மாவீரர்களின் தியாகங்களும் அவர்களின் எதிர்பார்க்கைகளும்   வெறுமனே உணர்ச்சி அரசியலுக்காக பயன்படுத்தக்கூடாது

“புலம்பெயர் அமைப்புகள் இங்கு தமிழ் தேசியம் பேசிக்கொண்டு தமது அரசியல் சுயநலனுக்காக செயற்படும் அரசியல் கட்சிகளை வலுப்படுத்துவதை விடுத்து தமிழர்களின் உரிமைக்காக போராடியவர்களையும் உயிர்களை தியாகம் செய்த குடும்பங்களையும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும்”.

வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகம்.தமிழர்கள் தங்களது தாயகத்தில் ஏனைய இனங்கள் வாழும் நிலையில் வாழவேண்டும் என்பதற்காக தனது கனவுகளை துறந்து தமது சமூகத்திற்காக போராடி தமது உயிர்களை தியாகம் செய்த வீரமறவர்களை நினைவுகூரும் நாளாக மாவீரர் தினம் வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்திலும்,புலம் பெயர் நாடுகளிலும் அனுஸ்டிக்கப்படுகின்றது.

எவ்வாறு இருந்தாலும் இம்முறை தமிழர் தாயகப்பகுதிகளில் மாவீரர்களை நினைவுகூருவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாகவும் உணர்வுபூர்வமாகவும் நடைபெற்றுவருகின்றன.

வடக்கினைப்பொறுத்த வரையில் பல்கலைக்கழக மாணவர்கள்,சிவில் சமூக செயற்பாட்டாளர்கள்,தமிழ் தேசிய கட்சிகள் மாவீரர் வாரத்தினை அனுஸ்டிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. வடக்கினைப்பொறுத்த வரையில் மாவீரர் நாளை தமிழ் தேசிய கட்சிகளுக்கு அப்பால் மாவீரர் ஏற்பாட்டுக்குழுவினர் இதற்கான முன்னெடுப்புகளை பரந்தளவில் ஏற்படுத்திவருகின்றனர்.

கிழக்கு மாகாணத்தில் தமிழ்தேசிய கட்சிகள் ஒன்றாகவும் மாவீரர் ஏற்பாட்டுக்குழுவினர் ஒரு பகுதியாகவும் மாவீரர் நினைவு தினத்தை அனுஸ்டிப்பதற்கான வழிவகைகளை செய்துவருகின்றனர்.வடக்கினைப்பொறுத்த வரையில் அரசியல் கட்சிகள் தமது அரசியலுக்காக பயன்படுத்தும் நிலையில் கிழக்கில் அவ்வாறான நிலையினை குறைந்தளவிலேயே காணமுடிகின்றது.இதேபோன்று கிழக்கில் மாவீரர்கள் ஏற்பாட்டுக்குழுவினரால் மாவீரர்கள் கௌரவிப்பு பணிகளும் முன்னெடுக்கப்படுகின்றன.

நாங்கள் வருடத்திற்கு ஒரு முறை மாவீரர்களை நினைவுகூருகின்றோம்.இந்த மாவீரர்களின் தியாகங்களை நாங்கள் நினைவுகூருகின்றோமே தவிர அவர்களின் தியாகங்கள் எதற்காக செய்யப்பட்டது,அந்த தியாகத்தின் உன்னத நோக்கத்தினை தமிழ் தேசிய பரப்பில் உள்ளவர்கள் எந்தளவுக்கு முன்கொண்டுசெல்கின்றார்கள் என்பதை ஆராயவேண்டிய நிலையில் உள்ளோம்.

இதேபோன்று தமிழர்களின் சுதந்திரத்திற்காக தமது இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களின் குடும்பத்தினரின் இன்றைய நிலையென்ன அவர்களுக்கு தமிழ் மக்கள் செய்த சேவையென்ன என்பதையும் ஆராயவேண்டிய நிலை இன்றைய தமிழ் சமூகத்திற்கு உள்ளது.

கார்த்திகை மாதம் வந்தால் மட்டுமே வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் தேசிய பரப்பில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு தமிழர்களின் விடுதலைப்போராட்டம் ஞாபகத்திற்கு வரும் நிலை காணப்படுகின்றது.வெறுமனே தமக்குள் முட்டிமோதும் இந்த கட்சிகள் மாவீரர்கள் எதற்காக தமது உயிர்களை தியாகம் செய்தார்கள் என்பதை மறந்த நிலையிலேயே செயற்படுகின்றனர்.

