Home ஆய்வுகள் 2021ம் ஆண்டு அனைத்துலக மனித உரிமைகள் நாள் மையக்கருத்து – சூ.யோ.பற்றிமாகரன்

2021ம் ஆண்டு அனைத்துலக மனித உரிமைகள் நாள் மையக்கருத்து – சூ.யோ.பற்றிமாகரன்

மனித உரிமைகள் நாள் மையக்கருத்து

சூ.யோ.பற்றிமாகரன்

2021ம் ஆண்டு அனைத்துலக மனித உரிமைகள் நாள் மையக்கருத்து:

சமத்துவம் :சமமின்மைகளைக் குறைத்தல், மனிதஉரிமைகளை முன்னேற்றல்.
ஈழத்தமிழர் தேசியப் பிரச்சினைக்கும் இதனையே தீர்வுக்கான வழியாக்க முயலும் அனைத்துலக நாடுகளும் அமைப்புக்களும்:

10. 12. 2021 அனைத்துல மனித உரிமைகள் நாள். 1948இல் அனைத்துலக நாடுகளின் ஒன்றியத்தால் மனித உரிமைகள் சாசனம் பிரகடனப்பட்டதன் நினைவேந்தலாக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10ம் திகதி அனைத்துலக மனித உரிமைகள் நாளாக அனைத்துலக நாடுகளின் ஒன்றியத்தால் கொண்டாடப்பட்டு வருகிறது.

இவ்வாண்டுக்கான மையக்கருத்தாக சமத்துவம்: சமமின்மைகளைக் குறைத்தல் வழி மனித உரிமைகளை முன்னேற்றல் என்பது அனைத்துலக நாடுகளின் மன்றத்தால் கட்டமைக்கப்பட்டு உள்ளது. கோவிட் 19 வீரியத்தாக்கத்தின் பின்னரான உலகில் சமத்துவமின்மை என்பது உலக நாடுகளுக்கு மிகப்பெரிய சிக்கலாக சமூகப் பொருளாதார அரசியல் துறைகளில் பெருவளர்ச்சி அடைதல் என்பது தவிர்க்கப்பட இயலாத ஒன்றாகவே அமையும் என்பது வெளிப்படையான உண்மை. இந்த இக்கட்டான சூழலில் சமத்துவமின்மைகளைக் குறைத்தல் வழி மனித உரிமைகளை முன்னேற்றம் அடையச் செய்து சமத்துவத்தைப் பேணல் வழியாகவே உலகின் பாதுகாப்பான அமைதியான வாழ்வை உறுதிப்படுத்தலாம் என்பது அனைத்துலக நாடுகளின் ஒன்றியத்தின் எண்ணமாக அமைகிறது.

மீளவும் சிறப்பான, நியாயமான, பசுமையான உலகை கட்டியெழுப்புதல் என்பது அனைத்துலக நாடுகளின் ஒன்றியத்தின் நோக்காக அமைவது இன்றைய உறுதியற்ற, நேர்மையற்ற, உயிர்கள் வாழ்வதற்கான இயற்கையான பசுமை உலகையே உயிர்களின் வாழ்வுக்கான பகைமை உலகாக மாற்றிவிட்ட அரசியல், இன்றைய உலகின் இயற்கை அழிவுக்குக் காரணமாகி விடும் என்கிற மிகக் கடுமையான எச்சரிப்பை அறிவியல் உலகம் உறுதிப்படுத்தும் இன்றைய நிலையில், அனைத்துலக நாடுகளின் ஒன்றியம் “எல்லோரும் ஓரினம் மனித இனம் –  எல்லோரும் சமமான மனிதர்கள்” என்ற உண்மையை உலகின் மறுசீரமைப்புக்கான எண்ணமாக முன்னெடுக்க முயல்கிறது.

