Home ஆய்வுகள் சமூகத்தின் அடிமூலம் சமஷ்டியாகும்| துரைசாமி நடராஜா

சமூகத்தின் அடிமூலம் சமஷ்டியாகும்| துரைசாமி நடராஜா

சமூகத்தின் அடிமூலம் சமஷ்டி

துரைசாமி நடராஜா

சமூகத்தின் அடிமூலம் சமஷ்டி: நாட்டின் இனப்பிரச்சினை புரையோடிப் போயுள்ளது. இந்நிலையில் இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வினைப் பெற்றுக் கொடுப்பதில் சமஷ்டி முறையின் வகிபாகம் தொடர்பில் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்தியா போன்ற நாடுகளில் சமஷ்டி முறை அறிமுகம் செய்யப்படாது இருந்திருக்குமேயானால், தற்போது இந்தியா துண்டாடப்பட்ட ஒரு நாடாகவே இருந்திருக்கும் என்பதையும் இவர்கள் சுட்டிக்காட்டத் தவறவில்லை. இலங்கை இவற்றை முன்னுதாரணமாகக் கொண்டு, சமஷ்டிக்கு வலுச் சேர்க்க வேண்டியது மிகவும் அவசியமாகவுள்ளது.

சமஷ்டி என்பது மிகவும் ஆழமாக நோக்கப்பட வேண்டிய ஒரு விடயமாகும். பல்லின மக்கள் வாழுகின்ற நாடுகளில் ஐக்கியத்திற்கும், அபிவிருத்திக்கும் சமஷ்டி முறையே தோள் கொடுத்திருக்கின்றது. சமஷ்டிக் கொள்கையானது, ஒரு அரசியல் யாப்பு மட்டுமல்ல; அது ஒரு அரசாங்கம். ஒரு சமூகத்தின் அடிமூலம் என்கிறார் சமஷ்டிக் கொள்கையின் ஆய்வாளரான ரொன் வோற்ஸ் (Ron wats). சமஷ்டி முறையை முதலில் சந்தேகக்கண் கொண்டு பார்த்த பல நாடுகள், பின்னர் தங்கள் தவறை உணர்ந்து அம்முறையை ஏற்றுக்கொண்டு, நாட்டின் எழுச்சிக்கு வலுச் சேர்த்த வரலாறுகள் இருக்கத்தான் செய்கின்றன. ஒற்றையாட்சி வாதத்தின் மூலம் அரசின் பலம் ஒரு தெளிவான இறைமை அதிகாரத்தின் கீழ் மத்தியில் ஒன்று திரண்டிருப்பதையே காண முடிகின்றது. இந்நிலையில், அரசியலமைப்பின் மூலம் உருவாக்கப்படுகின்றதும், அதன் மூலம் நிர்வகிக்கப்படுகின்றதுமான இணைப்புச் சபைகள் பலவற்றுக்கு மிடையே ஆட்சியதிகாரம் பகிர்ந்தளிக்கப்படுதலே சமஷ்டி வாதம் என்பதன் பொருளாக அமைகின்றது.

