Home ஆய்வுகள் மீண்டும் ராஜபக்‌ஷக்கள் ஆட்சி; தமிழர் முன்னுள்ள சவால்கள்-கொழும்பிலிருந்து அகிலன்

மீண்டும் ராஜபக்‌ஷக்கள் ஆட்சி; தமிழர் முன்னுள்ள சவால்கள்-கொழும்பிலிருந்து அகிலன்

நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்று ராஜபக்ஷக்கள் ஆட்சி அமைத்து விட்டார்கள். பொதுத் தேர்தலில் இந்த பிரமாண்டமான வெற்றியை அவர்கள் பெற்றிருப்பது சிறுபான்மையினரின் இருப்புக்கான ஒரு சவால்.

அரசியலமைப்பில் தமக்குத் தேவையான மாற்றங்களைச் செய்வதற்கான அதிகாரத்தை இந்தப் பெரும்பான்மை அவர்களுக்கு வழங்கியிருக்கின்றது. அவர்களுடைய நிகழ்ச்சி நிரலின்படி பாக்கும் போது ஒருபுறம், சர்வாதிகாரத்தை நோக்கிய பாதையில் அவர்கள் பயணிப்பார்கள். மறுபுறம், ஒரு இனம், ஒரு மதம், ஒரு மொழி என்பது அவர்களுடைய இலக்காக இருக்கும்.

இந்த இரண்டும் சிறுபான்மையினரின் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கக்கூடியவை. இதனைத் தமிழ்த் தேசியம் எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றது?

அரசியலமைப்பு திருத்தம்

தேர்தல் முடிவுகளின்படி பொதுஜன பெரமுன பெற்றுக் கொண்டது 145 ஆசனங்கள். மூன்றில் இரண்டு பெரும்பான்மையான 150 ஐப் பெறுவதற்கு அவர்களுக்குத் தேவைப்படுவது மேலும் ஐந்து ஆசனங்கள் மட்டும்தான். அவர்களுடைய கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களான டக்ளஸ் தேவானந்தா ஈ.பி.டி.பி. பெற்ற இரண்டு, அங்கஜன் இராமநாதன், பிள்ளையான், அதாவுல்லா ஆகியோர் ராஜபக்‌ஷக்களுடனேயே இருப்பதால் மூன்றில் இரண்டு அவர்களுக்குள்ளது.

மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு எதிரணியிலுள்ள யாரையும் நம்பியிருக்க வேண்டிய தேவை ராஜபக்‌ஷக்களுக்கு இருக்கப் போவதில்லை. அதனால், தாம் விரும்பிய அரசியலமைப்பு மாற்றத்தைக் கொண்டு வருவதில் அவர்களுக்கு சவால்கள் இல்லை.urn newsml afp.com 20200812 6e 0 மீண்டும் ராஜபக்‌ஷக்கள் ஆட்சி; தமிழர் முன்னுள்ள சவால்கள்-கொழும்பிலிருந்து அகிலன்

“அரசியலமைப்பை மாற்றுவதற்குத் தேவையான மூன்றில் இரண்டை வழங்குங்கள்” என்பதுதான் தேர்தல் பரப்புரைகளின் போது பொதுஜன பெரமுனையின் பிரதான கோரிக்கையாக இருந்தது. இப்போது அந்தப் பெரும்பான்மை உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. வரப்போகும் அரசியலமைப்பு மாற்றம் எவ்வாறானதாக இருக்கும்? என்பதுதான் இங்கு எழும் கேள்வி.

19 ஆவது திருத்தம் நீக்கம்?

19 ஆவது திருத்தம்தான் தமக்குக் கால்கட்டைப் போட்டது என்பது ராஜபக்‌ஷக்களின் முன்னைய குற்றச்சாட்டு. ராஜபக்‌ஷக்கள் மீண்டும் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதைத் தடுப்பதற்காக இந்தத் திருத்தத்தை நன்கு திட்டமிட்டு 2015 இல் கொண்டுவந்தவர் ரணில். அந்தத் தடைகளைத் தாண்டி ராஜபக்‌ஷக்கள் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றிவிட்டார்கள்.

19ஆவது திருத்தம் ஜனாதிபதிக்கான அதிகாரங்களை வெகுவாகக் குறைத்தது. சுதந்திர ஆணைக் குழுக்களுக்கு அதிகாரங்களைக் கொடுத்தது. பாராளுமன்றத்தைப் பலப்படுத்தியது. 19ஆவது திருத்தம் மாற்றியமைக்கப்படும் என ராஜபக்‌ஷக்கள் பொதுவாகச் சொன்னாலும், அதில் சில பிரச்சினைகள் உள்ளன. காரணம்- ஜனாதிபதிக்கான அதிகாரங்களை மீளக்கொடுப்பதென்றால் – பிரதமர் பலவீனப்படுத்தப்படுவார். இது ஜனாதிபதி – பிரதமர் முரண்பாட்டுக்கு வழிவகுத்து விடலாம்.

அதனால், அந்த விடயங்களைத் தவிர்த்து சுயாதீனக் குழுக்களுக்கான அதிகாரங்கள் மீது கைவைக்கப்படலாம். அவை குறித்து அரச தரப்பு ஏற்கனவே ஆராயத் தொடங்கி விட்டது. அது சர்வாதிகாரத்தை நோக்கி நாட்டைக் கொண்டு செல்வதற்கு வழிவகுக்கும். ராஜபக்‌ஷக்களின் முன்னைய ஆட்சி கூட (2005-2015) சர்வாதிகார ஆட்சி எனவும், குடும்ப ஆட்சி எனவும் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. இப்போது இராணுவப் பின்னணியைக் கொண்ட கோட்டாபய ஜனாதிபதியாக இருப்பதால், அதனைவிட மோசமான ஒரு நிலையை நோக்கி நாடு செல்லலாம்.

