மட்டக்களப்பு மேய்ச்சல் தரைப்பகுதியில் மாடுகளை படுகொலை செய்யும் பெரும்பான்மையினர்- தீர்வின்றித் தொடரும் நில அபகரிப்பு

கிழக்கு மாகாணத்தினை பாதுகாக்கவேண்டும் என்ற கோரிக்கை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. இதுவரை காலமும் கிழக்கு மாகாணத்தினை பாதுகாப்பதற்கு தமிழ் தேசிய சக்திகளினால் எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படாத நிலையில் அங்குள்ள தமிழ் மக்கள் தொடர்ச்சியான கோரிக்கைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகம் என்ற கொள்கையென்பது தமிழ் தேசியத்தின் தாரகமந்திரமாகவுள்ள நிலையில் தமிழ் தேசிய பரப்பில் உள்ள கட்சிகள் அதிகளவில் வடக்கினை முன்னிறுத்திய செயற்பாடுகளையே அதிகளவில் முன்னெடுத்துவருகின்றனர்.

அதேபோன்று தமிழ் தேசிய பரப்பில் செயற்படும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் அதிகளவில் வடக்கு நோக்கியதான செயற்பாடுகளையே முன்னெடுத்து வருகின்றனர்.கிழக்கு மாகாணம் தொடர்பில் எந்தவிதமான செயற்பாடுகளையும் முன்னெடுக்கும் நிலையினை காணமுடியவில்லை.

அண்மையில் நடைபெற்ற கறுப்பு சுதந்திர தினம் வடக்கிலிருந்து கிழக்கு நோக்கியதான எழுச்சிப்பேரணியின்போது மட்டுமே கிழக்கு தொடர்பில் பேசப்பட்டதே தவிர அதன் பின்னர் யாரும் கிழக்கினை கண்டுகொள்ளும் நிலைமையில் இல்லையென்பதே உண்மையாகும்.கிழக்கில் உள்ள தமிழ் தேசிய அரசியல் சக்திகள் மட்டும் ஓரளவு கிழக்கில் உள்ள பிரச்சினைகளை பேசும்  நிலைமை காணப்படுகின்றதே தவிர அதனைதாண்டிய குரல்கள் ஒலிக்கும் நிலைமையினை காணமுடியவில்லை.

குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் மேய்ச்சல்தரை பண்ணையாளர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடி நிலைமையென்பது பாரதூரமானதாகயிருந்து வருகின்றது. அதிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேய்ச்சல் தரை காணிகளை பெரும்பான்மையினத்தவர்கள் ஆக்கிரமிக்கும் செயற்பாடுகளினால் பண்ணையாளர்கள் தொடர்ச்சியாக நெருக்கடிகளை எதிர்கொண்டுவரும் நிலையில் அவற்றினை தடுப்பதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

யுத்தகாலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதுகாக்கப்பட்ட காணிகள் இன்று மிகவும் திட்டமிட்ட வகையில் பெரும்பான்மை சமூகத்தினால் அபகரிக்கப்படும் நிலைமையினை காணமுடிகின்றது. தமிழர்களின் பொருளாதாரம் சார்ந்த பகுதிகளை அபகரிப்பதன் மூலம் தமிழர்களை கிழக்கில் மேலும் சிறுபான்மையினமாக மாற்றுவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

கடந்த 2010ஆம் ஆண்டு தொடக்கம் மட்டக்களப்பு மாவட்டத்தின் மைலத்தன்மடு,மாதவனை பகுதியில் தமிழ் பண்ணையாளர்கள் தொடர்ச்சியாக பெரும்பான்மை சமூகத்தின் அத்துமீறல்களுக்கு ஆளாகிவருகின்றனர். பெரும்பான்மை சமூகத்தின் பலமிக்க அரசியல்வாதிகளின் ஆதரவுடன் இப்பகுதியில் இந்த அத்துமீறிய செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

இப்பகுதியில் மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் மற்றும் செங்கலடி ஆகிய பிரதேசத்தில் உள்ள கால்நடை பண்ணையாளர்களின் கால்நடைகளை மேய்க்கும் பகுதியாக கடந்த அறுபது வருடத்திற்கும் மேலாக பயன்படுத்தப்பட்டுவரும் பகுதியே மைலத்தன்மடு,மாதவனை பகுதியாகும்.