சமஷ்டி அரசு என்பது பல அரசுகள் அல்லது பல பிராந்திய அரசுகள் பல பிராந்தியக் கூறுகளைக் கொண்ட தனியொரு அரசாக ஒன்றிணைந் திருப்பதாகும். சமஷ்டி அரசொன்று நிறுவப்பட்டதன் பின்னர் மத்திய அரசினதும் அதேபோன்று பிராந்திய அரசுகளினதும், ஆட்சிகளினதும் நிலைப்பாடு அவற்றின் ஆளுகை அதிகாரம் என்பன அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளவாறே நிர்ணயிக்கப் படுவதாக புத்திஜீவிகள் தெரிவிக்கின்றனர். சமஷ்டி அரசிலுள்ள பிராந்திய அரசுகள் அல்லது பிராந்தியக் கூறுகளைப் போலன்றி, ஒற்றையாட்சியில் உள்ள பிராந்திய, நிருவாக நிறுவனங்கள் என்பது வெறுமனே மத்திய அரசின் நிருவாகப் பிரிவுகள் அல்லது கட்டுப்பாட்டின் கீழுள்ள நிறுவனங்கள் மட்டுமேயாகும். ஒற்றையாட்சியில் ஆட்சியதிகாரத்தின் தனியுரிமை மத்திய அரசுக்கே உள்ளது. ஆயினும் சமஷ்டி அரசுகளில் மத்திய அரசுக்கு ஆட்சி அதிகாரத்தின் தனியுரிமை கிடையாது. ஆட்சி அதிகாரம் மத்திய அரசுக்கும் பிராந்திய கூறுகளுக்கும் இடையே குறிப்பிட்ட விதத்தில் பகிர்ந்து கொள்ளப்படுகின்றது. சமஷ்டி முறை என்பது பல்வேறு நலன்களுக்கும் வலுசேர்ப்பதாகவே உள்ளது. சமஷ்டி முறை வீச்செல்லையின் இறுதி எல்லையில் கூட்டாட்சி முறையே உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சமஷ்டி முறையை விட கூடுதலாக நடைபெறுகின்ற அதிகாரப் பரவலாக்கல் முறை கூட்டாட்சி முறையில் காணப்படுவதாகவும் அரசியல் அவதானிகள் எடுத்துக் கூறுகின்றனர்.

சமஷ்டி முறையின் சாதக விளைவுகள் குறித்து கலாநிதி ரொஹான் எதிரிசிங்கவும் பல்வேறு கருத்துக்களை முன்வைத்துள்ளமை நோக்கத்தக்கதாகும். 13 ஆவது சீர்திருத்தத்தின் கீழ் கல்வி, சுகாதாரம், போக்குவரத்து என்பன தொடர்பில் மாகாணங்களுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டாலும், அவற்றை நடைமுறைப் படுத்துகையில் அவை தொடர்பான பாரிய அதிகாரங்கள் மத்திய அரசிடமே காணப்படுகின்றது. அவற்றை வரையறுக்க வேண்டுமானால் சமஷ்டி முறையொன்று அவசியமாகவுள்ளது. சமஷ்டி முறைக்குள்ளும் மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை மீண்டும் மத்திய அரசாங்கத்திற்கு பெற்றுக் கொள்ள முடியும். அதற்காக மாநிலங்களின் விசாரணை மற்றும் அவர்களுடைய பங்கு பற்றுதலுடனான அரசியல் யாப்பு சீர்திருத்தம் ஒன்றினை ஏற்படுத்த வேண்டும். இதனால் சமஷ்டி முறைமைக்குள் அதிகாரத்தை பகிர்தல் மிகவும் பாதுகாப்பானதாகும். இதேவேளை ஒற்றையரசின் அம்சங்களை பார்க்கும்போது பிரதேச அரசாங்கங்களின் அதிகாரத்தினை மத்திய அரசாங்கம் ஒரு தலைப்பட்சமாக எவ்வேளையிலும் ஏகமனதாக மீளப் பெற்றுக் கொள்ள முடியும். மாநிலங்களுக்கு அறிவித்தோ அல்லது அவர்களுடைய அனுமதியின்றியோ மீண்டும் மத்திய அரசாங்கத்தினால் அதிகாரத்தை பெற்றுக் கொள்வதினால் அம்மாநிலங்கள் குரல் இல்லாத நிலைக்கு தள்ளப்படும்.

