மட்டக்களப்பில் காட்டு யானைகளின் அட்டகாசம்-மட்டு.நகரான்

IMG 8265 மட்டக்களப்பில் காட்டு யானைகளின் அட்டகாசம்-மட்டு.நகரான்

கிழக்கு மாகாணம் தமிழர்கள் தொடர்ச்சியாக வேதனைகளைச் சுமந்த மாகாணமாக காணப்படுகின்றது. இயற்கை அனர்த்தங்கள், செயற்கை அனர்த்தங்கள் என தொடர்ச்சியாக அழிவுகளை எதிர்கொண்ட பகுதியாகவே கிழக்கு மாகாணம் இருந்துவருகின்றது.

அதிலும் கிழக்கு மாகாணத்தில் 75 வீதத்திற்கு மேல் தமிழர்களைக் கொண்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த நிலைமையென்பது தொடர்ச்சியாகயிருந்து வருகின்றது. யுத்த அழிவுகளுக்கு பின்னர் இயற்கை அழிவுகளை மட்டக்களப்பு மாவட்ட மக்கள் எதிர்கொண்டுவருகின்றனர்.

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பிரதேச மக்கள் பல்வேறு அழிவுகளை எதிர்கொண்டுவருகின்றனர். யுத்த காலத்தில் மோதல்கள் நடைபெறும் பகுதிகளாகயிருந்த படுவான்கரை பிரதேசம் யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர் அனர்த்தங்களை எதிர்கொள்ளும் பகுதியாகயிருந்துவருகின்றது.

IMG 8290 மட்டக்களப்பில் காட்டு யானைகளின் அட்டகாசம்-மட்டு.நகரான்

படுவான்கரையினைப்பொறுத்த வரையில் பெரும்பாலான மக்கள் விவசாயத்தினையும் மீன்பிடியையும் கால்நடை வளர்ப்புகளையுமே தமது ஜீவனோபாயமாக கொண்டுள்ளனர். யுத்தம் முடிவுற்றதன் பின்னரும் இப்பகுதியை அபிவிருத்திசெய்யாத நிலையே தொடர்ந்து இருந்து வருவதுடன் யுத்தம் நிறைவடைந்த காலத்தில் இப்பகுதியின் அபிவிருத்திக்காக வந்த நிதிகள் தென்பகுதிக்கு கொண்டுசெல்லப்பட்டதான விடயங்கள் தொடர்பாகவும் அக்காலத்தில் பரவலாகப் பேசப்பட்டன.

எவ்வாறாயினும் தமது சொந்த முயற்சியினால் இப்பகுதி மக்கள் தமது வாழ்வாதாரங்களை முன்னெடுத்துவருகின்றபோதிலும் தொடர்ச்சியாக இயற்கை அழிவுகளும் செயற்கை அழிவுகளும் இப்பகுதியின் பொருளாதாரத்தினை நிலைகுலையச்செய்யும் வகையிலேயேயிருந்துவருகின்றது.

குறிப்பாக இயற்கை அனர்த்தங்கள் குறிப்பிட்ட காலங்களில் ஏற்பட்டு, அழிவுகளை ஏற்படுத்தினாலும் படுவான்கரையினை பொறுத்த வரையில் யானைகளினால் ஏற்படும் அழிவுகள் என்பது பாரியளவிலிருந்துவருகின்றது.

குறிப்பாக படுவான்கரை பகுதியின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இந்த காட்டுயானைகளின் அட்டகாசம் காரணமாக அப்பகுதியில் உள்ள தமிழ் மக்கள் பெரும் பொருளாதார ரீதியான இழப்புகளை எதிர்கொண்டுவருகின்றனர். யுத்தகாலத்தில் இப்பகுதியில் தாக்காத யானைகள் தற்போது தமது பகுதிக்குள் சேதங்களை விளைவிப்பதானது தமிழ் மக்கள் மத்தியில் பாரிய சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

IMG 8271 மட்டக்களப்பில் காட்டு யானைகளின் அட்டகாசம்-மட்டு.நகரான்

குறிப்பாக போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் எல்லைப்பகுதியானது அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களைக்கொண்டிருக்கின்றபோதிலும் எல்லைப்பகுதியில் உள்ள சிங்களவர்களை யானை தாக்குவதில்லை. அங்கு சேதங்கள் ஏற்படுவதில்லை. ஆனால் அதனையெல்லாம் தாண்டி தமிழர்கள் பகுதிக்குள் யானைகள் எவ்வாறு தாக்குகின்றன? யானைகள் இப்பகுதிக்கு எவ்வாறு வந்தன? போன்ற கேள்விகள் இன்று அப்பகுதி தமிழ் மக்கள் மத்தியில் எழுந்திருக்கின்றன.

