Home அறிவாயுதம் மக்களின் வாழ்வில் தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வின் அவசியம்

மக்களின் வாழ்வில் தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வின் அவசியம்

தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வின் அவசியம்

குடும்ப உறவுகளையே மறந்து திரிந்த நம்மவர்களைக் குடும்பத்துடன் இணைத்து வைத்த பெருமை கொரோனா வைரஸ் இனையே சாரும்; என்றாலும் அதற்காக நாம் கொடுத்துக் கொண்டிருக்கின்ற ஈடு என்பது எல்லோரது மனங்களிலும், வாழ்விலும் மீள முடியாத அளவிற்குப் பாதிப்பினை ஏற்படுத்தியிருக்கின்றது என்பதே உண்மை.

மனிதர்களின் ஒவ்வொரு வளர்ச்சிப் படிநிலைகளில் இருப்பவர்களும் இப் பாதிப்பினை ஏதோ ஒரு வகையில் எதிர்கொண்டு வருகின்றனர். கர்ப்பத்தில் இருக்கும் குழந்தை முதல் வாழ்வின் இறுதிப் படி நிலையில் இருக்கும் முதியவர்கள் வரை கொரோனாவை எதிர்த்துப் போராட வேண்டிய தேவை இருக்கின்றது. நாட்டினை முடக்கிக் கொண்டிருக்கும் இவ் வைரஸ் பரவலினை எதிர்த்து உலகமே ஒன்று திரண்டு போராடிக் கொண்டிருக்கும் தருணத்தில், மக்களின் ஆதரவு என்பது அவசியமான ஒன்றாக பார்க்கப்படுகின்றது. கொரோனா இறப்புக்கள் ஐந்தாயிரத்தைக் கடந்த நிலையில், மக்களிடம் இந் நோய் தொற்று குறித்த அச்ச நிலை என்பது, அதன் ஆரம்ப கட்ட பரவலின் போது காணப்பட்டதை விட குறைவாகவே காணப்படுகின்றது எனலாம்.

பூரண கதவடைப்பினைத் தொடர்ந்து ஏற்பட்ட ஆலயத் திறப்பு, திருமணக் கொண்டாட்டங்கள் மற்றும் நிகழ்வுகளின் வாயிலாக கொரோனா மத்தியில் அதனை பற்றிய அச்ச உணர்வுகளுடனே வாழ்வதற்கு பழகிக் கொண்டனர் என்றே கூற வேண்டும். அதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று கொரோனா தடுப்பூசியின் விநியோகம். சுகாதார நடைமுறைகளுக்கு ஏற்ப கோவில்களும், பாடசாலைகளும் நாளாந்த நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில், கொரோனா வைரஸ் இன் திரிபடைந்த வைரஸ் தொற்றுக்களின் அதிகரிப்பு என்பது கொரோனாவின் முதலாம் அலையின் போது ஏற்பட்ட தொற்றுக்கள் மற்றும் இறப்புக்களை விட மிகவும் அதிகளவில் ஏற்பட்டுக் கொண்டு இருக்கின்றது.

இந்த இக்கட்டான நிலையில்,  நாட்டு மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி கிடைக்கச் செய்வதற்காக, அரசு பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகின்றது. ஆனால் இதனை மக்கள் முழுமையாக பெற்றுக் கொள்கின்றனரா என்பதே இன்று எம் கண் முன் தோன்றுகின்ற முக்கியமான வினாவாகக் காணப்படுகின்றது. அனைத்து பிரிவினருக்கும் ஒரே நேரத்தில் தடுப்பூசியை வழங்க முடியாது போனாலும் அதிகளவு பாதிப்புறும் பிரிவினருக்கு உதாரணமாக முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் என்றவாறாக தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வின் அவசியம்இருப்பினும் இத் கொரோனா தடுப்பூசியினை அனேகமானோர் பெற்றுக்கொள்ள முன்வருவதில்லை. காரணம் தடுப்பூசி குறித்த முற்சாய்வான எண்ணங்கள், தவறான தகவல் பரிமாற்றம், ஊடகங்கள் மூலம் பரப்பப்படும் கருத்துக்கள் மக்கள் மனதில் அச்சம் மற்றும் தடுப்பூசி குறித்த தவறான கருத்துக்களை தோற்றுவிக்கின்றமை, தடுப்பூசி குறித்த பூரண விளக்கம் இன்மை, குடும்ப ரீதியான அதிகரித்த பொறுப்பு போன்றன காணப்படுகின்றன. கடந்த ஆண்டு தொடக்கம் கொரோனா வைரஸ் தொற்றினால் அதிகளவு மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்ற நிலையில், கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளுமாறு இலங்கை அரசு மக்களுக்கு அறிவித்தல் விடுத்திருக்கின்றது. இருப்பினும் மக்களிடையே காணப்படுகின்ற தவறான புரிதல் காரணமாக மக்கள் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முன்வரும் விகிதம் குறைவாகவே காணப்படுகின்றது.

இன்று மக்கள் அதிகளவு தகவல்களை ஸ்மார்ட் போன் ஊடாகவே பெற்றுக் கொள்கின்றனர். இருப்பினும் வறிய மக்களினாலும், அடிப்படை தேவைகளை மட்டும் பூர்த்தி செய்யக்கூடிய நிலையில் இருப்பவர்களாலும் ஸ்மார்ட் போன் இனைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் காணப்படுகின்றனர். இவர்கள் வானொலி மற்றும் பத்திரிகைகள் ஊடாகவும் சமூகத்தவர்கள் மூலமாக பரப்பப்படும் தகவல்கள் ஊடாகவும் மட்டுமே பெற்றுக்கொள்ள முடிகின்றது. இந் நிலையில் சுகாதாரப் பணியாளர்களினால் வழங்கப்படும் தகவல்கள் உரிய முறையில் மக்களிடம் சென்றடையாத போது, கொரோனா தடுப்பூசியை உரிய முறையில் பெற்றுக்கொள்கின்ற மக்களின் சதவிகிதம் குறைவடைகின்றது.

