக்கமும் அவர்கள் முகங்களில் தெரிந்தன.

பெண்களும் சிறுவர்களும் துஸ்லாவுக்கு சென்றடைந்ததன் பின்னர் ஒரு ஏதிலிகள் முகாமில் அவர்கள் தங்கி, தமது உறவுகள் பற்றிய செய்திக்காகக் காத்திருந்தார்கள்.

சுல்ஜிச்சின் தந்தையால் அங்கிருந்து ஒருவாறு தப்பிச்செல்ல முடிந்தது. காடுகளுக்கு ஊடாக நடந்து சென்று, துப்பாக்கி ரவைகளுக்கும் இடைமறித்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் களுக்கும் தப்பி, பசி, பட்டினி போன்றவற்றை அனுபவித்து ஏழு நாட்களுக்குப் பின்னர் உயிர் தப்பிய ஒரு குழுவில் சுல்ஜிச்சின் தந்தையும் ஒருவர் ஆக இருந்தார்.

சுல்ஜிச்சின் தந்தையின் சகோதரங்களின் உடல்கள் வெவ்வேறு மனிதப் புதைகுழிகளில் கண்டெடுக்கப் பட்டிருப்பதாக இரண்டு வருடங்களுக்கு முன்னர் சுல்ஜிச்சின் குடும்பத்துக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.

கொல்லப்படும் நேரத்தில் 28 வயது நிரம்பியிருந்து சுல்ஜிச்சின் தந்தையின் சகோதரரான  வாடெற் சுல்ஜிச்சின் (Vahdet Suljic) உடல் எச்சங்கள் 30 கிலோ மீற்றர் தூர இடைவெளிக்குள் அமைந்திருந்த மூன்று புதைகுழிகளிலிருந்து கண்டெடுக் கப்பட்டிருந்தன. ஏற்கனவே இரண்டு தடவைகள் அவரது உடல் எச்சங்களை அவர்கள் அடக்கம் செய்திருந்தார்கள். ஆனால் அவரது உடலின் அரைப்பகுதிக்கு மேல் இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை.

வெறும் மூன்று நாட்களுக்குள் சுல்ஜிச்சின் தந்தையின் சகோதரர்கள், ஒன்றுவிட்ட சகோதரர்கள், மற்றும் உறவினர்கள் உட்பட தமது குடும்பத்தின் அரைவாசிப் பேரை சேர்பியப் படைகள் கொன்றுவிட்டதாக சுல்ஜிச் தெரிவித்தார்.

ஸ்றபிறெனிற்சா இனவழிப்பு ஏற்க மறுத்தல்

ஏழ்மை தாண்டவமாடும் ஸ்றபிறெனிற்சா நகரில் பல்லாயிரக் கணக்கான சேர்பியர்களும் பொஸ்னியர்களும் தொடர்ந்தும் வாழ்ந்து கொண்டிருக் கிறார்கள். எந்தவொரு எதிர் காலமும் அற்ற ‘இறந்து விட்ட ஒரு நகரம்’ (dead city)  என அந்த நகரத்தை சுல்ஜிச் விபரித்தார். சுல்ஜிச் தற்போது வளைகுடா நாடான கட்டாரில் வசித்து வருகிறார்.

இனவழிப்பு (Srebrenica Genocide) நடந்தேறி, 26 வருடங்கள் கடந்து சென்று விட்ட இத்தருணத்தில், ஹேக்கில் (Hague) அமைந்துள்ள பன்னாட்டு நீதிமன்றில் பல தடவைகள் உறுதிப்படுத்தப்பட்ட இனவழிப்பு தொடர்பான வரலாற்று உண்மைகளைப் பெருமளவில் மறுத்து வருகின்ற சேர்பியர்களை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இனவழிப்பில் நின்று உயிர் பிழைத்தவர்கள் இன்றும் இருக்கிறார்கள்.

இனவழிப்பின் 26வது ஆண்டு நிறைவு நினைவு கூரப்படும் வெள்ளிக் கிழமைக்கு முன்னர், ஸ்றபிறெனிற்சா இனவழிப்பு (Srebrenica Genocide) நினைவாலயத்துக்கு மேலே அமைந்திருக்கின்ற ஒரு ஆலயத்தின் பின்புறத்தில், சேர்பியர்களால் போர் வெற்றிக் கொண்டாட்டங்கள் முன்னெடுக்கப் படுவதாகவும் அங்கே இசையொலி காதைப் பிளப்பதாகவும் பொஸ்னிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

ஸ்றபிறெனிற்சா இனவழிப்பு (Srebrenica Genocide) நினைவாலயத்தால் அண்மையில் வெளியிடப்பட்ட ‘ஸ்றபிறெனிற்சா இனவழிப்பு மறுப்பு’ தொடர்பான அறிக்கை, கடந்த வருடத்தில் குறிப்பிட்ட பிரதேசத்தில் நடைபெற்ற உரையாடல்களில் 234 தடவைகள் இனவழிப்பு மறுப்புகள் இடம்பெற்றதாகவும் அவற்றில் பெரும் பகுதி சேர்பியாவில் இடம் பெற்றதாகவும் கோடிட்டுக் காட்டியது.

ஸ்றபிறெனிற்சா இனவழிப்பை மறுப்பவர்களில் பெரும்பாலானோர் பொது மக்களுக்கான சேவைகளை வழங்கும் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்களில் 28 பேர் அரச நிறுவனங்களில் உத்தியோகத்தர்களாக இருப்பவர்கள் என்றும் அந்த அறிக்கை மேலும் சுட்டிக் காட்டியது. பொஸ்னியப் போர் நடைபெற்ற வேளையில் சேர்பிய அரச, மற்றும் இராணுவ அமைப்புகளில் அவர்கள் அங்கம் வகித்தவர்கள் என்பது அதிர வைக்கின்ற உண்மையாகும்.

இனவழிப்பை மறுத்து, போர்க் குற்றவாளிகளைப் போற்றுகின்ற போக்கு கடந்த வருடத்தில் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்திருப்பதாகவும், அப்பிரதேசத்தில் இனவழிப்பு மறுப்பு சேர்பிய அரச மூலோபாயமாகவே முன்னெடுக்கப்படுவதாகவும் அக்குறிப்பிட்ட அறிக்கையை வடிவமைத்த லைய்லா கசானிக்கா (Lejla Gacanica) குறிப்பிட்டார்.

இனவழிப்பின் 10 படி நிலைகள்

Gregory H Stanton

இனவழிப்புப் படுகொலைகள் மேலும் முன்னெடுக்கப் படலாம் என்பதன் குறிகாட்டிகளில் மறுப்பு மிகவும் முக்கியமானது ஒன்று என்று ‘இனவழிப்பின் 10 படி நிலைகள்’ என்ற கொள்கையை வகுத்த அமெரிக்க இனவழிப்பு நிபுணரான கிறெகொறி ஸ்ரான்ரன் (Gregory H Stanton) தெரிவிக்கிறார்.

“புகைந்துகொண்டிருக்கும் இனமுரண்பாடுகளும் இனவழிப்பு மறுப்பும் எதிர் காலத்துக்குப் பாரிய சவால்களைத் தோற்று வித்திருப்பதாக சுல்ஜிச் கூறினார்”.

இப்படிப்பட்ட நிலைமைகள் தொடருமாக இருந்தால் இன்னுமொரு தடவை ஸ்றபிறெனிற் சாவை நாங்கள் எதிர் கொள்ள வேண்டியிருக்கும் என்று சுல்ஜிச் குறிப்பிட்டார்.

நன்றி: அல்ஜசீரா

Exit mobile version