தமிழர் வரலாற்றிற்கு முற்பட்ட காலம் முதலாக மனித சமத்துவத்தைத் தொடர்ச்சியாகப் பேணி வரும் உலகின் தொன்மைக் குடிகள் என்பதற்கு  “யாது மூரே யாவரும் கேளிர்” ” என்ற கணியன் பூங்குன்றனார் சங்கத் தமிழ்ப் புறநானூற்றுப் பாடல் இலக்கியத்தில் மனித சமத்துவத்திற்கு முன்னுரிமை அளிக்கப் பழக்கியது. மானிடம் போற்றுக மானிடம் போற்றுக என சேர இளவரசர் இளங்கோ அடிகள் காவிய மரபிலும் மனித சமத்துவத்தை முதன்மைப்படுத்தினார்.  அவ்வாறே, “பிறப்பொக்கு மெல்லா வுயிர்க்குதம்”  என்று அடித்துக் கூறி மனித சமத்துவத்தைத்  தமிழர் மெய்ப்பொருளியலின் தலைமைச் செல்நெறியாக்கினார் திருவள்ளுவர். “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” எனத் திருமூலர் 10 ம் நூற்றாண்டுக்கு முன்னரே மனித குல சமத்துவம் தெய்வம் ஒன்றென்பதற்கான நிபந்தனை எனத் தெளிவுபடுத்தி இறையியலிலும் சமத்துவத்தை வலியுறுத்தினார்.

மகாகவி கம்பனோ  சமத்துவம் குறித்த பிற்கால மேற்குலகச் சிந்தனைகளுக்கே முன்னோடியாக “எல்லாரும் எல்லாப் பெருஞ் செல்வமும் எய்தலாலே இல்லாரும் இல்லை உடையாரும் இல்லை” என மார்க்சிய சமபகிர்வுப் பொருளாதாரச் சமத்துவத்திற்கு முன்னோட்டம் அமைத்தான். இந்தத் தமிழ்ச் சான்றோர் தொடரில் மகாகவி பாரதி “எல்லாரும் ஒர் குலம் எல்லாரும் ஓர் இனம்” என்று கவிப்பேரிகை கொட்டியதற்கு ஏற்ப பாரதி காலமாகிய முதல் நூற்றாண்டைக் கொண்டாடும் 2021இல் அனைத்துலக நாடுகள் ஒன்றியம் “எல்லாரும் மனிதகுலம் எல்லாரும் சமத்துவம்” என்பதை உறுதிப்படுத்தச் சமமின்மைகளைக் குறைத்து மனித உரிமைகளை முன்னெடுத்து மீளவும் சிறப்பான நியாயமான பசுமையான உலகைக் கட்டியெழுப்புவதற்கான மூலவளச் சிந்தனைகளை முன்வைக்கும் வழிகாட்டு ஆவணத்தையும் தந்துள்ளது.

அதில் பின்வரும் ஆறுதலைப்புக்கள் கவனப்படுத்தப்பட்டுள்ளது.

  • மனித உரிமையை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரமே வறுமையின் சுழற்சிகளை உடைக்கும்.

  • நியாயத்தை முதன்மைப்படுத்தும் சமுக ஒப்பந்தங்களை மீளவும் கட்டியெழுப்புதல்

  • இளையோர்க்குச் சமத்துவமான வாய்ப்புகள்

  • தடுப்பு மருந்து வழங்கலில் சமத்துவமின்மைகளையும் அநீதிகளையும் மீள்ஆய்வுக்குட்படுத்தல்

  • மனித உரிமைகளான உடல்நலப் பாதுகாப்பான சூழலையும், காலநிலை நீதியையும் அடைவதற்கானவற்றை முன்னேற்றம் அடையச் செய்வது

  • எதிர்த்தெறிதலை சமத்துவம், சமுக உள்வாங்கல், மனிதஉரிமைகள் மூலம் கட்டியெழுப்பி முரண்பாடுகளை முன்தடுத்தல்

அத்துடன் சமத்துவத்திற்காகப் போராடவும், இனவெறிக்கு எதிராகப் போராடவும் அனைத்துலக நாடுகளின் ஒன்றியத்தால் அழைப்பும் விடுக்கப்பட்டு உள்ளது.

