சிங்கள தேசமாகும் தமிழர் தாயகம்-தொடர் 3

இல்மனைட் அகழ்விற்காக காணிகளை அபகரிக்க நடவடிக்கை - pathivu

தமிழின அடக்குமுறைக்கு எதிராகத் தொடங்கியதுதான் ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டம். அதில் நில மீட்புப் போராட்டம் என்பது ஒரு பகுதி. துப்பாக்கிகள் கொண்டு தான் ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்றில்லை. அம் மக்களின் நிலங்களை அபகரித்து, அவர்களின் வாழ்வாதாரம், வாழ்விடங்களை கையகப்படுத்துவதன் மூலமும் ஓர் இனம் தனது இருப்பை தக்கவைத்துக் கொள்ள முடியாமல் செய்து, தனது பூர்வீக நிலங்களை விட்டு  வலிந்து இடம்பெயர்த்துவதன் மூலம் தேசமற்றவர்கள் என்ற நிலையை அடைய வைத்தலும் இனப்படுகொலை தான்.

இந்த சூழலில் தமிழர் தாயகம் தொடர்ச்சியாக இலங்கை அரசு, அரச படைகள் மற்றும் சிங்கள மக்களினால்  அபகரிக்கப்பட்டு வருவது குறித்து முன்னாள் வடமாகாணசபை  உறுப்பினர் ரவிகரன் அவர்கள் இலக்கு ஊடகத்திற்கு வழங்கி வரும் சிறப்பு செவ்வியின்  மூன்றாம்  பகுதி…..

கொக்குத்தொடுவாய் தெற்கு, மத்திய, வடக்கு ஆகிய பகுதிகளில் உள்ள தமிழ் மக்களின் காணிகளை அபகரித்து தன் சார்ந்த இன மக்களுக்கு இலங்கையின் ஜனாதிபதியே வழங்கி வைப்பதை என்னவென்று சொல்வது? அதில் ஒரு சிறு பகுதியைக் கூட தமிழ் மக்களுக்கு வழங்க அவர் முனையவில்லை.

அதே போல் முந்திரிகைக் குளத்தில் 224 ஏக்கர் நிலம் 68 பயனாளிகளுக்கு சொந்தமானது. அந்த நிலத்தில் இருந்து தமிழ் மக்கள் இடம்பெயர்ந்த பின்னர், குறித்த காணிகளையும் அபகரித்து காணி ஆவணங்களுடன் சிங்கள மக்களுக்குத்தான் அரசு வழங்கியுள்ளது.

ஆனால் காணி கட்டளைச் சட்டத்தின் படி, ஒரு காணிக்கு இரு ஆவணங்கள் இருந்தால், அதில் எது முந்திய ஆவணமோ அந்த ஆவணத்தை வைத்துதான் அந்தக் காணி தொடர்பாக எந்த முடிவு என்றாலும் எடுக்க வேண்டும். அதாவது முந்திய ஆவணம் உள்ளவருக்குத்தான் குறித்த காணி உரித்தானது. ஆனால் இதில் கடந்த 2012ம் ஆண்டு மகிந்த ராஜபக்சே ஜனாதிபதியாக இருந்த போது, தமிழ் மக்களுடைய குறித்த காணிகளை அபகரித்து பிந்திய ஆவணத்தை வைத்து காணி உறுதிகளை தயாரித்து சிங்கள மக்களுக்கு வழங்கினார்.

இவ்வாறாக தமிழ் மக்களை ஒரு நாட்டுக்குள்ளையே ஒடுக்கி அடக்கி சிங்கள அரசு ஆளுகின்றது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு காணிகளை அரசு அபகரிக்கும் போது, தமிழ் மக்கள் அவர்களின் வாழ்வாதாரத்திற்காக எங்கு செல்வது. அவர்கள் வாழ்வதற்கு என்ன செய்வார்கள்?

மரிச்சிக்கட்டி குளத்தைச்சுற்றி 144 ஏக்கர் நிலமும் 45 பயனாளிகளும் இருந்தனர். 1984ம் ஆண்டு வரைக்கும் அந்நிலம் தமிழர்களின் ஆதி நிலமாக இருந்து வந்தது. இவை அனைத்தும் குளங்களோடு சார்ந்த நிலங்கள். இந்த குளங்களோடு சார்ந்த நிலங்கள் அனைத்தையும் அபகரித்து சிங்கள மக்களுக்கு அரசு வழங்கியுள்ளது. சிங்கள மக்களுடைய ஓர் குடியேற்றப்பிரதேசமாக ‘வெலி ஓயா’ என்ற பெயருடன் மாற்றம் செய்து முல்லைத்தீவு மாவட்டத்தோடு இணைத்துள்ளது அரசு. மயில் குளம் – மொனர வெவ என பெயர் மாற்றம் பெற்றுள்ளது. மணலாறு – வெலி ஓயா என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆமையன் குளம் – இரி இப்பன்வெவ என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முந்திரிகை குளம் – நெலும் வெவ என பெயர் மாற்றம் பெயரிடப்பட்டுள்ளது.

