இலங்கையில் தமிழ் மக்கள் ஜனநாயகத்தை தேடும் நிலையே உள்ளது-பா.அரியநேத்திரன்

தமிழ் மக்கள் ஜனநாயகத்தை தேடும் நிலை

இலங்கையில் சிங்கள மக்களுக்கு ஜனநாயம் இருக்கோ இல்லையோ தெரியாது ஆனால் தமிழ் மக்கள் ஜனநாயகத்தை தேடும் நிலையிலேயே உள்ளனர் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச ஜனநாயக நாள் இன்று நினைவு கூரப்படும் நிலையில், ‘இலங்கையில் ஜனநாயகம்’ மதிக்கப்படுவது குறித்து, தமிழ் அரசியல் தலைவர்களிடம் ‘இலக்கு செய்தி நிறுவனம்’ கருத்து கேட்ட போது, அதற்கு முன்வந்து பதில் அளித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன்,“ஜனநாயகம் என்பது “மக்களால் மக்களுக்காக நடத்தப்பெறும் அரசாங்கம்” என வரைவிலக்கணம் கொண்டது. … பொதுவாக ஒரு நாட்டின் மக்கள், தங்களின் கருத்துக்களைத் தேர்தலின் மூலம் பதிவு செய்து, தங்கள் சார்பான பிரதிநிதிளைத் தேர்ந்தெடுப்பர்.

ஆனால் இலங்கையில் 1951ம் ஆண்டு திரு பண்டாரநாயக்க ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகி சிறிலங்கா சுதந்திர கட்சியை உருவாக்கினார். பதவிக்கு வருவதற்காக சிங்கள மொழியை நாட்டின் அரச மொழியாக்குவதாக வாக்குக் கொடுத்தார். 1956ம் ஆண்டு சிங்களம் அரச மொழியாகியது.

அன்றில் இருந்து இன்று வரை இலங்கையின் ஜனநாயகம் என்பது பேச்சளவில் உள்ள ஒரு சொல்லாக மட்டுமே உள்ளது, செயல்களெல்லாம் எழுதப்படாத சர்வாதிகாரமாகவே உள்ளது. அதிலும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை இலங்கையில் அமுல்படுத்தப்பட்ட 1982, ல் தொடக்கம் தற்போதுவரை ஜனநாயகம் மிகதோசமான நிலையில் உள்ளது.

எந்த தேர்தல்களாக இருப்பினும் பணப்பலம் உள்ளவர்களே மக்கள் பிரதிநிதிகளாக தெரிவு செய்யும் நிலைமையும் உருவாகியுள்ளதை அவதானிக்கமுடிகிறது.

போரில் உயிரிழந்த உறவுகளை நினைவு கூரமுடியாத அடக்குமுறைகள் தொடரும் போதும், பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படாமல் தொடரும் இவ்வேளையில்  தற்போது அவசரகால சட்டம் திடீரென பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இலங்கையில் சிங்கள மக்களுக்கு ஜனநாயகம் இருக்கிறதோ இல்லையோ தமிழ்மக்கள ஜனநாயகத்தை தேடும் நிலையே உள்ளது.

ilakku-Weekly-Epaper-146-September-05-2021