அரச ஊழியர்களின் சம்பளத்தை 10 ஆயிரம் ரூபாவினால் அதிகரிக்க வேண்டும் – இம்ரான் எம்.பி கோரிக்கை

10 ஆயிரம் ரூபாவினால் அதிகரிக்க

தற்போது தாங்க முடியாத அளவு அதிகரித்துள்ள விலைவாசியைக் கருத்தில் கொண்டு அரச ஊழியர்களின் சம்பளத்தைக் குறைந்த பட்சம் 10 ஆயிரம் ரூபாவினால் அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘விலைவாசி உயர்வினால் பொதுமக்கள் படும் கஷடங்களை அவதானிக்கும் போது அரச ஊழியர்களின் சம்பளம் குறைந்த பட்சம் 10 ஆயிரம் ரூபாவினால் அதிகரிக்கப்பட வேண்டும். அப்போது தான் வாழ்க்கைச் செலவுச் சுமையை ஓரளவுக்கேணும் அவர்களால் தாங்கிக் கொள்ள முடியும். சமுகத்தில் கௌரவத்தோடு வாழும் அவர்கள் தங்களது அந்தஸ்தை இழக்கும் நிலையை உருவாக்கி விடாதிருக்க அரசு இந்த விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

அதேபோல ஓய்வூதியர்களின் ஓய்வூதியத்திலும் கனிசமான அதிகரிப்புச் செய்யப்பட வேண்டும். சமுர்த்தி உள்ளிட்ட சகல அரச கொடுப்பனவுகளும் அதிகரிக்கப்பட வேண்டும். இதன் மூலம் மக்கள் கடன் இன்றி உண்ணும் சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும்.

மக்களுக்காகத் தான் அரசு இருக்கின்றது. எனவே, மக்களின் நலன் பேணும் விடயத்தில் அரசு கவனம் செலுத்த வேண்டும். அரசைக் கொண்டு நடத்த நிதி இல்லை என்பதற்காக சகல பொருட்களினதும் விலைவாசியை கண்ணை மூடிக் கொண்டு உயர்த்தி மக்களைத் துன்பத்திற்குள்ளாக்கும் நிலையை அரசு ஏற்படுத்தியுள்ளது.

இதிலிருந்து மக்களைப் பற்றிய எந்த அக்கறையும் இந்த அரசுக்கு இல்லை என்பது தெளிவாகத் தெரிகின்றது. கேஸ் உள்ளிட்ட சில பொருட்களின் விலை 100 வீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இலங்கை வரலாற்றில் எந்த அரசும் செய்யாத ஒரு மோசமான விலை அதிகரிப்பு இதுவாகும்.

இந்த நிலையில் நாடு தான் முக்கியம் மக்கள் முக்கியமல்ல என்ற போர்வையில் சில அமைச்சர்கள் கருத்து வெளியிட்டு வருகின்றார்கள். மக்களைப் பற்றிய எந்த அக்கறையும் இந்த அரசுக்கு இல்லை என்பதற்கு இது நல்ல உதாரணமாகும்.

69 இலட்சம் மக்கள் ஆணை கொடுத்து தான் இவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள். ஆனால் இன்று இந்த மக்கள் ஓரங்கட்டப்பட்டு விட்டார்கள். அதிகாரத்தில் உள்ளவர்களது நலன் பேணும் நடவடிக்கைகளே இப்போது முன்னெடுக்கப்படுகின்றன.

இப்போது அரசு அபிவிருத்தியைப் பற்றிப் பேசுகின்றது. மக்களைப் பட்டினி போட்டு விட்டு செய்யப்படும் அபிவிருத்தி தேவையா அல்லது மக்களின் வாழ்க்கைச் செலவை சீர்செய்ய நடவடிக்கை எடுத்து விட்டு செய்யப்படும் அபிவிருத்தி தேவையா என்பது குறித்து கேட்க விரும்புகின்றேன்” என்று கூறியுள்ளார்.

ilakku Weekly Epaper 151 october 10 2021 Ad அரச ஊழியர்களின் சம்பளத்தை 10 ஆயிரம் ரூபாவினால் அதிகரிக்க வேண்டும் - இம்ரான் எம்.பி கோரிக்கை