கடந்த காலத்தில் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் எல்லைப்பகுதிகளிலிருந்து யானைகள் இன்று போரதீவுப்பற்றின் அனைத்து பகுதிகளுக்கும் வரும் நிலைமை ஏற்பட்டுள்ளது. வனஜீவராசிகள் திணைக்களம் இனரீதியாக செயற்படும் நிலையே போரதீவுப்பற்றில் யானைகளின் தாக்குதல்களுக்கு தாம் பாதிக்கப்படும் நிலையேற்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வருடாந்தம் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய செய்கைகள் யானைகளின் தாக்குதல்களினால் சேதமடைவதுடன் உயிர்ச்சேதங்களும் ஏற்படுவதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த காலங்களில் எல்லைப்புற பகுதிகளிலேயே அதிக இழப்புகளை ஏற்படுத்திவந்த யானைகள் இன்று கிராமங்களை ஊடறுத்து பல பகுதிகளுக்கும் சென்றுள்ளதை காணமுடிகின்றது.

WhatsApp Image 2022 08 21 at 1.32.08 AM மட்டக்களப்பில் காட்டு யானைகளின் அட்டகாசம்-மட்டு.நகரான்

‘வெல்லாவெளி கம்பியாறு பகுதியில் ஒருவர் யானை தாக்கி உயிரிழந்திருந்தார். அவர் விவசாயி. தனது காணிக்குள் நடைபெறும் அறுவடைக்கான ஏற்பாடுகளை செய்யச்சென்றவர் யானை தாக்கி உயிரிழந்தார். அவர் மூன்று பிள்ளைகளின் தந்தை. குறித்த பகுதியில் யானை நிற்கின்றது என பல தடவைகள் வனஜீவராசி திணைக்களத்திற்கு அறிவித்தோம்.ஆனால் அவர்கள் அப்பகுதியை வந்து பார்க்கவும் இல்லை.

யானைகளை துரத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்கள் வராவிட்டாலும் யானை வெடிகளாவது தாருங்கள். நாங்கள் யானைகளை விரட்டுகின்றோம் என கூறியபோதிலும் அதுவும் இல்லையென்று கூறிவிட்டார்கள். ஆனால் வெல்லாவெளி பகுதியில் இருக்கும் சிங்கள பகுதியில் யானைகள் நுழைந்தால் அவர்கள் அறிவித்தவுடன் அப்பகுதிக்கு சென்று யானைகளை துரத்துகின்றனர். ஆனால் தமிழர் பகுதிக்குள் யானைகளை துரத்த யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தமிழர்கள் செத்தால் பரவாயில்லையென வனஜீவராசி திணைக்களத்தினர் நினைக்கின்றனர் என கம்பியாறு பகுதியில் விவசாய நடவடிக்கையினை முன்னெடுத்துவரும் ஆறுமுகம் என்பவர் தெரிவிக்கின்றார்.

இதேபோன்று படுவான்கரையின் பட்டிப்பளைப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தாந்தாமலை பகுதியிலும் யானைகளின் அட்டகாசங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றுவருவதுடன் அப்பகுதியிலும் உயிரிழப்புகள் தொடர்ந்து இடம்பெற்றுவருகின்றன.

IMG 8295 மட்டக்களப்பில் காட்டு யானைகளின் அட்டகாசம்-மட்டு.நகரான்

யானைகளை அதன் இடங்களுக்கு விரட்டாத காரணத்தினாலேயே யானைகள் கிராமங்களுக்குள் ஊடுருவும் நிலைமை காணப்படுவதாகவும் இது தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்களம் நடவடிக்கையெடுப்பதில்லையெனவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

தாந்தாமலைக்கு பின்புறமாகவுள்ள சிங்கள பகுதிகளில் யானைகள் தாக்காதவாறு பாதுகாப்புகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் தமிழர்களின் பகுதிகள் புறக்கணிக்கப் பட்டுள்ளமையானது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துவதாகவுள்ளதாக தாந்தாமலை கிராம அபிவிருத்தி சங்கத்தின் செயலாளர் சுதர்சன் தெரிவிக்கின்றார்.

