சமஷ்டி அடிப்படையில் பேசத்தயார் என்பதை ஜனாதிபதி அறிவிக்க வேண்டும் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

தமிழ் மக்களின் அதிகாரப்பகிர்வு தொடர்பான பேச்சுவார்த்தையை சமஷ்டி அடிப்படையில் முன்னெடுப்பதற்கு தயார் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பகிரங்கமாக அறிவித்தால் நாம் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்கு தயராகவுள்ளோம் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நிபந்தனை விதித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் எம்.பிக்களுடன் அதிகாரப்பகிர்வு உட்பட வடக்கு மாகாண அபிவிருத்தி உட்பட வடக்கு மக்கள் சார்ந்த பிரச்சினைகள் தொடர்பில் எதிர்வரும் 11ஆம் திகதி முதல் பேச்சுக்களை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.

இந்நிலையில், அந்த அழைப்பினை ஏற்றுக்கொண்டு குறித்த தொடர்பேச்சுவார்த்தையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பங்கேற்குமா என்பது தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பேச்சுவார்த்தைக்கான அழைப்பு தொடர்பில் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியமாகின்றது.

அவர் மக்கள் ஆணையற்ற ஒருவர். இவ்வாறான பேச்சுவார்த்தைகளைச் செய்வதன் ஊடாக அவர் தனக்கான அங்கீகாரத்தினை உறுதிப்படுத்திக்கொள்வதற்கு முனைகின்றார் என்பது முதலாவது விடயமாகின்றது.

இதேநேரம், சுதந்திரதினத்திற்கு முன்னதாக தீர்வை வழங்குவேன் என்று கூறி அதற்கு முன்னதாக முன்னெடுத்த பேச்சுவார்த்தைகளின்போது அவர் ஒற்றையாட்சிக்குள் 13ஆவது திருத்தினை அடிப்படையாக வைத்தே இனப்பிரச்சினைக்கு தீர்வினை வழங்க முடியும் என்று கூறினார். அதன் பின்னர் பௌத்த தேரர்கள் போராட்டத்தினை முன்னெடுத்தபோது அந்த விடயத்தினையும் கைவிட்டுள்ளார்.

அத்துடன், எம்முடன் நடத்திய பேச்சின்போது, இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து அவர் மாவட்ட சபை அடிப்படையிலேயே தீர்வினை வழங்கும் மனோநிலையிலேயே இருந்தார் என்பதை அறிந்துகொண்டுள்ளோம்.

இவ்வாறானதொரு பின்னணியை உடைய நபரின் அழைப்பினை ஏற்று நாம் எவ்வாறு பேச்சுவார்த்தையில் பங்கேற்பது என்பது பெருங்கேள்வியாகும்.

அதேநேரம், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இதய சுத்தியுடன் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு விரும்புவாராக இருந்தால், எமது மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவேன் என்ற ஆகக்குறைந்த நம்பிக்கையை வெளிப்படுத்தும் வகையில், சமஷ்டி அடிப்படையில் அதிகாரங்களை பகிர்ந்தளிப்பது தொடர்பில் தமிழ் மக்களின் பிரதிநிதிகளுடன் பேசப்போகின்றேன்’ என்பதை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம்.

இந்த விடயத்தினை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிறைவேற்றுவாராக இருந்தால் நாம் பேச்சுவார்த்தை மேசையில் அமர்வதற்கு தயாராக உள்ளோம் என்றார்.