உரப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் – அரசாங்கத்திடம் கோரிக்கை

உரப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்

விவசாயிகள் முகம் கொடுக்கின்ற உரப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என கிண்ணியா விவசாயிகள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிண்ணியா விழிப்புணர்வு தகவல் மையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே விவசாய சம்மேளனங்களின் தாய் சங்க பிரதிநிதிகள் மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், இரசாயன பசளை இறக்குமதியை முழுமையாக நிறுத்தி உடனடியாக சேதனப் பசளைக்கு செல்ல வேண்டும் என விவசாயிகளை நிர்ப்பந்திப்பது ஒரு ஆரோக்கியமற்ற செயற்பாடாகும்.

பசளைகளை தயார் படுத்துகின்ற எந்த ஒரு ஆரோக்கியமான நடவடிக்கைகளையும் உரிய வேளைக்கு எடுக்காமல் தற்போது அரசாங்கமானது தடுமாறிக் கொண்டிருக்கிறது.

இதனால் பயிர்ச் செய்கை பண்ணப் படவேண்டிய இலட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் நெற்செய்கை செய்யப்படாமல் கைவிடப்படுகின்ற ஆபத்தான நிலை தோன்றி இருக்கின்றது.

அரசாங்கத்தின் முறையான திட்டமிடல் இன்றி அரங்கேற்றப்பட்ட இந்த வேலைத்திட்டம் விவசாயிகளையும் நாட்டின் பொருளாதாரத்தையும் பாதிப்பதோடு அரிசியை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்கின்ற நிலைமையையும் ஏற்படுத்தியிருக்கின்றது.

சேதன உரத்தை பயன்படுத்துவதன் மூலம் உரிய விளைச்சலை பெற முடியாது என்ற குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்ளுகின்ற அரசாங்கமானது நட்டம் ஏற்படுகின்ற போது விவசாயிகளுக்கு நட்ட ஈடு வழங்குவதாக அறிவித்துள்ளது. ஆனால் அந்த நட்ட ஈடு எவ்வாறு வழங்கப்படும் எவ்வளவு வழங்கப்படும் என்பதை உத்தர வாதம் செய்யாமல் வாய் மூலம் மாத்திரம் அறிக்கை விட்டுக் கொண்டிருப்பது விவசாயிகளுக்கு அவ நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

எனவே இப்போகத்தில் முழு விவசாய நிலங்களிலும் நெற்செய்கை மற்றும் ஏனைய பயிர்களை விவசாயிகள் செய்கை பண்ண வேண்டுமானால் உடனடியாக இரசாயன பசளையை இறக்குமதி செய்து விநியோகிக்க வேண்டும் அல்லது நட்ட ஈட்டுக்கான உத்தரவாதத்தை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கைகளை முன்வைப்பதாகவும்  தவறும் பட்சத்தில் விவசாய நடவடிக்கைகளில் இருந்து தாங்கள் ஒதுங்கி கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் எனவும் அவர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ilakku Weekly Epaper 152 october 17 2021 Ad உரப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் - அரசாங்கத்திடம் கோரிக்கை