தமிழ் தேசிய பரப்பில் செயற்படும் கட்சிகள் தமது கொள்கையென்ன தமது நோக்கம் என்ன என்பதையெல்லாம் மறந்துவிட்டு இன்று வெறும் அரசியல் ரீதியான தமக்குள்ளான போட்டியை மட்டும் நோக்காக கொண்டு செயல்பட்டு வருகின்றன.யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டாலும் அரசியல் ரீதியான போராட்டம் இராஜதந்திரப்போராட்டமாக முன்கொண்டுசெல்லப்படும் என்று மக்கள் எதிர்பார்த்திருக்கின்றபோதிலும் அவ்வாறான போராட்டங்கள் இல்லாமல் வெறுமனே தமிழ்தேசியத்தினை வலியுறுத்தும் கட்சிகளுக்கிடையிலான போராட்டமே முன்கொண்டுசெல்லப்படுகின்றமை கவலைக்குரியதாகும்.

மாவீரர்களின் தியாகங்களும் அவர்களின் எதிர்பார்க்கைகளும் இன்று வெறுமனே உணர்ச்சி அரசியலுக்காக மாவீரர் தினங்களில் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.மாறாக ஏனைய காலங்களில் மாவீரர்களின் தியாகங்களும்,அவர்களின் வீரச்செயல்களும்,அவர்களின் இலட்சியங்களும் மறக்கப்பட்டு தமிழ் தேசிய அரசியல் முன்கொண்டுசெல்லப்படுகின்றது.
இவ்வாறான செயற்பாடுகள் தமிழ் தேசிய அரசியலுக்கு பொருத்தமற்றதாகவும் கேள்விக்குட்படுத்தியதாகவும் காணப்படுகின்றது.இன்று வடக்கு கிழக்கில் தோன்றியுள்ள தமிழ் தேசிய அரசியலுக்கிடையிலான போட்டிகள்   தமிழ் தேசியத்தினை சிதைவடையச்செய்யும் நிலைக்கு கொண்டுசென்றுள்ளது.

தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!என்ற பாடலை கேட்கும்போது ஒவ்வொரு மாவீரரும் என்ன கனவுக்காக தம்மை ஆகுதியாக்கியுள்ளார்களோ அந்த கனவினை நனவாக்கவேண்டிய பொறுப்பு வடக்கு கிழக்கில் உள்ள ஒவ்வொரு தமிழனுக்கும் உள்ளது.இன்று தமிழ் மக்களின் உரிமை தொடர்பில் சர்வதேசம் வரையில் ஒலிப்பதற்கான காரணம் இந்த மாவீரர்களின் தியாகமாகும்.இந்த தியாகங்களுக்கு சரியான தீர்வினை பெற்றுக்கொடுக்கவேண்டிய பாரிய பொறுப்பு வடக்கு கிழக்கில் உள்ள ஒவ்வொரு தமிழ் மகனுக்கும் உள்ளது.
இன்று புலம்பெயர் தேசத்தில் உள்ளவர்கள் இங்குள்ள கட்சி அரசியலை வளர்ப்பதற்கு முன்னெடுக்கும் முயற்சிகள் இங்கு மாவீரர்களின் கனவினை தவிடுபொடியாக்கும் செயற்பாடாகவே நோக்கவேண்டியுள்ளது.

மாவீரர்களின் பெயரை வைத்து அரசியல் செய்வதற்கும் தமது வயிற்றினை வளர்க்கமுற்படுபவர்களுமே இன்று தமிழ் தேசியத்திற்கு எதிரானவர்களாக மாறியுள்ளனர்.இவர்கள் எதிரிகளை விட மிக மோசமானவர்கள்.இவர்களே தமிழினத்தின் உண்மையான துரோகிகளாகும்.இவற்றினை சரியான முறையில் இனங்கண்டு களையவேண்டிய பொறுப்பு தமிழ்தேசியத்தினை உயிராக நேசிக்கும் ஒவ்வொருவரினதும் கடமை மட்டுமல்ல நாங்கள் மாவீரர்களுக்கு செய்யும் உண்மையான அஞ்சலியாகும்.

இதேபோன்று இன்று நாங்கள் இனத்திற்காக வீரகளமாடி காவியமான மாவீரர்களை நினைவுகூரும் இந்த நேரத்தில் அவர்களின் குடும்பத்தின் நிலைமைகள் குறித்தும் சிந்திக்கவேண்டிய நிலையுள்ளது.தமிழினத்திற்காக எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல்போராடி காவியமான வீரமறவர்களுக்கு குடும்பங்கள் உள்ளது.சில குடும்பங்கள் இன்றும் தமது வாழ்வாதாரத்திற்கு மிகுந்த கஸ்டங்களை எதிர்நோக்கிவருகின்றனர்.