இவ்வாறாக தமிழ் மக்கள் மீதான அச்சுறுத்தலும் ஒடுக்கு முறையும் தொடர்கின்றது என்பதை நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். இவை மட்டுமல்லாது கொக்கிளாய் பகுதிக்கு அருகில் இருக்கக் கூடி பறையன் ஆறு மற்றும் தென்னமரவடி காணிகளுக்கு தமிழ் மக்களால் மீள செல்ல அனுமதியில்லை. ஆனால் சிங்கள மக்கள் தமிழ் மக்களுடைய காணிகளை அடாத்தாகப் பிடித்து துப்பரவுப் பணியில் ஈடுபட்டு அவர்கள் தமக்குச் சொந்தமாக்க அரச அதிகாரிகள் மற்றும் இராணுவம், காவல்துறையினர் அனுமதித்துள்ளனர்.

இவ்வாறு முல்லைத்தீவு மாவட்டத்தினுடைய அனைத்து தமிழர்களுடைய நிலங்களையும் தொல்லியல் திணைக்களம், வனஜீவராசிகள், வன இலாகா திணைக்களங்கள் போட்டி போட்டுக்கொண்டு அபகரித்து வருகின்றனர்.

இந்த அடாவடித்தனத்தையும் ஒடுக்குமுறைகளையும் யாரிடம் போய் முறையிடுவது என்ற கேள்வியோடு தமிழ் மக்கள் திசையற்று நிற்கின்றார்கள்.மாகாண சபைகள் இருந்த காலத்தில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் இவ்வாறான ஒடுக்கு முறைகளை தெரிவித்து ஓரளவுக்கு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடியதாக இருந்தது. ஆனால் இப்போது இந்த மாகாண சபைகளும் இல்லை, ஒருங்கிணைப்புக் குழுக்களும் இல்லை. இதனால் தமிழ் மக்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றனர். அவர்கள் வாழ்விடங்களை இழந்து வாழ்வாதாரத்தை இழந்து பட்டியை நோக்கிச் சென்றுகொண்டு இருக்கின்றார்கள்.

இந்நிலையில், தமிழர்களின் பூர்வீக மணலாற்றின் கற்தூண் பகுதியை மகாப்பிட்டிய என்னும் பெயரிலும், வண்ணாமடு பகுதியை வண்ணாமடுவ என்னும் பெயரிலும், அக்கரைவெளி பகுதியை அக்கரவெலிய என்னும் பெயரிலும் பௌத்த பிரதேசமாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதேபோல் மணற்கேணிப் பகுதியையும் அவ்வாறே பௌத்த பிரதேசமாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் அப்பகுதித் தமிழ் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக கடந்த 1984ஆம் ஆண்டு தமிழ் மக்கள் குறித்த பகுதிகளிலிருந்து இடம்பெயர்வதற்கு முன்பு கற்தூண் பகுதியில் வைரவர் ஆலயம் இருந்ததாகவும், அக்கரைவெளியில் முனியப்பர் ஆலயமொன்று இருந்ததாகவும், அவ்வாறு இருந்த கோவில்களை உடைத்தழித்து தற்போது அந்த இடங்களை பௌத்த பகுதிகளாக மாற்றுவதற்கு முயற்சிகள் இடம்பெறுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

அதேபோல் மணற்கேணிப் பகுதியில் இருந்த சைவ வழிபாட்டு அடையாளங்கள் உடைக்கப்பட்டு அங்கும் பௌத்த மயமாக்கல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் அப்பகுதித் தமிழ்மக்கள் தெரிவிக்கின்றனர்.

அதேவேளை அக்கரைவெளியில் 1984ஆம் ஆண்டிற்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட கூட்டுறவுச் சங்கம் ஒன்று இருந்ததாகவும், மாட்டுப்பண்ணைகள், விவசாய நிலங்கள் என தமிழ் மக்கள் சிறப்பாக வாழ்ந்த இடங்களையே பௌத்தமாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மேலும் தற்போது அக்கரைவெளிப் பகுதியில் கொக்கிளாய் பகுதியிலுள்ள தமிழ் மக்களும், கற்தூண் பகுதியில் கொக்குத்தொடுவாய் பகுதித் தமிழ் மக்களும், மணற்கேணி மற்றும், வண்ணாமடுப் பகுதிகளில் கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணித் தமிழ் மக்களும் விவசாய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் அண்மைக்காலமாக அந்தப் பகுதிகளுக்கு பௌத்த தேரர்கள் உள்ளிட்ட குழுவினர் அதிகளவில் வந்து செல்வதாகவும், பௌத்த மயமாக்கல் முயற்சிகள் நடக்கின்றன.குறித்த பகுதிகளிலிருந்து தம்மை அப்புறப்படுத்தவே இவ்வாறான பௌத்த மயமாக்கல் செயற்பாடுகள் முன்னெடுகாகப்படுவதாகவும் அப்பகுதித் தமிழ் மக்கள் தெரிவிக்கின்றனர்.

அத்தோடு ஏற்கனவே தமிழர்களின் பூர்வீக மணலாற்றுப் பகுதியின் பிரதான இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வெலிஓயாவாக மாற்றப்பட்டுள்ளதுடன், தமது நீர்ப்பாசனக் குளங்களும் அதன் கீழான வயல் நிலங்களும் அபகரிக்கப்பட்டதைப் போன்று, அவற்றை அண்டிய மானாவாரி விவசாய நிலங்களையும் ஆக்கிரமிப்பதற்கான அபாயம் இந்த பௌத்த மயமாக்கல் செயற்பாடுகள் மூலம் முன்னெடுக்கப்படுகின்றன.