கடந்த காலத்தில் 250க்கும் மேற்பட்ட குடும்பங்களை குடியேற்றி மேய்ச்சல் தரை காணிகளை அபகரிக்கும் செயற்பாடுகள் கிழக்கு மாகாண ஆளுனர் தலைமையில் முன்னெடுக்கப்பட்டு அது நீதிமன்ற நடவடிக்கைககளின் மூலமாக தடுக்கப்பட்டது.அதனை தொடர்ந்து எவ்வாறாயினும் குறித்த பகுதிகளில் காணி அபகரிப்புகளை மேற்கொள்ளும் வகையில் தொடர்ச்சியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையே இருந்து வருகிறது.

காணி அபகரிப்புகளை முன்னெடுக்கவேண்டுமானால் அப்பகுதியில் உள்ள மேய்ச்சல் தரையில் உள்ள கால்நடை பண்ணையாளர்களை அகற்றவேண்டும் என்பதற்காக தொடர்ச்சியான நடவடிக்கைகளை பண்ணையாளர்களுக்கு எதிராக முன்னெடுத்துவருகின்றனர்.இந்த செயற்பாடுகளுக்கு அப்பகுதியில் உள்ள மகாவலி திட்ட அதிகாரிகளும் படையினரும் வனஇலாகா பிரிவினரும் பூரண ஆதரவு வழங்கிவருகின்றனர்.

குறித்த பகுதியில் மேய்ச்சல் தரையில் மாடுகளை மேய்க்கும் வகையில் பண்ணையாளர்கள் அமைத்துள்ள காளை எனப்படும் பண்ணைகளுக்கும் அடிக்கடி நுழையும் வனஇலாகா பிரிவினரும் பாதுகாப்பு பிரிவினரும் தங்களுது தேவைக்கு வைத்துள்ள கத்திகள் மற்றும் மண்வெட்டிகளை எடுத்துச்செல்லும் நிலை காணப்படுகின்ற அதேநேரம் அப்பகுதியில் அத்துமீறிய வகையில் உள்ள குடியேற்றவாசிகள் துப்பாக்களை வைத்திருக்கும்போதும் அது தொடர்பில் எந்த நடவடிக்கைகளும் எடுப்பதில்லையென அப்பகுதியில் உள்ள பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த ஆண்டு ஆரம்பம் தொடக்கம் 15க்கும் மேற்பட்ட மாடுகள் துப்பாக்கிசூடு நடாத்தியும் வெட்டியும் கொல்லப்பட்டுள்ளன.இது தொடர்பில்  காவல்துறையில்  முறையிட்டாலும் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லையெனவும் கால்நடை பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் மாதவனை மயிலத்தமடு மேய்ச்சல் தரை விவகாரம் பண்ணையாளர்கள் தங்களது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக மட்டக்களப்பில் உள்ள மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக மயிலத்தமடு மாதவனை பகுதியில் கால்நடைகள் மீது துப்பாக்கிச் சூடும் வெட்டுக்காயங்களுடனும் கால்நடைகள் இறந்துள்ள நிலையில் தங்களுக்கும் ஏதும் உயிர் ஆபத்து வந்துவிடுமோ என்ற அச்சத்தில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளனர் .

மாதவனை மயிலத்தமடு பகுதியில் சிங்களவர்கள் அத்துமீறி குடியேற முடியாத நிலையில் நீதிமன்றத் தடை உத்தரவு இருக்கின்ற நிலையிலும் குறித்த பகுதியில் பெரும்பான்மை இனத்தவர்களினால் சோளன் கச்சான் பயிர்செய்கை மேற்கொண்டு வருவதுடன் நீதிமன்ற சட்டத்தை மதிக்காமல் செயல்பட்டு வருகின்றதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது .

