பொது மக்களின் தொழில் உரிமையை இராணுவத்தினர் தடுக்க முடியாது

பொது மக்களின் தொழில் உரிமையை இராணுவத்தினர் தடுக்க முடியாது

பொது மக்களின் தொழில் உரிமையை இராணுவத்தினர் தடுக்க முடியாது  என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

அரசியலமைப்பு சட்டத்தின் உறுப்புரை 14 இன் கீழ் சிவிலியன்களிற்கு இருக்கும் சட்டபூர்வமான தொழில் செய்யும் உரிமையை தடுப்பதற்கு இராணுவத்தினருக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் இராணுவத்தினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன் அவ்வாறான நடவடிக்கை சிவிலியன்களின் அடிப்படை உரிமை மீறல்களாக கருதப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றையதினம் (30) ஆணைக்குழுவின் திருகோணமலை பிராந்திய காரியாலயத்தில் இடம்பெற்ற விசாரணைகளை அடுத்தே குறித்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது,

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

புல்மோட்டை பகுதியில் செங்கற் சூழை நடாத்தி வந்த 4 பிள்ளைகள் கொண்ட குடும்பஸ்தர் ஒருவர் நான்கு வருடமாக குச்சவெளி பிரதேச சபையின் அனுமதியினை பெற்று அவருடைய உறவினர் ஒருவரின் காணியில் சிறியளவிலான செங்கல் சூழை ஒன்றினை நாடாத்தி வந்துள்ளார். எனினும் அப்பகுதியில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினருக்கும் அவருக்கும் இடையில் எழுந்த தனிப்பட்ட பிரச்சினைகளை அடுத்து குறித்த குடும்பஸ்தர் தொழில் செய்யும் இடத்திற்கு சென்ற இராணுவத்தினர் அவரை தொடர்ச்சியாக அச்சுறுத்தி வந்துள்ளதுடன் அவரை குறித்த தொழில் செய்யும் பகுதியில் இருந்து பொருட்களையும், தொழிலையும் அப்புறப்படுத்துமாறு தெரிவித்துள்ளனர்.

அப்பகுதியில் சுமார் 15 நபர்கள் செங்கல் சூழை நாடாத்தி வருகின்ற போதிலும் குறித்த குடும்பஸ்தர் தம்மை மட்டும் இராணுவத்தினர் தொழில் செய்யாது தடுப்பதாக அச்சமடைந்த குடும்பஸ்தர், புல்மோட்டை காவல் நிலையத்தின் கவனத்திற்கு கொண்டுவந்த போதும் அவர்களால் போதுமான நடவடிக்கை எவையும் எடுக்கப்படவில்லை.   இதையடுத்து குறித்த பிரச்சினை தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த முறைப்பாடு நேற்று ஆணைக்குழுவினால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குறித்த பொதுமக்களுக்கு அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் உள்ள சட்ட பூர்வ தொழில் அடிப்படை உரிமையை இராணுவத்தினர் தடுக்க முடியாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ilakku Weekly Epaper 158 November 28 2021 Ad பொது மக்களின் தொழில் உரிமையை இராணுவத்தினர் தடுக்க முடியாது