13 ஆவது திருத்தத்தின் கதி?

அடுத்ததாக எழுப்பப்படும் கேள்வி 13 ஆவது திருத்தத்துக்கு என்ன நடக்கும் என்பது. தமிழ் மக்களைப் பொறுத்தவரையில், அவர்களுடைய அபிலாஷைகளை நிறைவேற்றுவதாக அது இல்லை என்பது உண்மைதான். ஆனால், அதிகாரப் பரவலாக்கலுக்காக இருக்கக்கூடிய ஒரேயொரு பொறிமுறை அதுதான். அந்த வகையில்தான் தமிழ்க் கட்சிகள் அதனை ஏற்றுக் கொண்டு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுகின்றன.

இவ்விடயத்தில் இரண்டு விதமான கருத்துக்கள் அரச தரப்பில் இருக்கின்றது. கோட்டாபய, 13 ஆவது திருத்தம் நீக்கப்பட்டு, மாகாண சபை முறை இல்லாமல் செய்யப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளார். அதனை அவர் வெளிப்படையாகவும் சொல்லியிருக்கின்றார். கோட்டாவை அரசியலுக்குக் கொண்டு வந்த சிங்கள தேசியவாத – புத்திஜீவிகளின் அமைப்பான ‘வியத்மக’ இந்த நிலைப்பாட்டைத்தான் கொண்டிருக்கின்றது.

மஹிந்த ராஜபக்‌ஷவோ மாகாண சபை முறை தொடர வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கின்றார். ஆனால், 13 ஆவது திருத்தத்தின் மூலமாக மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் காணி, பொலிஸ் போன்ற அதிகாரங்கள் நீக்கப்பட வேண்டும் என்பது அவரது நிலைப்பாடு. அது தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தானது என அவர் வாதிடுகின்றார். ஆக, அதிகாரம் இல்லாத மாகாண சபை முறை ஒன்றுதான் மஹிந்தவின் விருப்பம். அதனை இல்லாதொழிப்பது இந்தியாவுடனான உறவுகளைப் பாதிக்கலாம் என அவர் கருதலாம்.

இந்த நிலையில், வரக்கூடிய அரசியலமைப்புத் திருத்தம் மாகாண சபைகளின் அதிகாரங்களில் கைவைப்பதாக இருக்கும் என நிச்சயமாக நம்பலாம். மாகாண சபை முறையை முற்றாக இல்லாமல் செய்யாமல். அதனைப் பலனீப்படுத்துவதன் மூலம் சிங்கள – பௌத்த கடும் போக்காளர்களைத் திருப்திப்படுத்த அரசாங்கம் முயற்சிக்கும்.

தமிழ்த் தரப்பின் நிலை

சிங்கள பௌத்த தேசியவாதப் பாதையில்தான் இந்த அரசாங்கம் செல்லும் என்பது வெளிப்படையாகத் தெரிகின்றது. தொல்பொருட்களைப் பாதுகாப்பதற்கான செயலணி போன்றன இந்த ஆபத்தை உணர்த்தும் ஏனைய விடயங்களாகும்.

அரசுடன் இணைந்திருக்கப்போகும் தமிழர்களான டக்ளஸ், அங்கையன், பிள்ளையான், வியாழேந்திரன் போன்றவர்களால் இதற்கு எதிராக ஒரு துரும்பைக் கூட நகர்த்த முடியாது. தொல்பொருள்ள செலணிக்கு தமிழர் ஒருவரை நியமிக்குமாறு டக்ளஸ் முன்வைத்த கோரிக்கையை ஜனாதிபதி பரிசீலிக்கக்கூட தயாராக இருக்கவில்லை. டக்ளஸ் அதன் பின்னர் மௌனமாகி விட்டார்.

சர்வதேச அரங்கிலும் தமிழர்கள் பலவீனப்படப் போகின்றார்கள். வடக்கில் சிறீலங்கா சுதந்திரக் கட்சி ஒரு ஆசனத்தைப் பெற்றிருக்கின்றது. மக்கள் கணிசமாக அந்தக் கட்சிக்கு வாக்களித்துள்ளார்கள். ஈ.பி.டி.பி. இரண்டு ஆசனங்களைப் பெற்றிருக்கின்றது. கிழக்கிலும் அரச தரப்பின் வெற்றி அமோகமாக உள்ளது.

இது தமிழ் மக்கள் தம்முடன் இருக்கின்றார்கள் என சர்வதேச அரங்கில் காட்டிக் கொள்வதற்கான வாய்ப்பை அரசுக்குக் கொடுத்திருக்கின்றது. ஜெனீவா போன்ற சர்வதச அரங்குகளில் இலங்கை அரசுக்கு எதிராக இருக்கக்கூடிய நிலைப்பாட்டை இது பலவீனப்படுத்தி விடும். ஆக, சர்வதேச அரங்கும் இலங்கைக்கு ஆதரவாக செயற்படும் நிலை உருவாகின்றது.

இந்த நெருக்கடிகளை எதிர்கொள்வதற்கு தமிழ்த் தரப்பு தம்மைத் தயார்படுத்த வேண்டிய தேவை உள்ளது. சிதறிப் போயுள்ள தமிழ்க் கட்சிகள் இதனை எப்படிச்  சாதிக்கப் போகின்றன?

Exit mobile version