அண்மையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பகுதியில் உள்ள ஆற்றுப்பகுதிக்கு சென்றபோது அங்கு பெண்னொருவர் மீன்பிடியில் ஈடுபட்டிருந்ததை கண்டேன்.வயது முதிர்ந்த பெண் அந்த வயதிலும் தோணியை ஓட்டிச்சென்று மீன்பிடியில் ஈடுபடுவதைக்கண்டேன்.அவரிடம் கதைத்துக்கொண்டிருந்தபோது அவருக்க இரண்டு ஆண் மகன்கள் என்றும் இருவரும் மாவீரர்களாகிய கதையினை கூறி கண்கலங்கினார்.கணவரும் இல்லாத நிலையில் மீன்பிடித்து தனது வாழ்நாளை கடத்தி வருகின்றனர்.இவ்வாறான பலர் இன்று கிழக்கு மாகாணத்தில் காணப்படுகின்றனர்.

விடுதலைப்பயணத்தில் யுத்த களத்தில் கிழக்கு மாகாண போராளிகளின் வீரசாகசங்களை அனைவரும் அறிவார்கள்.ஆனால் அவர்களின் குடும்பங்கள் இன்று எதிர்நோக்கும் கஸ்டங்களை கேட்பதற்கும் யாரும் அற்றநிலையே காணப்படுகின்றது.அத்தோடு யுத்த காலத்தில் ஆயுதம் ஏந்தி யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய பலர் இன்று வாழ்வை தொலைத்த நிலையில் நிர்க்கதியான நிலையில் உள்ளனர்.சிலர் யாசகம்பெறும் நிலைமையையும் காணமுடிகின்றது.

யுத்த காலத்தில் தமது செயற்பாடுகளை முன்கொண்டுசெல்வதற்கு தமிழீழ விடுதலைப்புலிகளினால் புலம்பெயர் தேசங்களில் முதலீடுகள் முன்னெடுக்கப்பட்டன.  இந்த முதலீடுகளின் நிலைமை இன்று என்ன என்பதும் அறியமுடியாத நிலையே உள்ளது.இவ்வாறான முதலீடுகளின் சிறிய பகுதிகளையாவது வடக்கு கிழக்கில் முதலீடு செய்யும்போது   போராளிகளும் மாவீரர் குடும்பங்களும் தொழில்வாய்ப்புகளைப்பெற்று தமது வாழ்வாதாரத்தை கொண்டுசெல்ல முடியும் என்ற  சூழல் உருவாகும்.

புலம்பெயர் அமைப்புகள் இங்கு தமிழ் தேசியம் பேசிக்கொண்டு தமது அரசியல் சுயநலனுக்காக செயற்படும் அரசியல் கட்சிகளை வலுப்படுத்துவதை விடுத்து தமிழர்களின் உரிமைக்காக போராடியவர்களையும் உயிர்களை தியாகம் செய்த குடும்பங்களையும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும்.

இதேபோன்று தமிழ் தேசிய பரப்பில் மாவீரர்களின் கனவுகளையும் நோக்கங்களையும் மறந்துசெயற்படும் கட்சிகள் ஓரங்கட்டப்பட்டு தமிழ் தேசியத்தின் பால் செயற்படும் கட்சிகள் ஒன்றிணைக்கப்பட்டு அதன் செயற்பாடுகளை அரசியல் ரீதியாக பலப்படுத்தவேண்டும்.

வெறுமனே மாவீரர் நாளை நினைவுகூர்ந்து அதன் பின்னர் அவர்கள் தியாகங்களை மறந்து செயற்படுவோமானால் எதிர்காலத்தில் வடக்கு கிழக்கு தமிழர் தாயகப்பகுதியை அழிவுப்பாதையிலிருந்து ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாத நிலையே ஏற்படும்.இந்த தாயக தேசத்திற்காக ஆகுதியாகிய அனைத்து போராளிகளுக்கும் பதில் சொல்லவேண்டிய கடமை ஒவ்வொரு தமிழருக்கும் ஏற்படும்.

எனவே எதிர்காலத்தில் தமிழர்கள் எதற்காக ஆயுதம் போராட்டத்தினை ஆரம்பித்தார்களோ அந்த போராட்டத்திற்காக எவ்வளவு இழப்புகளை  சந்தித்தார்களோ அதனையெல்லாம் மறந்து செயற்படுதற்கு வடக்கு கிழக்கில் யாருக்கும் எந்த உரிமையும் இல்லையென்பதை இந்த மாவீரர் நாளில் நினைவுகூர விரும்புகின்றேன்.அவர்கள் தமது உயிரை தியாகம் செய்யும்போது அவர்களின் கண்முன்னால் தெரிந்த அவர்களின் நோக்கினை அடைவதற்கு தமிழர்கள் திடசங்கர்ப்பம் அவர்களின் கல்லறைகளில் எடுக்கவேண்டும்.இதுவே நாங்கள் அவர்களுக்கு செய்யும் உண்மையான மரியாதையாக இருக்கும்.