பறிபோகும் கல்வியுரிமை | துரைசாமி நடராஜா

இலங்கையின் சமகால நெருக்கடிகளால் சிறுவர்கள் பெரிதும் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர். அவர்களின் கல்வி உரிமைகள் பல சந்தர்ப்பங்களில் மீறப்படுவதோடு, குடும்பத்தின் பொருளாதார அபிவிருத்தி கருதி அவர்களை தொழிற்றுறையில் ஈடுபடுத்தும் துர்ப்பாக்கிய நிலைமையும் மேலெழுந்து வருகின்றது. இவ்விடயம் தொடர்பில் மலையகப் பகுதிகளில் நாம் அதிகமாகவே கவனம் செலுத்த வேண்டியுள்ளது. வறுமையின் கோரப்பிடிக்குள் சிக்கியுள்ள இம்மக்கள் பொருளாதார மேம்பாடு கருதி, சிறுவர்களை வேலைக்கமர்த்தும் நிலைமைகள் அதிகரிக்கலாமென்றும் அச்சம் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையானது கல்வியின் மூலம் மட்டுமே மேலெழும்பவேண்டிய மலையக சமூகத்துக்கு ஒரு பலத்த அடியாகும்.

இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்களாவர். நாட்டின் முக்கிய பிரஜைகளாக சிறுவர்கள் காணப்படும் நிலையில் நாட்டின் எதிர்காலம்  இவர்களின் கைகளிலேயே தங்கி இருக்கின்றது. எனவே இவர்களின் பல்வேறு உரிமைகளையும் பாதுகாத்து எதிர்காலத்தில் சிறந்த ஒரு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு இவர்களின் பங்களிப்பைப் பெற்றுக் கொள்வது மிகவும் இன்றியமையாததாகக் காணப்படுகின்றது. எனினும் நடைமுறையில் சிறுவர் நலன்கள் எந்தளவுக்கு பேணப்படுகின்றன? என்பது கேள்விக்குறியாகவுள்ளது. உலகளாவிய ரீதியில் சிறுவர்கள் சவால்கள் பலவற்றையும் சந்தித்து வருகின்றனர். போர் நடவடிக்கைகளில் சிறுவர்கள் ஈடுபடுத்தப்படுவதோடு, அவர்களின் இனிமையான சிறுபராயமும் இதனால் பறித்தெடுக்கப்படுகின்றது. போர் மற்றும் ஏனைய விடயங்களை மையப்படுத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிப் பிரயோக நடவடிக்கைகளால் அப்பாவிச் சிறுவர்கள் உயிரிழக்கும் அபாயமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்கும் இடையிலான போரில்  பல ஆயிரக்கணக்கான சிறுவர்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வலியுறுத்துகின்றன. உலகில் தலைவிரித்தாடும் பசி, பட்டினி என்பனவும் சிறுவர்களின் உயிரிழப்பிற்கு காரணமாகவுள்ளன. இதேவேளை நிறையுணவு கிடைக்காத நிலையில் பல சிறுவர்கள் கொடிய நோய்களுக்கும் ஆளாகி வருவதும் தெரிந்த விடயமாகும்.

இலங்கையில் சிறுவர்கள் அண்மைக்காலமாக அதிகரித்த நெருக்கீடுகளுக்கு உள்ளாகி வருகின்றனர். இதனிடையே இலங்கையின் சமகால நெருக்கடியினால் சிறுவர்கள் மிகவும் மோசமான பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக யுனிசெப் சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கையில் 2.3 மில்லியன் சிறுவர்கள் அதாவது இரண்டுக்கு ஒன்று விகிதத்திலான சிறுவர்கள், போஷணை, சுகாதாரம், தூய குடிநீர், கல்வி, உளவளச்சேவை உள்ளிட்ட ஏதேனுமொரு வகையிலான அவசர உதவி தேவைப்படும் நிலையில் உள்ளனர். எனவே இவ்விடயத்தில் அவசர நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் சிறுவர்கள் மீதான மோசமான பின்விளைவுகளுடன் இந்த நிலவரம் மேலும் மோசமடையும். சிறுவர்களைப் பொறுத்தவரையில் மந்தபோஷணையானது முக்கிய அச்சுறுத்தலாக காணப்படுகின்றது. பெருமளவான சிறுவர்கள் பசியுடனேயே உறங்கச் செல்கின்றனர். இது ஏற்கனவே தெற்காசியாவில் 5 வயதுக்கும் குறைந்த சிறுவர்களில் மந்தபோஷணையுடையோரின் எண்ணிக்கையை  உயர்வாகக்கொண்டிருந்த நாடாகக் காணப்பட்ட இலங்கை மேலும் பாதிப்படைவதற்கு வழிவகுக்கும் என்று யுனிசெப் வலியுறுத்தியுள்ளது. மேலும் 1.7 மில்லியன் சிறுவர்களுக்கு உதவுவதற்கு 25.3 மில்லியன் டொலர்களையும் யுனிசெப் கோரியுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