இலங்கையும் இந்திய சமஷ்டியும்

13 ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தமானது, இந்திய அரசியல் யாப்பின் கருத்துக்களை பெற்றுக் கொண்டு தயாரிக்கப்பட்டவொன்று என்பது தெரிந்த விடயமாகும். எனினும் இந்திய முறையிலுள்ள விசேட அம்சங்களை நாம் இங்கு காண முடியவில்லை. ராஜசபை, லோக்சபை என்கிற இரண்டு சபைகளினதும் அதிகாரங்களைக் கொண்ட சுயாதீன உயர் நீதிமன்றம், பஞ்சாயத்ராஜ் போன்ற மூன்றாம் நிலை அதிகாரப் பகிர்வு முறைகள் 13 ஆவது திருத்தத்தில் இடம்பெறவில்லை. இதேவேளை இலங்கையின் நீதித்துறை, நிறைவேற்று அதிகாரம் அரசியல் யாப்புக்கு சற்று கீழேயே இருந்து வருகின்றமையை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. ஆனாலும் இந்தியாவில் நிலைமை இவ்வாறாக அமையவில்லை. நிறைவேற்று அதிகாரம், அரசியலமைப்பு மற்றும் நீதித்துறை என்பன சமமான நிலைகளில் இருந்து வருகின்றன. இலங்கை சமஷ்டி முறைமைக்கு செல்வதாக இருந்தால், இந்தியாவின் மேற்கண்ட அம்சங்களைக் கருத்தில் கொண்டு செயற்பட வேண்டிய ஒரு தேவை காணப்படுகின்றது. இதற்கேற்ற வகையில் அரசியல் கலாசாரம் மற்றும் நீதித்துறை கலாசாரத்தை விளங்கிக் கொண்டு, இலங்கைக்கு பொருத்தமான வகையில் சமஷ்டி முறையொன்று உருவாக்கப்பட வேண்டும்.

இந்தியா சமஷ்டி முறையின் மூலமாகவே தனது நாட்டை பாதுகாத்துக் கொண்டிருக்கின்றது. சமஷ்டி இல்லாதிருந்தால், இந்தியாவில் ஒருமைப்பாடு எந்தளவுக்கு தாக்குப் பிடித்திருக்கும் என்பது ஒரு கேள்விக்குறியேயாகும். இந்தியாவில் சமஷ்டி முறை காணப்படினும், அதன் மத்திய அரசாங்கத்திற்கு அதிகளவிலான அதிகாரங்கள் காணப்படுவதையும் மறுப்பதற்கில்லை. அரசியல் யாப்பினூடாக இத்தகைய அதிகாரங்கள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன.

சமஷ்டி முறையெனப்படும் சுயாட்சி மற்றும் அதிகாரப்பகிர்வு என்பது குழு ஆட்சிகளுக்கிடையில் இணக்கப்பாட்டுடன் தயாரிக்கப்படும் ஒரு ஆட்சிமுறையாக உள்ளது. இந்நிலையில் பல்லின மக்கள் வாழ்கின்ற நாடுகளுக்கு சமஷ்டியே அவசியம் என்பதனை இந்தியா வலியுறுத்தி வருகின்றது. இந்தியாவின் சமஷ்டி முறை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் அடிக்கடி வரவேற்றுப் பேசியுள்ளமையும் இங்கு குறிப்பிடத் தக்கதாகும். சமஷ்டி என்கிற ஒன்று அறிமுகப்படுத்தப்படாதிருந்தால், தற்போது இந்தியா துண்டாடப்பட்ட ஒரு நாடாகவே இருந்திருக்கும் என்று சந்திரிகா நினைவு படுத்தியுள்ளமை ஆழமாக நோக்கத்தக்க ஒரு விடயமாகவுள்ளது.