பயிர்செய்கையில் ஈடுபடுபவர்கள் மேய்ச்சல் தரைக்காக ஒதுக்கப்பட்ட காணிகளுக்குள் அத்து மீறி பயிர்செய்வதனால் கால்நடைகள் அப்பகுதியில் போகும் போது கால்நடைகள் மீது துப்பாக்கிச் சூடும் வெட்டுக்காயங்களுடனும் கால் நடைகள் உயிரிழந்துள்ளன.

கடந்த காலங்களில் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராஜா ஜகம்பத் தலைமையில் குறித்த குடியேற்றமானது திட்டமிட்டு திணிக்கப்பட்டிருந்த போதிலும் பண்ணையாளர்களின் முயற்சியாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்கு பெற்றளுடனும் வழக்கு தொடரப்பட்டு குறித்த சிங்கள குடியேற்றத்திற்கான தடை உத்தரவு எடுக்கப்பட்டிருந்தது.

ஆனால் இன்று மீண்டும் வெளிமாவட்டங்களில் உள்ள பெரும்பான்மை இனத்தவர்களின் அத்து மீறிய செயற்பாடுகள் தொடர்ந்த வண்ணமே உள்ளது.

கடந்த காலங்களில் மாதவனை மையலத்தமடு பகுதியில் சென்று அவர்களுடைய பிரச்சினைகளை கேட்டு அறிந்த மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலாநிதி பத்ம ராஜா பண்ணையாளர்களுக்கு சார்பாக செயற்படுகின்றார் என்ற காரணத்தினால் அரசாங்க அதிபர் பதவியில் இருந்து இடமாற்றப்பட்டு இருந்த நிலையில் தற்போது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக பத்மராஜா அவர்கள் வந்திருக்கின்ற போதும் குறித்த அப்பகுதியில் அத்துமீறிய செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன் பிள்ளையான்  தலைமையிலான குழுவினர் சென்று இந்த பிரச்சனைக்கு உடனடியாக தீர்வை பெற்று தருவதாக கூறி இருந்தும் அவர்களாலும் பண்ணையாளர்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

நீதிமன்ற சட்டத்தை மீறி நீதிமன்றத்தை அவமதிக்கும் விதத்தில் பேரினவாத இனத்தவர்கள் மேய்ச்சல் தரைக்காக ஒதுக்கப்பட்ட காணிகளை அத்துமறி பிடித்து அதனுள் பயிற்செய்கைகளை மேற்கொண்டு கால்நடைகளின் வாழ்வாதாரத்தை இல்லாத ஒழிக்கும் ஒரு செயற்பாட்டாக உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாயத்தையும் மீன்பிடியையும் கால்நடையையும் நம்பி இருக்கின்ற ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கும் ஒரு செயற்பாடாகவே பார்க்கப்படுகின்றது. தொடர்ச்சியாக இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமாயின் ஒரு இன வன்முறையை தூண்டும் அளவிற்கு இந்த விவகாரம் செல்லும் என்பதில் எவ்வித அச்சமுமில்லை.

ஆகவே இந்த மேய்ச்சல் தரை விவகாரம் தொடர்பாக மாவட்டத்திலுள்ள அரசியல்வாதிகள் மாவட்ட அரசாங்க அதிபர் மகாவலி போன்றவை குறித்த விடயத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்காவிட்டால் இதன் விளைவுகள் பாரதூரமாக இருக்கும் என்பதே கூற முடியும். ஆகவே வயிற்று பிழைப்புக்காக செல்லும் பண்ணியாளர்கள் மிகவும் அச்சத்தில் உள்ளதுடன் அவர்களுடைய உயிர்களுக்கும் உத்தரவாதம் இல்லாத நிலை தான் காணப்படுவதாக தெரிவிக்கின்றனர்.

இந்தப் பண்ணையாளர்களின் பிரச்சினைகளுக்கு இன்னும் ஒரு முற்றுப்புள்ளி வைக்காதது பெரும் மனவேதனையாக இருக்கின்றது என்று பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பில் மேய்ச்சல் தரை காணியில் அத்துமீறும் குடியேற்ற வாசிகள் -மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்கள்