கொரோனா உலகளாவிய ரீதியில் பல்வேறு அதிர்வலைகளையும் ஏற்படுத்தி இருந்தது. இன்னும் ஏற்படுத்தியும் வருகின்றது. கொரோனா பல சிறுவர்களைக் காவு கொண்டதோடு, அவர்களின் கல்வி உரிமைக்கும் ஆப்பு வைப்பதாக அமைந்தது. கொரோனா அச்சத்தினால் பாடசாலைகள் அவ்வப்போது மூடப்பட்ட நிலையில் மாணவர்களின் தொடர்கல்விக்கு இது இடையூறினை ஏற்படுத்தியது. மாணவர்கள் கற்றலில் ஈடுபாடின்றி இடைவிலகும் நிலைமைக்கும் இது வலுசேர்த்திருந்தது. அத்தோடு விரல்விட்டு எண்ணக்கூடிய சில உயர்வகுப்பு மாணவர்கள் பாடசாலைக் கல்வியை கைவிட்டு இல்லற பந்தத்தில் இணைந்து கொண்ட நிகழ்வுகளும் மலையகத்தில் இல்லாமலில்லை. இதேவேளை கொரோனாவால்  இடைவிலகிய மாணவர்கள் சிலர் தொழிற்றுறைகள் பலவற்றிலும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டதும் புதிய விடயமல்ல. இன்னும் சில மாணவர்கள் தொழிலின்றி அல்லல்படுவதையும்  அவதானிக்க முடிகின்றது.

 

கீழ்மட்டத் தொழில்கள்

கடந்த 2012, 13 ம் ஆண்டின் தகவல் ஒன்றிற்கமைய பாடசாலைக்கு செல்லாதோர் தொகை நகர்ப்புறங்களில் 2.2 %, கிராமங்களில் 3.5 %, பெருந்தோட்டங்களில் 12.2 வீதமாக அமைந்திருந்த நிலையில் தேசிய ரீதியில் இது 3.7 வீதமாக அமைந்திருந்தது. இதேவேளை 5 ஆம் தரம்வரை கல்விகற்றோரின் வீதமானது நகர்ப்புறம் 19.2, கிராமம் 25.0, பெருந்தோட்டம் 42.0 , என்ற ரீதியில் அமைந்திருந்ததோடு, தேசியளவில் இது 24.7 வீதமாக இருந்தது. 6 தொடக்கம் 10 ஆம் தரம் வரை கல்வி கற்றோர் வீதமானது நகர்ப்புறத்தில் 39.8, கிராமம் 44.8, பெருந்தோட்டம் 38.07 என்ற வீதத்திலும் தேசிய ரீதியில் 43.6 வீதத்திலும் காணப்பட்டது. இதேவேளை க.பொ.த. சாதாரண தரம் வரையில் கல்வி கற்றோர், நகர்ப்புறத்தில் 18.2, கிராமம் 15.5, பெருந்தோட்டம் 4.09, என்ற வீதத்திலும், க.பொ.த. உயர்தரம் வரை கல்வி கற்றோர் முறையே 20.5, 11.3, 2.2 என்ற வீதத்திலும் அமைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும். க.பொ.த. சாதாரண தரம் வரை தேசிய ரீதியில் 15.5 வீதமானோரும், க.பொ.த. உயர்தரம் வரை தேசிய ரீதியில் 12.4 வீதமானோரும் கல்வி கற்றிருந்தனர்.
பெருந்தோட்டப் பகுதிகளில் பாடசாலைக்குச் செல்லாதோர் 4  தொடக்கம் 6 மடங்கு அதிகமாகும் என்று புத்திஜீவிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். தேசிய சராசரியோடு ஒப்பிடும்போது பெருந்தோட்டப் பகுதிகளில் மக்களின்   கல்வி மட்டங்களில் அதிகரித்த வீழ்ச்சி நிலையே காணப்படுகின்றது. எல்லா நிலைகளிலும் மலையக மாணவர்கள் பின்தங்கியுள்ள நிலையில் பலர் கீழ்மட்டத் தொழில்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். தம் ஆரோக்கியம், கல்வி வளர்ச்சி என்பவற்றின் மேம்பாட்டுக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடிய வேலைகளிலிருந்து பாதுகாப்புப் பெறும் உரிமை பிள்ளைகளுக்கு உள்ளது. தொழிலில் அமர்த்துதற்குரிய குறைந்தபட்ச வயதை வரையறை செய்தலும் தொழில் நிபந்தனைகளை நெறிப்படுத்துதலும் அரசின் கடப்பாடாகும் என்று சிறுவர் உரிமை குறித்து வலியுறுத்தப்படுகின்றது. என்னதான் இருந்தாலும் சிறுவர்கள் தொழிற்றுறைகளில் ஈடுபடுத்தப்பட்டு கசக்கிப் பிழியும் நடவடிக்கைகள் இன்னும் தொடர்ந்து வண்ணமாகவேயுள்ளன.

