புதிய இடைக்கால ஜனாதிபதி தெரிவு தொடர்பில் கூட்டமைப்பு கூடி ஆராய்ந்தே தீர்மானிக்கும் : சம்பந்தன்

புதிய இடைக்கால ஜனாதிபதி தெரிவு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூடி ஆய்ந்த பின்னரே தீர்மானம் எடுக்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக்குழுத் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

புதிய இடைக்கால ஜனாதிபதி தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,

தற்போதைய நிலையில், யார் குறித்த வெற்றிடத்திற்கு போட்டியிடுகின்றார்கள் அவர்களின் செயற்றிட்டங்கள் என்ன என்பது தொடர்பில் தெளிவான வெளிப்படுத்தல்கள் காணப்படவில்லை. ஆகவே அவ்விடயங்கள் தொடர்பில் ஆழமாக கரிசனைகளைக் கொண்டிருக்கும் நாம் கூட்டமைப்பாக கூடி ஆராய்ந்த பின்னரே இறுதி தீர்மானத்தினை எடுக்கவுள்ளோம். இதற்கான சந்திப்பு அநேகமாக 19ஆம் திகதி மாலையில் நடைபெறுவதற்கான சாத்தியங்கள் உள்ளன என்றார்.

இதேவேளை ரணில் விக்கிரமசிங்க பதில் ஜனாதிபதியாக கடமைகளைப் பொறுப்பேற்றதன் பின்னர் அவரைப் பதவி விலகுமாறு பல்வேறு தரப்பினரும் அழுத்தங்களித்து வருக்கின்றமை தொடர்பில் குறிப்பிட்ட சம்பந்தன் தற்போதைய அரசியலமைப்பின் பிரகாரம் அவர் பதவியேற்றுள்ளமையானது அரசியலமைப்புக்கு உட்பட்டதாகவே காணப்படுகின்றது என்று கூறினார்.

மேலும் போராட்டக்காரர்கள் உள்ளிட்ட தரப்பினர்கள் அவரின் பதவியேற்புக்கள் தொடர்பில் விமர்சனம் வெளியிட்டுள்ளனர். இவ்வாறான நிலையில் தான் புதிய ஜனாதிபதிதெரிவு இடம்பெறப்போகின்றது. ஆகவே அதன்போதும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டவாறு கருமங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

சட்டத்தின் ஆட்சி மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மை உறுதிப்படுத்தப்படுவதோடு பொருளாதார மீட்சிக்கான விரைந்த செயற்பாடும் அவசியமாகின்றது என்று மேலும் தெரிவித்தார்.