இவையெல்லாம் சமமின்மைகளை குறைத்தல் – மனித உரிமைகளை முன்னேற்றல் என்னும் இலக்குக்கான செயற்திட்டங்களை அமைப்பதற்கான வழிமுறைகளைத் தருகிறது என்பது மகிழ்ச்சியானதும் சமத்துவம் நடைமுறைச் சாத்தியம் என்கிற நம்பிக்கை தருவதுமான விடயம்.

ஆனால் 22.05. 1972 முதல் 49 ஆண்டுகளாக நாடற்ற தேச இனமாகச், சிறிலங்கா என்னும் தங்களை ஆளும் அரசியலமைப்புத் தகுதியற்ற சிங்கள பௌத்த பேரினவாத அரசாங்கப் படைபல பிரயோகத்தால் உருவாக்கப்படும் இனங்காணக் கூடிய அச்சத்துடன் வாழ்ந்து வரும் ஈழத்தமிழர்களுக்கு, இந்த சமத்தவம்: சமமின்மைகளைக் குறைத்தல் – மனித உரிமைகளை முன்னேற்றல் வழி  பாதுகாப்பான அமைதியான வாழ்வு நடைமுறையாகுமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதனைத் தீர்வுக்கான வழியாக்கச் சிறிலங்காவின் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பேச்சுக்களும் தொடர்புகளும் மேற்கொள்ளும் நாடுகள் சிந்திக்கவேண்டிய நேரமிது.

ஈழத்தமிழர்கள் மேல் இனஅழிப்பை படைபலம் கொண்டு நடாத்தியவரே அரச அதிபராக நாட்டின் நிர்வாகத்தையும், முப்படைகளையும், நீதித்துறையையும் தன்னுள் அடக்க, இனஅழிப்புக்கால அரச அதிபரே நாட்டின் பிரதமாக இன்று மாறி, பாராளுமன்ற சட்டவாக்க உரிமைகளை அனைத்தையும் தன்னுள் மடக்க, நிதியமைச்சராக அதே ஈழத்தமிழின இரத்தக்கறை படிந்தவரே  மேற்குலக நாடுகளையும் இந்தியாவையும் வலம்வர,  இனஅழிப்புக்கான சட்டப் பலத்தைத் தனது சட்டத்துறை பேராசிரியர் தன்மை கொண்டு வழங்கிய ஜி. எல். பீரிஸ் அவர்களே வெளிவிவகார அமைச்சராகத் திகழ, இனழிப்புச் செய்த படையினரே நாட்டின் பணியக ஆட்சியாளர்களாக நாட்டில் மக்கள் மேல் பணியக ஆட்சி செலுத்த, முழுமையான இனஅழிப்பாளர்களின் ஆட்சித் தொகுதியாகச் சிறிலங்கா அரசாங்கம் இன்று விளங்குகிறது. இதனை ஒரு சனநாயக நாடாக எந்த அளவுக்குக் கருதமுடியும் என்பது இன்றுள்ள கேள்வி.

மேலும் சிறிலங்கா அரசாங்கத்தின் ஒருநாடு ஒருசட்டம் என்னும் சிங்கள நாடு பௌத்த ஆகமச் சட்டம் என்னும் பன்மொழி பல்கலாச்சார சனநாயகப் பங்களிப்பை வெளிப்படையாகவே அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் இல்லாமல் செய்ய முயல்கிறது. இந்தச் சிறிலங்கா ஆட்சியாளர்களிடம் இந்தியா 13வது திருத்தத்தை இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் எப்படி நடைமுறைப்படுத்தச் செய்து அது கூறும் ‘கண்ணியமான வாழ்வை’ தமிழருக்கு இலங்கைத் தீவில் ஏற்படுத்தப் போகிறது? அமெரிக்கா எவ்வாறு மனித உரிமை, பொறுப்புக் கூறல் என்பவற்றின் வழி நல்லாட்சியை சனநாயகத்தை வளர்ச்சிகளைத் தமிழர்களுக்கு உறதி செய்யப் போகிறது?

