Tamil News
Home செய்திகள் வெளிநாடுகளிலிலிருந்து அரிசியினை இறக்குமதிசெய்ய அரசாங்கம் முயற்சி-கோவிந்தன் கருணாகரம்

வெளிநாடுகளிலிலிருந்து அரிசியினை இறக்குமதிசெய்ய அரசாங்கம் முயற்சி-கோவிந்தன் கருணாகரம்

அரசாங்கம் வெளிநாடுகளிலிலிருந்து அரிசியினை இறக்குமதிசெய்யும் முயற்சிகளை முன்னெடுத்துவருவதாக  பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு,மண்முனை தென் மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் பெரும்போக நெற்செய்கையினை முன்னெடுப்பது தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் நேற்று (புதன்கிழமை) கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி சிறிகாந்த் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில்  பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், மண்முனை தென் மேற்கு பிரதேச செயலக பிரதேச செயலாளர் திருமதி தட்சனகௌரி தினேஸ், மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் கே.ஜெகன்நாத், மாவட்ட விவசாய பிரதிப்பணிப்பாளர், பிரதேச நீர்பாசன பொறியியலாளர் சுபாகரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தின்போது விவசாய பிரதேசங்களின் திட்ட முகாமைத்துவக் குழுக்களில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கமைய வயற்காணி உழுதல், விதைப்பு ஆரம்பித்தல், வேலி அடைத்தல், கால்நடைகள் அகற்றல், நீர் முகாமைத்துவம் உள்ளிட்ட அனைத்து விடயங்களுக்கான தீரமானங்களும் இதன்போது நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன் போது வங்கி கடன்கள், கால்நடைப்பிரச்சனை, யானைப்பிரச்சனைகள், காடுகள் அழிப்பு, கடந்த சிறுபோகத்தில் விவசாயிகள் எதிர்கொண்ட பிரச்சனைகள், பெரும்போகத்தில் விவசாயிகள் எதிர்நோக்கவுள்ள பிரச்சனைகள், விவசாயிகளுக்கான மேம்பாட்டுத்திட்டங்கள், நீர்ப்பாசனம், நெல் கொள்வனவு, உரத்தின் விலையை நிர்ணயித்தல், சேதனைப்பசளை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள்  விரிவாக ஆராயப்பட்டன.

இந்நிகழ்வில் கருத்து தெரிவிக்கும் போதே சிறுபோகத்தில் அறுவடைசெய்த நெல்லை கொள்வனவு செய்யமுடியாத நிலையில் நெல்சந்தைப்படுத்தும் சபை உள்ள நிலையில் அரசாங்கம் வெளிநாடுகளிலிலிருந்து அரிசியினை இறக்குமதிசெய்யும் முயற்சிகளை முன்னெடுத்துவருவதாக  பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.

Exit mobile version