அண்மைய தகவலொன்றின்படி பெருந்தோட்டத் துறையில் 06 – 14 வயதிற்குட்பட்ட சிறுவர்களில் 10.3 வீதமான ஆண் பிள்ளைகளும், 14.6 வீதமான பெண் பிள்ளைகளும் முழுநேரத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இதற்கமைய 12.4 வீதமான சிறுவர்கள் பெருந்தோட்டத் துறையில் முழுநேரத் தொழிலில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகின்றது. இதேவேளை 4.5வீதமான ஆண் பிள்ளைகளும், 3.1 வீதமான பெண் பிள்ளைகளும் எதுவிதமான செயற்பாடுகளிலும் ஈடுபடாது வெறுமனே தோட்டத்தில் சுற்றித் திரிவதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு சுற்றித்திரியும் பிள்ளைகளின் வீதம் மொத்தமாக 3.8 % ஆகும். சிறுவர் தொழிலாளர்களின் தொழில் வகை குறித்து நோக்குகையில் இவர்களுள் 50.5 வீதமானோர் வீட்டுப் பணியாட்களாகவும், வர்த்தக நிலையங்களில் தொழில் புரிவோர் 24.8, நாட்கூலி வேலை 16.8, கால்நடை வளர்ப்பு 2.2, ஏனைய தொழிற்றுறைகள் 5.7 என்ற வீதத்திலும் அமைந்துள்ளன. தொழில் புரியும் சிறுவர்கள் தமது தொழில் நிலைகளின்போது சவால்கள் பலவற்றையும் சந்தித்து வருகின்றனர். வேலை நேர அதிகரிப்பு, குறைவான கூலி, கலாசார ரீதியான சவால்கள், துஷ்பிரயோகங்கள் எனப்பலவும் இதில் உள்ளடங்குகின்றன. ஆண் சிறுவர்களைக் காட்டிலும் பெண் சிறுமிகள் அதிகளவான துஷ்பிரயோகங்களை எதிர்கொண்டு வருகின்றனர். கட்டித் தழுவுதல் அல்லது உடல் அழுத்தம் போன்ற தேவையற்ற உடலியல் தொடர்புகள், பாலியல் ரீதியான அனுகூலங்களை வேண்டுதல், உடன் வேலை செய்பவர்களை  காம இச்சையோடு பார்த்தல், கூடாத முறையில் பரிகாசம் செய்தல், தொழில் புரியுமிடத்தில் அரை குறையான ஆடைகளை உடுத்திருக்கும் பெண்கள் அல்லது ஆண்களின் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருத்தல் போன்ற பலவும் பாலியல் தொல்லைகளுக்குள் உள்ளடங்கும்.

பிள்ளைகள் சகல வகையான இம்சைகள், புறக்கணிப்பு ஆகியவற்றிலிருந்து பாதுகாப்புப் பெறும் உரிமையுடையவர்களாவர். பெற்றோரும் ஏனைய பராமரிப்பாளர்களும் பிள்ளைகளைத் துன்புறுத்தும் உரிமையற்றவர்களாவர். பிள்ளைகள் துஷ்பிரயோகம், புறக்கணிப்பு ஆகியவற்றுக்கு உள்ளாகாது தடுக்கவும் அவற்றிலிருந்து மீளவும் வகைசெய்யும் செயற்றிட்டங்களை பொறுப்பேற்கும் கடப்பாடு அரசினைச் சார்ந்ததாகும் என்பதும் நோக்கத்தக்கதாகும்.