சீனாவும் தற்போது இரஸ்யாவும் கூடவே பாக்கிஸ்தானும், இந்தியாவும், பங்களாதேசும், இஸ்ரேலும், மத்திய கிழக்கு நாடுகளும் ஏன் அமெரிக்காவும் கூட தங்களுக்கு இடையில் உள்ள அரசியல் வேறுபாடுகளை மறந்து சிறிலங்காவுக்கு நிதியும் மதியும் ஆயுதக்குவிப்பும் ஆயுதப்பயிற்சியும் புலானாய்வு பகிர்வுகளும் வழங்கும் நாடாகச் சிறிலங்கா இருக்கின்றது. இந்நிலையில் உலகில் மனித உரிமைகள் மரபு சாசனத்திற்கு எதிராக ஈழத்தமிழர்களை அவர்களது சொந்த வரலாற்றுத் தாயகத்திலேயே சிறிலங்கா எல்லாவகையான இனஅழிப்புக்கும் உள்ளாக்குவதை எப்படி அனைத்துலக நாடுகள் ஒன்றியம் தடுத்து நிறுத்தும்?  இதில் அனைத்துலக ஒன்றியத்தினது இயலாமை  உலகில் மனித உரிமைகள் மரபு சாசனத்திற்கு எதிராக எதனையும் எந்த அரசும் செய்து விட்டு மற்றயை அரசுக்களுடன் சரிசமமாக வாழலாம் என்கிற புதிய நிலையை உருவாக்குகிறது.

இக்கட்டத்தில் 73 ஆவது மனித உரிமைகள் நாளில் அனைத்துலக நாடுகளின் ஒன்றியம் 49 ஆண்டுகளாக நாடற்ற தேச இனமாக உள்ள ஈழத்தமிழர்களின் வெளியக தன்னாட்சி உரிமையினைக் காலந்தாழ்த்தாது ஏற்க வேண்டும்.  அனைத்துலக சட்டங்களை சிறிலங்காவின் மேல் உண்மையும் நேர்மையுமான முறையில் நடைமுறைப்படுத்தி சமுகநீதியை ஈழத்தமிழர்கள் அடைவதற்கு உதவ வேண்டும். ஈழத்தமிழர்கள் அவர்களது அரசியல் எதிர்காலத்தை அவர்களே நிர்ணயிக்கச் செய்வதற்கு அனைத்துலக நாடுகள் மன்றம்  எடுக்கும் நடவடிக்கைகள்தான் அனைத்துலக மனித உரிமைகள் மரபுசாசனத்தையும் அதற்குரிய நிலையில் உலக நாடுகள் ஏற்று நடைமுறைப்படுத்த உதவும். ஈழத்தமிழர்களுக்குச் சமத்துவம் என்பது அவர்களுக்குப் பாதுகாப்பான அமைதியை அனைத்துலக நாடுகளின் ஒன்றியம் ஏற்படுத்துவதிலேயே தங்கியுள்ளது. இதனைச் செய்ய அனைத்துலக நாடுகளின் ஒன்றியத்துக்கு சனநாயக வழிகளில் அழுத்தத்தைக் கொடுக்கும் பொறுப்புள்ளவர்களாக உலகத் தமிழர்கள் உள்ளனர். இவற்றை 73ஆவது அனைத்துலக மனித உரிமைகள் நாளில் ஒவ்வொரு மனித உரிமைக்கும் அமைதிக்கும் உழைக்கும் உள்ளங்களும் மனதிருத்தல் உலக அமைதிக்கு அவசியம்.

Exit mobile version