வடகிழக்கு மக்களிற்கு சுயநிர்ணய உரிமை வழங்கப்படுதல் வேண்டும் – விக்னேஷ்வரன் 

தமிழர்களின் இனப்பிரச்சினையினை தீர்ப்பதற்கு 13 ஆவது திருத்த சட்டத்தினை அமுல்படுத்த வேண்டும். எனவும் அத்தோடு சுயநிர்ணய உரிமையை வழங்கும் அரசியல் யாப்பினை வழங்க வேண்டும் எனவும் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் யாழிலுள்ள தனது கட்சி அலுவலகத்தில் ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

தமிழ் மக்களினுடைய பிரச்சினையை வருட இறுதிக்குள்  தீர்ப்பதாக  ஜனாதிபதி  கூறியதை நான் வரவேற்கின்றேன் .ஆனால் 75 வருட பிரச்சினையை ஜனாதிபதி  இந்த 7 மாதத்துக்குள் அல்லது 6 மாதத்துக்குள் எப்படி தீர்க்க போகின்றார் என்பது தான் பிரச்சினை.

பிரச்னைக்கு தீர்வு ஜனாதிபதி எங்களுக்கு தரும் சில சலுகைகளை நாங்கள் ஏற்றுக்கொள்வதல்ல மாறாக எங்களுக்கு தேவையான உரிமைகளை , உரித்துக்களை அவர் வழங்க வேண்டும் என்பதே  எங்களுடைய கோரிக்கை.

13 வது திருத்த சட்டம் எங்களுடைய பிரச்சனைக்கு தீர்வாகாது. ஒருவேளை பதிமூன்றாவது திருத்த சட்டத்தை அமுல்படுத்துவதற்கு ஜனாதிபதி  முன்வருவதாக இருந்தால் அது ஒரு தற்காலிக நிலைமையை சமாளிக்கவே முடியும் மாறாக  அதை வைத்து தமிழ் மக்களுடைய பிரச்சினையை தீர்த்துக்கொள்ள எண்ணினால் அது பிழையாகும் .

காரணம் தற்போது ஒற்றையாட்சியின் கீழ் 7 மாகாணங்களின் பெரும்பான்மையாக இருக்கும் சிங்கள மக்கள் 2 மாகாணங்களில் பெரும்பான்மையாக இருக்கும் தமிழ் பேசும் மக்களை ஒரு அடிமைகள் போன்று நடத்திக்கொண்டு வருகின்றார்கள்.

அவர்களுடைய உரிமைகளை அவர்களுக்கு கொடுக்காது பல விதங்களில் அவர்களை மேலெழ விடாத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றார்கள் .

ஒரு முன்னைய முதலமைச்சர் என்ற வகையிலே அதை நான் கூற முடியும் ஏன் என்றால் நாங்கள் எங்களுடைய மக்களுடைய நாள் வாழ்வுக்கான  பல திட்டங்களிலே ஈடுபட்ட  போதும் அவற்றை நடைமுறைப்படுத்த முடியாமல் அதற்கு பல தடங்கல்களையும் தந்து எங்களை எல்லா விதத்திலும் கட்டி ஆள நினைப்பதே  முன்னேற  முடியாமல் போயுள்ளது.

ஆகவே தமிழ் மக்களுடைய பிரச்சனைகளை தீர்ப்பதாக இருந்தால்  வடகிழக்கு மாகாணங்களில் இருக்கும் மக்களுக்கு சுய உரிமையை வழங்க வேண்டும் . அது ஒன்றினால்  மட்டுமே இந்த பிரச்சினையை தீர்க்க முடியும்.

ஆனால், 13 வது திருத்தச் சட்டத்தை கொண்டு வந்து அதனை நான் நடைமுறைப்படுத்தப் போகின்றேன் என்று தான் சில காலத்துக்கு முன்பு அவர் குறிப்பிட்டிருந்தார் .அதை ஒரு தீர்வாக அவர் நினைப்பாராக இருந்தால் அது தீர்வாகாது என்பதை நான் ஆணித்தரமாக இங்கு கூறுகின்றேன் .