தியாக தீபம் திலீபன் நினைவு:உண்ணாவிரதத்திற்கும் பேரணிக்கும் பொதுக்கட்டமைப்பு அழைப்பு

தியாக தீபம் திலீபனை நினைவு கூர்ந்து எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை உண்ணாநோன்பு இருந்து எங்களுடைய வீர வணக்கத்தையும் அஞ்சலியையும் அனைத்து தமிழ் உறவுகளும் செய்ய வேண்டும் என தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்புக்கும் அரசியல் கட்சிகளுடைய தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு  நடைபெற்றது.

இதன் பின்னர் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பினர் கூட்டாக ஊடக சந்திப்பை நடாத்தி இந்த கோரிக்கையை விடுத்தனர்.

ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட தவத்திரு வேலன் சுவாமிகள், சுயாதீனமாக உருவாக்கப்பட்ட தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பு சுயாதீனமாகவும் வெளிப்படுத்தன்மையோடும் இயங்கிவருகின்றது. எங்களை யாரும் அணுகி தங்களுடைய ஆலோசனைகள் கருத்துக்களை முன்வைக்கலாம். இதனடிப்படையில் தமிழ் தேசிய பரப்பில் இருக்கின்ற கட்சிகளுடைய தலைவர்கள், பிரதிநிதிகள் உடனான சந்திப்பு நடைபெற்றது. இதன்போது சில தீர்மானங்கள் எட்டப்பட்டது.

இதன்படி, எதிர்வரும் செப்டம்பர் 25 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியிலிருந்து மாலை 5 மணி வரை உண்ணாநோன்பு இருந்து எங்களுடைய வீர வணக்கத்தையும் அஞ்சலியையும் தியாக தீபம் திலீபனுக்கு அனைத்து தமிழ் உறவுகளும் செய்ய வேண்டும். தியாக தீபம் திலீபன் இன்னுயிரை ஈந்த இந்த நல்லூர் பூமியிலே அவருடைய நினைவாலயம் அமைந்திருக்கின்ற இடத்திலே உண்ணாவிரதம் நடைபெற இருக்கின்றது.

எந்த கோரிக்கைகளை முன்வைத்து தியாக தீபம் திலீபன் உண்ணாவிரதம் இருந்தாரோ, பார்த்தீபன் இன்னமும் பசியோடு தான் இருக்கின்றார் என்ற வாக்கியத்துக்கமைய இன்றும் அதே பிரச்சனைகளை ஒவ்வொரு வடிவங்களிலே எதிர்கொண்டிருக்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.