இனப்படுகொலை செய்யும் அரசே ஆட்சியில் உள்ளது! சஜித் காட்டம்

இனப்படுகொலை செய்யும் அர
“அரசு என்ற ஒன்று அமைக்கப்படுவது மக்களைக் காக்கவே ஆகும். துரதிஷ்டவசமாக இலங்கை அரசு மக்களைக் கொல்லாமல் கொல்கின்றது. இவ்வாறு நோக்கும்போது தற்போதைய அரசு இனப்படுகொலை செய்யும் அரசாகவே உள்ளது.”

இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இணை ஊடகப் பேச்சாளருமான எஸ்.எம்.மரிக்காரின் கொலன்னாவ தேர்தல் தொகுதியின் வாக்களிப்பு நிலையங்களின் தலைவர்களுக்கு நியமனம் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“வால்வு மாற்றத்தால் எரிவாயு பிரச்சினை இன்னும் சில வாரங்களுக்கு தீர்க்கப்படாது என அரச பிரதிநிதிகள் கூறுகின்றனர். உண்மையில் மாறியது எரிவாயு வால்வுகள் அல்ல, அரச வால்வுகளே காரணம். எனவே, வால்வுகளை மாற்றியுள்ள அரசை விரட்டியடிக்க நடவடிக்கை எடுக்க மக்கள் அணிதிரள வேண்டும்.

எரிவாயு அனர்த்தம் தொடங்கிய நாள் முதல் எதிர்க்கட்சி என்ற வகையில் ஐக்கிய மக்கள் சக்தி அனைத்துத் தகவல்களையும் நாட்டுக்கு அம்பலமாகியுள்ளது.

விடயத்துக்குப் பொறுப்பான இரண்டு அமைச்சர்கள் உட்பட முழு அரசும் பதில் சொல்லாமல் தப்பிச் சென்றுள்ளனர்.

வீடுகள் வெடித்துச் சிதறும், சமையல் அறைகள் எரியும், உயிர்ப் பலியாகும் பாரிய அவலத்தை உருவாக்கியவர்கள் இந்த அரச தரப்பினர்.

விடயதானத்துக்குப் பொறுப்பான அமைச்சர்கள் இருவரும் அன்று பொய் சொன்னார்கள். இன்று எரிவாயு நிறுவனத்தின் தலைவர், அவர்கள் சார்பாகப் பொய் சொல்ல முன்வந்துள்ளார்.

அரசு என்ற ஒன்று அமைக்கப்படுவது மக்களைக் காக்கவே. துரதிஷ்டவசமாக இலங்கை அரசு மக்களைக் கொல்லாமல் கொல்கின்றது. இவ்வாறு நோக்கும்போது தற்போதைய அரசு இனப்படுகொலை செய்யும் அரசாகவே உள்ளது.

மக்களின் கண்ணீரின் வலியை அரசு பொருட்படுத்தவில்லை. ஈஸ்டர் தாக்குதல் போன்ற நிகழ்வுகளின் மூலம் பிணங்களின் மீது ஆட்சிக்கு வந்த இந்த அரசு, மக்களின் பிரச்சினைகளுக்கு ஒருபோதும் அக்கறை காட்டவில்லை.

தாங்க முடியாத அழுத்தத்தை எதிர்கொண்டு நாட்டை ஆள்பவர்கள் மீது கூச்சல் போட்டு மக்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்” என்றார்.

Tamil News