ஆப்கனில் தலிபான்களின் புதிய ஆட்சி: ஒரு பெண்ணுக்கு கூட  அமைச்சரவையில் இடம் இல்லை

ஆப்கனில் தலிபான்களின் புதிய ஆட்சி

ஆப்கனில் தலிபான்களின் புதிய ஆட்சி: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசை அகற்றிய தலிபான்கள், இடைக்கால இஸ்லாமிய எமிரேட் அரசை நிறுவப்போவதாக அறிவித்துள்ளனர், அதற்கான அமைச்சரவைப் பட்டியலையும் அறிவித்துள்ளனர்.

தலிபான்கள் அறிவித்துள்ள அமைச்சரவையில் ஒரு பெண் கூட இல்லை. கடந்த முறையைப் போன்று ஆட்சி இருக்காது, பெண்களுக்கான உரிமைகள் வழங்கப்படும், கல்வி உரிமை, வேலைக்குச் செல்லும் உரிமை போன்றவை வழங்கப்படும் என்று தலிபான்கள் அறிவித்த நிலையில் அமைச்சரவையில் ஒரு பெண் கூட  இடம்பெறவில்லை.

அமைச்சரவையில் இடம் பெற்ற பெரும்பாலான தலிபான்கள், தீவிரமான அடிப்படைவாதிகள், மதக்கோட்பாடுகளையும், அரசியல் விதிகளையும் சிறிதுகூட விலகாமல் கடினமாகக் கடைபிடிக்கக்கூடியவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கனில் அமையும் இடைக்கால இஸ்லாமிய எமிரேட் அரசில் 33 பேர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். தேவைப்பட்டால் அடுத்தடுத்து அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என்று தலிபான் செய்தித்தொடர்பாளர் சைஹைல் ஷாகீன் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கனின் பிரதமராக முல்லா முகமது ஹசன் அகுந்த் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு துணையாக முல்லா அப்துல் கனி பராதரும், மவுளவி அப்துல் சலாம் ஹனாபி நியமிக்கப்பட்டுள்ளனர்.

யார் இந்த முல்லா முகமது ஹசன் அகுந்த்?

தலிபான் இயக்கத்தை நிறுவியவர்களில் முக்கியமானவரான முல்லா ஒமரின் கூட்டாளியாக இருந்தவர் முல்லா மொஹம்மத் ஹஸன் அகுந்த்.

1996 முதல் 2001 வரை ஆப்கானிஸ்தானை தலிபான் ஆண்டபோது, துணை பிரதமர் மற்றும் வெளியுறவு அமைச்சர் பதவியை வகித்தவர். முந்தைய தலிபான் ஆளுகையின்போது கந்தஹார் மாகாண ஆளுநராகவும்  இருந்துள்ளார்.

இவரை பிரதமர் பதவிக்கு தலிபான் அதிஉயர் தலைவர் ஹெபடுலா  அகுந்த்ஸாதா தேர்வு செய்திருக்கலாம் என  தெரிவிக்கப்படுகின்றது.

பிரிட்டன் அரசு தடை விதித்துள்ளவர்களின் ஆவணங்களின்படி இவர் கந்தஹார் மாகாணம், மியால் பகுதி, ஸ்பின் போத்லாக் மாவட்டத்தில் பிறந்தவர், இவரது வயது 58. நூர்சாய் பழங்குடியைச் சேர்ந்தவர்.

முல்லா ஹஸ்ஸன் அகுந்த், ஐ.நா பயங்கரவாதிகள் பட்டியலில் இருப்பவர். அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ தேடப்படும் பயங்கரவாதிகள் பட்டியலிலும் இவர் உள்ளார்.

ilakku-Weekly-Epaper-146-September-05-2021