தமிழ் தேசிய கூட்டமைப்பு பலமாக இருக்கின்றது-தமிழீழ விடுதலை இயக்கம்

தமிழ் தேசிய கூட்டமைப்பு பலமாக இருக்கின்றது என்றும் இருப்பினும் அதில் இருக்கும் மூவரின் செயற்பாடுகளினால் மக்களினுடைய மனதில் நம்பிக்கை குறைந்துவருவதாகவும் தமிழீழ விடுதலை இயக்கம் தெரிவித்துள்ளது.

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் பத்தாவது தேசிய மாநாட்டில் உரையாற்றிய அக்கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், இந்த செயற்பாடுகளை அனுமதிக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஆயுதப் போராட்ட இயக்கங்கள் அனைத்தும் ஒன்றுபட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டும் என்றும் இதில் தனிக்கட்சி ஒன்று நாட்டாமை செய்யக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்ய வேண்டும் என்றும் இல்லையேல் தமிழ் மக்களை நாம் காப்பாற்ற முடியாது என்றும் செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிட்டுள்ளார்.

வெறும் உதட்டளவிலேயே தமிழ் மக்களின் விடுதலை தொடர்பில் தற்போது பேசப்படுகிறது என குற்றம் சாட்டிய அவர், உளப்பூர்வமான எவரும் விடுதலை தொடர்பாக பேசவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

மேலும் தற்போது வந்தவர்கள் தமிழரசு கட்சியையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் இல்லாதொழிக்கின்ற செயலை செய்கின்றனர் என்றும் செல்வம் அடைக்கலநாதன் குற்றம் சாட்டினார்.

விடுதலைப் புலிகளை உடைத்த இராஜதந்திரத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் பிரயோகிக்கின்றார் என்றும் செல்வம் அடைக்கலநாதன் குற்றம் சாட்டினார்.

இருப்பினும் ரணிலின் கருத்தை வலுப்படுத்துகின்ற வகையிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை பலவீனப்படுத்துகின்ற வகையிலும் ஒரு சிலர் கருத்து வெளியிட்டாலும் கூட்டமைப்பு பலமாகவே இருக்கின்றது என்றும் செல்வம் அடைக்கலந்தான் தெரிவித்தார்.