தமிழர்கள் இன விடுதலைக்காக சேர்ந்து பயணிக்கக் கூடாது என்பதில் அரசாங்கம் கவனமாக உள்ளது- சிறீதரன்

தமிழர்கள் இன விடுதலைக்காக சேர்ந்து பயணிக்கக் கூடாது என்பதில் அரசாங்கம் கவனமாக உள்ளது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்ப்பாளருமான சி. சிறீதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி, தர்மபுரம் பகுதியில் நேற்று (19) இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், நாங்கள் இந்த நாட்டிலே மிக முக்கியமான தருணத்திலே நிற்கின்றோம். மிக நெருக்கடியான தருணத்திலே நிற்கின்றோம். காரணம் தேர்தல் வருகின்ற போது தான் அந்த தேர்தல் காலத்திலே எங்கள் கட்சியின் உடைய கடந்த கால செயற்பாடுகள் இந்த அடுத்த 5 ஆண்டுகளிலே என்ன விடயங்களை கையாளப் போகின்றது என்ற முக்கிய விடயங்களை தேர்தல் களத்திலே நாங்கள் சொல்லுகின்றோம்.

60 வருடங்களுக்கு முதல் இந்த மண் எவ்வளவு காடாக இருந்திருக்கும் இந்த பிரதேசம். எவ்வாறு இருந்தது இந்த பிரதேசத்தில் நாங்கள் குடியேறி எவ்வாறு மாற்றி அமைத்தோம் இன்றைக்கு 60 ஆண்டுகள் கடந்து இந்த இடம் எப்படி மாறி இருக்கிறது ஏன் நாங்கள் இந்த இடத்திலே குடியேறினோம் அதற்கான காரணம் என்ன?

58 க்களில் அல்லைக் கந்தளாயிலே முதன் முதலில் 156 விவசாயிகள் காடையர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்கள். அதே ஆண்டுகளில் தான் அநுராதபுரம் பகுதியில் பெரும்பாண்மையாக வாழ்ந்த எங்கள் மக்களும் திருகோணமலையில் பெரும்பாண்மையாக வாழ்ந்த எங்கள் மக்களும் மலையக பகுதியில் வாழ்ந்த எங்கள் மக்கள் இனம் என்பதனை மையமாக வைத்து பலி எடுக்கப்பட்டார்கள். இவ்வாறு எல்லாம் கடந்து வந்த இனப் படுகொலைகளைத் தாண்டி நாங்கள் எங்களுடைய ஈழதேசத்திலே குடியேறி நில அடையாளங்களோடு எங்களை நாங்கள் அடையாளப்படுத்திக் கொண்டோம்.

அடையாளப்படுத்தி வாழுகின்ற காலத்தில் தான் ஒரு பெரும் தலைவருக்கு கீழே ஒரு தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தோம். தந்தை செல்வாவின் வழிகாட்டலிலே அறவழிப் போராட்டங்களைத் தொடர்ந்து ஒரு ஆயுதப் போராட்டத்தின் முக்கியத்துவம் இந்த மன்ணிலே முதன்மை பெற்றிருந்தது.

அதற்காக பல ஆயிரக் கணக்கானவர்களை இந்த மண்ணிலே விதைத்திருக்கின்றோம். பல லட்சக் கணக்கான மக்களை இழந்திருக்கின்றோம். கோடிக் கணக்கான சொத்துக்களை இழந்திருக்கின்றோம். இவற்றை எல்லாம் இழந்து தான் இந்த மன்ணிலே ஒரு தேர்தல் மூலமாக அடுத்த வாழ்வைப் பற்றி சிந்திக்கின்றோம். இந்தக் காலத்திலே எங்களை இழந்து போனால் அல்லது நாங்கள் தமிழினம் என்பதனை சொல்ல மறந்து போனால் எமது வாழ்க்கையும் இல்லாமல் போகும் என்பதனை பலர் விளக்கமாக சொன்னார்கள்.

33 கட்சிகள் இருக்கின்றன பல நூற்றுக் கணக்கானவர்கள் இங்கு போட்டியிடுகிறார்கள். காரணம் இலங்கையில் இருக்கின்ற அரசியல் எங்களை கொஞ்சம் கொஞ்சமாக கூறுபோட்டு எங்களிடம் இருக்கின்ற அரசியல் பலத்தை எங்களிடம் அடிப்படையாக உள்ள கொள்கையை சிதைப்பதற்கான முழு முயற்சிகளையும் அவர்கள் மேற்கொள்கிறார்கள். அந்த முயற்சிகளில் இருந்து விடுபட வேண்டுமா அல்லது நாங்கள் எங்களுடைய வாக்குக்களை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு சிதறடித்து யாரும் இல்லாத இனமாக அழிந்து போகப் போகின்றோமா?என அவர் மேலும் தெரிவித்தார்.