Tamil News
Home செய்திகள் மக்களின் ஜனநாயக தேர்தல் உரிமையை பாதுகாத்துக்கொடுக்க அரசாங்கத்துக்கு முடியவில்லை- பெப்ரல் குற்றச்சாட்டு

மக்களின் ஜனநாயக தேர்தல் உரிமையை பாதுகாத்துக்கொடுக்க அரசாங்கத்துக்கு முடியவில்லை- பெப்ரல் குற்றச்சாட்டு

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக கோரப்பட்டிருந்த வேட்புமனுக்களை நீக்குவதற்கான பிரேரணை ஒன்றை சட்ட ரீதியில் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க அரசாங்கத்துக்கு முடியுமானாலும் தேர்தலுக்காக இதுவரை செலவிட்ட மக்களின் பணத்தை மீள பெற்றுக்கொடுக்கவோ மக்களுக்கு ஜனநாயகத்தை பாதுகாத்துக்கொடுக்கவோ அரசாங்கத்துக்கு முடியாமல் இருக்கிறது என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்ற வேட்புமனுக்களை நிராகரிப்பதற்கு அரசாங்கம் எடுத்திருக்கும் தீர்மானம் தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக கோரப்பட்டிருந்த வேட்புமனுக்களை நீக்குவதற்கான பிரேரணை ஒன்றை சட்ட ரீதியில் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க அரசாங்கத்துக்கு முடியும். என்றாலும் தேர்தலுக்காக இதுவரை செலவிட்ட ஐந்தாயிரம் இலட்சம் ரூபா மக்களின் பணத்தை மீள பெற்றுக்கொடுக்கவோ மக்களுக்கு ஜனநாயகத்தை பாதுகாத்துக்கொடுக்கவோ ஆளும் அரசாங்கத்துக்கு முடியாமல் இருக்கிறது. இருந்தபோதும் அரசாங்கத்தின் இந்த தீர்மானத்தை நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்த முடியும்.

அத்துடன் அரசியலமைப்புக்கு அமைய நடத்தப்படவேண்டிய தேர்தல் ஒன்றை நடத்தாமல் இருப்பதற்கு தீர்மானிப்பது தேர்தல் திருத்தம் ஒன்றை மேற்கொள்வதற்காகவா என அரசாங்கத்திடம் கேட்கிறோம். அதேபோன்று முழுமையாக தேர்தல் திருத்தம் ஒன்றை மேற்கொள்வதற்கு அரசாங்கம் தயாராகுவதாக இருந்தால் எல்லை நிர்ணய நடவடிக்கையை ஏன் செய்ய வேண்டும் என கேட்கிறோம்.

மேலும் அரசாங்கம் தற்போது ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக கதைத்து வருகிறது. அப்படியானால் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த இல்லாத பணம் ஜனாதிபதி தேர்தலை நடத்த எவ்வாறு கிடைக்கிறது?. நாட்டு மக்களின் பணத்தை தங்களுக்கு நன்மையாகும் வகையில் தேர்தலுக்காக நினைத்த பிரகாரம் செலவிட முடியுமா? அதனால் அரசியல் அதிகாரம் மற்றும் தங்களின் நன்மைக்காக மாத்திரம் அரசாங்கம் செயற்பட்டு வருவது இன்று தெளிவாக தெரிகிறது.

எனவே தேர்தல் நடத்துவது நாடொன்றின் மக்களின் அடிப்படை உரிமையை பாதுகாத்து கொடுப்பதாகும். என்றாலும் அரசாங்கம் தற்போது அந்த உரிமை மற்றும் ஜனநாயகத்தை இல்லாமல் செய்யும் மக்கள் எதிர்ப்பு செயற்பாட்டில் ஈடுபட்டு வருகிறது எனறார்.

Exit mobile version