யானைகளை விரட்ட வெடிகள் தாருங்கள் என்று கேட்டால் வெடிகள் இல்லையென்று சொல்லும் வனஜீவராசிகள் திணைக்களத்தினர் சிங்கள பகுதிகளில் யானைகளின் அச்சுறுத்தல் ஏற்படும்போது போதியளவு யானை வெடிகளை வழங்கும் நிலையுள்ளதாகவும் அப்பகுதியில் வனஜீவராசிகள் திணைக்களத்தினர் மேற்கொள்ளும் பாதுகாப்பு நடவடிக்கைகளே யானைகள் தமிழர் பகுதிக்குள் நுழைந்து தாக்குவதற்கான காரணமாக அமைவதாகவும் அவர் தெரிவிக்கின்றனர்.

இப்பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களும் நூற்றுக்கணக்கான ஏக்கர் மேட்டு நிலப்பயிர்ச்செய்கைகளும் யானைகளினால் படுவான்கரை பகுதிகளில் அழிக்கப்படுகின்றபோதிலும் யானையினால் அழிக்கப்படும் எந்தப் பயிர்களுக்கும் நஸ்ட ஈட்டை வழங்க அரசாங்கம் முன்வருவதில்லையென போரதீவுப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் யோ.ரஜனி தெரிவிக்கின்றார்.

WhatsApp Image 2022 08 27 at 8.20.42 PM 1 மட்டக்களப்பில் காட்டு யானைகளின் அட்டகாசம்-மட்டு.நகரான்

தமிழர்களின் பகுதிகளில் யானைகள்  அட்டகாசம் செய்தால் வனஜீவராசிகள் திணைக்களமோ அரசாங்கமோ கண்டுகொள்வதில்லை. ஆனால் சிங்களப் பகுதிகளில் யானைகளின் அட்டகாசம் என்றால் வனஜீவராசிகள் திணைக்கள அமைச்சரே அங்குவந்து பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கையெடுப்பார். இதுதான் தற்போதை நிலையென்றார்.

இதேபோன்று மட்டக்களப்பு மாவட்டம் படுவான்கரைப் பகுதியில் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திக்கோடைக் கிராமத்தில் தனது 13 வயது மகளுடன் தனிமையில் வாழ்ந்து வரும் யுவதியின் வீட்டை காட்டு யானைகள் சேதப்படுத்தியுள்ளன.

ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து அதிலிருந்து கிடைத்த வருமானத்தில் சிறியரக வீடு ஒன்றை அரை குறையாக கட்டியுள்ளதோடு தனது உடல் சுகயீனம் காரணமாக வேலைக்குச் செல்லமுடியாத சூழலில் தனது குடும்ப வறுமை நிலமை காரணமாக தனது பிள்ளையை ஆதரவற்ற குழந்தைகளைப் பராமரிக்கும் நிலையம் ஒன்றில் விட்டு கற்பித்து வருகின்றார்.

இந்நிலையில் வெளியிடங்களுக்குச் சென்று வீட்டு வேலைகளைச் செய்து அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தில் வாழ்ந்து வரும் கவிதாவின் வீட்டை அண்மையில் காட்டு யானை தாக்கி துவம்சம் செய்துள்ளது. பாதுகாப்பு வேலிகளோ, மலசலசுட வசதியோ இன்றி வாழ்ந்து வரும் தனக்கு ஒரு மலசல கூடத்தையும், யானையால் தாக்கி அழிக்கப்பட்டுள்ள தனது வீட்டையும் புணரமைத்துத்தர யாராவது முன்வர வேண்டும் என கவிதா என்ற குறித்த யுவதி கண்ணீர் மல்க தெரிவிக்கின்றார்.

WhatsApp Image 2022 08 27 at 8.20.44 PM மட்டக்களப்பில் காட்டு யானைகளின் அட்டகாசம்-மட்டு.நகரான்

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவாங்கரைப் பகுதியில் மிக நீண்டகாலமாக காட்டுயானைகளின் அட்டகாசங்களும் தாக்குதல்கல்களும், அதிகரித்துள்ள நிலையில் காட்டுயானைகளை சரணாலயங்களுக்குக் கொண்டுசேர்க்கும் நடவடிக்கைகள் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை எனவும் பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.