ஆபத்தான நிலை

இந்நிலையில் இலங்கையில் சமகாலத்தில் பொருளாதார நெருக்கடி இறுக்கமடைந்துள்ள நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது. வறுமை, உணவுத் தட்டுப்பாடு என்பன மக்களின் உணவுப் போராட்டத்தை உக்கிரமாக்கியுள்ளது. உழைப்புக்கேற்ற ஊதியத்தைப் பெற்றுக் கொள்ள முடியாது பெரும் சவால்களுக்கு மத்தியில் வாழ்க்கையை கொண்டு நடாத்தும் மலையக மக்களின் பொருளாதாரச் சுமையை  நாட்டின் சமகால செல்நெறிகள் இரட்டிப்பாக்கியுள்ளன. இதனால் சிறுவர்களையும் தொழிலுக்கு அனுப்புவதன் ஊடாகக் குடும்பத்தின் பொருளாதாரச் சுமைக்குப் பரிகாரம் தேடும் போக்குகளும் மலையகத்தில் இல்லாமலில்லை. ஏற்கனவே மலையகச் சிறுவர்கள் பல வேலைத் தளங்களிலும் தொழிலுக்கு அமர்த்தப்பட்டு வருவதாக ஒரு குற்றச்சாட்டு இருந்து வருகின்றது. இதை இல்லை என்று மறுப்பதற்குமில்லை. கொழும்பு உள்ளிட்ட நகர்ப்புறங்களிலுள்ள தனவந்தர்களின் வீடுகளில் மலையகச் சிறார்கள் பல்வேறு சிரமங்களுடன் தொழில்புரிந்து வருகின்றனர். இந்நிலையில் பொருளாதார நெருக்கடிகளால் மலையக மக்களின் குரல்வளை அதிகமாக நெரிக்கப்பட்டு வரும் நிலையில,; சிறுவர் தொழிலாளர்களின் தொகை மேலும் அதிகமாகலாம் என்று அஞ்சப்படுகின்றது.கொரோனாவின் பின்னரான காலப்பகுதி மற்றும் சமகால நெருக்கீடுகள் என்பன பாடசாலைக் கல்வியின் ஈடுபாட்டைப் புறந்தள்ளி வருகின்ற நிலையில் சிறுவர்களின் தொழிற்றுறை ஈடுபாடு மேலோங்கிக் காணப்படுகின்றது. இது ஒரு ஆபத்தான நிலையாகும்.

ஒரு சமூகம் மேலெழும்புவதற்குக் கல்வியே பெரிதும் கை கொடுத்துள்ளது என்பதனை மறுப்பதற்கில்லை. உலக வரலாறுகளும் இதனை நிரூபித்து வருகின்றன. இந்நிலையில் மலையகச் சமூகத்தின் அபிவிருத்தியிலும் கல்வியின் வகிபாகம் அதிகமாகவே தேவைப்படுகின்றது. இந்நிலையில் சிறுவர்களின் பாடசாலைக் கல்விக்கு ஆப்பு வைத்து அவர்களைச் சிறுபராயத்திலேயே தொழில் உலகுக்கு அறிமுகப்படுத்துவதென்பது சமூகத்தின் பின்னடைவிற்கே உந்துசக்தியாக அமையும் என்பதோடு தனிப்பட்ட ரீதியிலும் அது பாதக விளைவுகளுக்கு இட்டுச் செல்வதாகவே அமையும். பாடசாலை  மாணவர் இடைவிலகலானது  சிறுவர் தொழிலிற்கான இழுவிசையை அதிகரிக்கச் செய்துள்ளது. எனவே மாணவர்களின் இடைவிலகலைத் தடுத்து நிறுத்த வேண்டிய தேவைப்பாடு காணப்படுகின்றது. இதனிடையே இடைவிலகலைக் கட்டுப்படுத்த ஒரு வழி, முன்னதாகவே அவ்வாறு இடைவிலகக்கூடிய மாணவர்களை இனம்காணுதலாகும். இதற்கு மாணவர்களின் வருகை, கல்விச் சித்தி, கல்விச் செயற்பாடுகளில் பங்கேற்பு முதலியவற்றை இனங்காணுதல் வேண்டும். இவற்றின் அடிப்படையில் நடவடிக்கைகள் முன்னதாகவே மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது புத்திஜீவிகளின் கருத்தாகவுள்ளது.

சிறுவர்களை தொழிலில் ஈடுபடுத்துவதென்பது பல்வேறு தாக்க விளைவுகளையும் ஏற்படுத்தி வருகின்றது. சமூகப் பின்னடைவோடு உடல் மற்றும் உள ரீதியான குறைபாடுகளுக்கும்  இதனால் இவர்கள் முகம் கொடுக்க வேண்டியுள்ளது. இந்நிலையில் சிறுவர்களைத் தொழில் துறையில் இருந்தும் மீட்டெடுத்து, அவர்களின் கல்வி அபிவிருத்திக்கும், அதனூடாக நாட்டின் எதிர்கால மேம்பாட்டிற்கும் வித்திடுவது ஒவ்வொருவரினதும் கடமையும் பொறுப்புமாகும் என்பதை மறந்து செயற்படுதலாகாது. இதிலிருந்தும் தவறும் பட்சத்தில் பாதக விளைவுகள் பலவற்றுக்கும் முகம் கொடுக்க வேண்டியேற்படும் என்பதையும் மறுப்பதற்கில்லை.