Home உலகச் செய்திகள் ஆப்கான்: செய்தி சேகரித்த பத்திரிகையாளர்களை சித்திரவதை செய்த தலிபான்கள்

ஆப்கான்: செய்தி சேகரித்த பத்திரிகையாளர்களை சித்திரவதை செய்த தலிபான்கள்

ஆப்கான் தலைநகரில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் குறித்து செய்தி சேகரித்த பத்திரிகையாளர்களை சித்திரவதை செய்த தலிபான்கள்,  மிக கடுமையாக தாக்கியுள்ளனர்  என குற்றச்சாட்டுகள் வெளியாகியுள்ளன.

கடந்த புதன்கிழமை பெண்கள் தமக்கு ஆட்சி அரதிகாரத்தில் மற்றும் கல்வி போன்றவற்றில்  உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் செய்தி சேகரித்த எடில்லட்ரோஸ் செய்தித்தாளின் இரு பத்திரிகையாளர்களையும்  தலிபான்கள் கைதுசெய்துள்ளனர்.

இதனை தொடர்ந்து காவல் நிலையத்திற்கு அவர்களை அழைத்துச் சென்ற  தலிபான்கள் அங்கு வைத்து அவர்களை கடுமையாக தாக்கியுள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்த  உடமைகளை பறித்துக்கொண்டதாகவும் பத்திரிகையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எங்கள் பத்திரிகை ஆசிரியர் கடிம் கரிமி தனது கருத்தை தெரிவித்து முடிப்பதற்குள் தலிபான் உறுப்பினர் ஒருவர் அவரை தாக்கினார் என பத்திரிகையாளர் சைகான்Al Jazeera செய்தி நிறுவனத்திற்கு  தெரிவித்துள்ளார்.

பத்திரிகையாளர்களை சித்திரவதை செய்த தலிபான்கள்

தாங்கள் பத்திரிகையாளர்கள் என தெரிவித்த போதிலும் தலிபான்கள் உரிய கௌரவத்தை வழங்கவில்லை என்றும்  “எங்கள் மூவரையும் சிறைக்கூண்டிற்குள் கொண்டு சென்றார்கள் அங்கு 15 பேர் வரையிருந்தனர்,அவர்களில் இருவர் ரொய்ட்டர் மற்றும் துருக்கியின் அனடொலு முகவர் ஆகியவற்றின் செய்தியாளர்கள். நாங்கள் தடுத்துவைக்கப்பட்டிருந்த வேளை இன்னொரு சிறைக்கூண்டில்  சித்திரவதை செய்யப்படுவதையும் அலறுவதையும் கேட்டோம். எங்களால் சுவர்களை மீறி அவர்களது கதறல்களை கேட்க முடிந்தது,பெண்கள் வலியால் அழுவதை கூட கேட்டோம்” என  பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

பல மணிநேரம் தடுத்துவைத்திருந்த பின்னர் தலிபான்கள்  அவர்களை விடுதலை செய்துள்ள போதிலும் விடுதலை செய்வதற்கு முன்னர்  “இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்வது சட்டவிரோதம்,இது குறித்து செய்தி சேகரிப்பதன் மூலம் நீங்கள் சட்டங்களை மீறுகின்றீர்கள் இம்முறை உங்களை விடுதலை செய்கின்றோம் அடுத்தமுறை சுலபமாக தப்பமுடியாது” என தலிபான்கள் எச்சரித்துள்ளதாக குறித்த பத்திரிகையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இவ்வாறு தாக்குதல் மற்றும் சித்திரவதைகளுக்கு உள்ளான பத்திரிகையாளர்களின் வெளியிடப்பட்டுள்ள படங்கள், அவர்கள்    மோசமான கசையடி மற்றும் சித்திரவதைகளுக்கு உள்ளாகியுள்ளதை  நிரூபித்துள்ளன.

Exit mobile version