உலகின் பல நாடுகளிலும் மக்கள் பலர் சிறுபான்மையினராக வாழ்ந்து வருகின்றனர். இம்மக்களைப் புறக்கணிக்காது, இம்மக்களுக்கான உரிமைகளை மழுங்கடிப்புச் செய்யாது, ஆட்சியாளர்கள் இவர்களின் அபிவிருத்திக்கு வலுச்சேர்க்க வேண்டும். உரிமைகளை உரியவாறு வழங்குதல் வேண்டும். இதைவிடுத்து புறக்கணிப்பு இடம்பெறுமானால், அங்கு அதிருப்தி நிலைமைகள் மேலெழும்புவதனைத் தவிர்க்க முடியாது. இலங்கை இது தொடர்பாக நிறையவே அனுபவங்களைப் பெற்றுக்கொண்டுமுள்ளது. சிறுபான்மையினர் மீதான நெருக்கீடுகள் இலங்கையின் தேகத்தில் வடுக்கள் பலவற்றையும் ஏற்படுத்தியுள்ளது என்பது சொல்லித் தெரிய வேண்டிய விடயமல்ல. விரிவான அதிகாரப்பகிர்வு (Federalism) என்பது இன்று தமிழ் மக்களின் தேவையாகியுள்ளது. இந்நிலையில் ஏதோ ஒரு வகையில் அதிகாரப் பகிர்வு மூலம் அல்லது சமஷ்டி அரசியலமைப்பு சட்டத்தின் ஊடாக அல்லது குறைவான அதிகாரங்களுடன் அதிகாரப்பகிர்வு மேற்கொள்ளப்பட்ட நாடுகளில் சிறுபான்மையினரின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதனை அறிய முடிகின்றது. ஆபிரிக்கா, இந்தியா போன்று பல உதாரணங்களை நாம் இதன்போது கூறமுடியும். குறித்த பிரதேசங்களில் வாழுகின்ற பலதரப்பட்ட இனத்தவர்களுக்கு தத்தமது நடவடிக்கைகளை நிர்வகிப்பதற்கு சமஷ்டியே உந்துசக்தியாக இருந்திருக்கின்றது என்பதனை சகலரும் விளங்கிக் கொள்ள வேண்டும்.

இலங்கை சமஷ்டிக்கு வலுச் சேர்ப்பதன் ஊடாக பல நன்மைகளையும் பெற்றுக் கொள்ள முடியும். எனினும் பேரினவாதிகளுக்கு சமஷ்டி என்றாலே வேப்பங்காயாகக் கசக்கின்றது. சமஷ்டி முறை நாட்டை பிளவுபடுத்தும் என்று பிழையான முன்வைப்புகளை இவர்கள் செய்து வருகின்றனர். இந்நிலையில் சமஷ்டி, அதிகாரப்பகிர்வு என்பன குறித்து எத்தனைபேர் விளங்கிக் கொண்டு பேசுகின்றனர் என்று சிந்திக்க வேண்டியுள்ளது. அரசியல் இலாபங்களுக்காகவும், தமது அரசியல் இருப்பினை தக்க வைத்துக் கொள்வதற்காகவும் பேரினவாதிகள் மக்களை பிழையான வழியில் திசைதிருப்பி வருவதாக ஒரு குற்றச்சாட்டு இருந்து வருகின்றது.

உலக நாடுகள் சிலவற்றில் பெரும்பான்மை இனமானது முதலில் சிறுபான்மை இனத்துடன் தனது அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ள விருப்பம் கொண்டிருக்க வில்லை. எனினும் காலப்போக்கில் பெரும்பான்மை இனத்தவர்களின் எண்ணங்களில் மாறுதல்கள் ஏற்பட்ட நிலையில், பெரும்பான்மையினர் தமது விடாப்பிடியைத் தளர்த்திக் கொண்டுள்ளனர். பல்வகைமை கலாசாரத்தை உணர்ந்து துணிந்து ஏனைய இனங்களுடன் தமது அதிகாரங்களை இவர்கள் பகிர்ந்து கொண்டுள்ளனர். இலங்கை போன்ற நாடுகள் இதனை ஒரு பாடமாகக் கொண்டு நடக்க வேண்டிய ஒரு தேவை காணப்படுகின்றது என்பதும் உண்மையாகும். நாட்டில் நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமாயின், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு பெற்றுக் கொடுக்கப்படுதல் வேண்டும். சமஷ்டியே உயர்வுக்கும், சமாதானத்துக்கும் வழி என்பதனை சகலரும் புரிந்து கொள்ள வேண்டும். அதிகாரப் பரவலாக்கல் உறுதிப் படுத்தப்பட்டு, மக்களே மக்களை ஆளுகின்ற அதிகாரம் உறுதிப்படுத்தப்பட வேண்டியது அவசியமாகும்.

Exit mobile version