சமூக வலைத் தளங்களிலும், வாட்ஸ் அப் தளங்களிலும் தவறான கருத்துக்கள் பரப்பப்படுகின்றது. இவை மிக விரைவாகவே அதிகளவு மக்களிடம் சென்றடைகின்றது. இதே போன்று கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டால் இரண்டு மூன்று நாட்களுக்கு ஓய்வெடுக்க வேண்டும் என்கின்ற நிலையில் குடும்ப பொறுப்புடன் இருக்கின்ற குடும்ப பெண்களோ அல்லது கூலி வேலைக்கு செல்லும் ஆண்களோ தமது உடல் நிலையில் கவனம் செலுத்தாது குடும்ப பொறுப்பு காரணமாக தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முன்வராது போகின்ற நிலையும் காணப்படுகின்றது. இது மட்டும் இன்றி, பெண்கள் ஆண்களில் தங்கியிருக்கின்ற நிலையில் பெண்கள் தமக்கு விரும்பிய வகையில் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியாமலும் ஆண்களின் முடிவுகளில் தங்கியிருக்க வேண்டிய நிலையிலும் காணப்படுகின்றனர்.

கொரோனா தடுப்பூசியைப் பெற வேண்டும் எனும் அரசின் முன்வைப்புக்களுக்கு மேலாக தடுப்பூசிகளுக்கு எதிரான பிரசாரமும், அறிவியலுக்கு புறம்பான தகவல்களும் கொரோனா வைரஸ் பரவலுக்கு மேலாக ஆபத்தான வகையில் மிக வேகமாக பரவுவதுடன் தவறான புரிதல்களை மக்கள் மனங்களில் விதைக்கக் கூடிய கருத்துக்கள் வலைத்தளங்கள் ஊடாக பரப்பப்பட்டு வருகின்றன.   மேலும் தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டாலும் சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்கின்ற நிலையில், அது குறித்த பூரண விளக்கம் இல்லாதவர்கள் தடுப்பூசியை அலட்சியம் செய்கின்ற நிலை ஏற்படுகின்றது. அதே போன்று தடுப்பூசி குறித்த பூரண விளக்கத்தை மக்களிடம் உரிய முறையில் கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பு எம் ஒவ்வொருவருக்கும் காணப்படுகின்றது. அதே போல் ஊடகங்கள் இதில் பெரும் பங்கு வகிக்கின்றன.

கொரோனா மரணங்கள் பற்றியும் தொற்றுக்கள் குறித்தும் ஒவ்வொரு மணி நேரமும் இடைவிடாது தகவல்களை மக்களுக்கு பரிமாற்றம் செய்கின்ற ஊடகங்கள் கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்கள் பற்றியும் கொரோனா தடுப்பூசியின் முக்கியத்துவம் பற்றியும் அது குறித்த பூரண விளக்கங்களையும் மக்களுக்கு வழங்க வேண்டும். இது மக்களிடம் கொரோனா தடுப்பூசி குறித்த நேர்நிலையான எண்ணப்பாங்குகளை தோற்றுவிக்கும். இதே போன்று பல்வேறு சமூகப்பணியாளர்கள் இவ் இக்கட்டான நிலையிலும் மக்களுக்கு தம்மால் முடிந்த சேவைகளினை வழங்கும் தொண்டு நிறுவனங்களும் இணைந்து கிராமப் புறங்களுக்கு சென்று துண்டுப்பிரசுரங்கள் மூலமாகவோ அல்லது சுவரொட்டிகள், சிறு சிறு நாடகங்கள் ஊடாகவோ கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை உரிய முறையில் கொண்டு சேர்க்க தம்மால் முடிந்த முயற்சிகளை செய்ய வேண்டும்.

இன்றைய நிலைமையினை பொறுத்த வரையிலும் மக்கள் அன்றாட நடவடிக்கைகளுக்கு வெளியே செல்ல வேண்டியதாக இருப்பினும் கொரோனா கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொண்டதற்கான அட்டை வைத்திருக்க வேண்டும் என்கின்ற நிலை ஒரு புறம் காணப்பட்டாலும், அரசு இவ்வாறாக நடவடிக்கைகளை மேற்கொள்ள முக்கிய காரணமாக அமைவது கொரோனா தடுப்பூசியை மக்களிடம் முழுமையான முறையில் கொண்டு சென்று சேர்க்க வேண்டும் என்பதே ஆகும். இந்த நிலையில் மக்களுக்கு  கொரோனா தடுப்பூசி குறித்த பூரணமான விளக்கங்களை வளங்குவதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பது அவசியமான ஒன்றாகப் பார்க்கப்படுகின்றது. (எங்கு சென்று கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக்கொள் முடியும், முதல் கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொண்ட பின்னர் இரண்டாவது கொரோனா கொரோனா தடுப்பூசியை எவ்வளவு கால இடைவெளிகளில் பெற்றுக் கொள்ள வேண்டும், கொரோனா தடுப்பூசிகள் என்ன காரணத்திற்காக வழங்கப்படுகின்றன, கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக் கொள்வதனால் ஏற்படும் பயன்கள் என்ன போன்ற விடயங்களை மக்களுக்கு தெளிவு படுத்துவதென்பது அவசியமானதொன்றாகப் பார்க்கப் படுகின்றது.)

வேலம்புராசன்.விதுஜா

சமூகவியல் துறை

யாழ் பல்கலைக்கழகம்

Exit mobile version