Tamil News
Home செய்திகள் சிவன் ஆலயம் இடிக்கப்பட்டு ஜனாதிபதி மாளிகை அமைக்கப்பட்டமை இனவாதத்தையே காட்டி நிற்கின்றது-அருட்தந்தை மா.சத்திவேல்

சிவன் ஆலயம் இடிக்கப்பட்டு ஜனாதிபதி மாளிகை அமைக்கப்பட்டமை இனவாதத்தையே காட்டி நிற்கின்றது-அருட்தந்தை மா.சத்திவேல்

சிவன் ஆலயம் இடிக்கப்பட்டு ஜனாதிபதி மாளிகை அமைக்கப்பட்டமை இனவாதத்தையே காட்டி நிற்கின்றது என மலையக சமூக ஆய்வு மையத்தின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவரால் இன்று (09) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இராணுவ கட்டுப்பாட்டின் கீழ் இருந்த வலி வடக்கு பிரதேச போர்த்துக்கீசர் கால மிக தொன்மை வாய்ந்த கீரிமலை சிவன் ஆலயம் இடிக்கப்பட்டு ஜனாதிபதி மாளிகை அமைக்கப்பட்டுள்ளது. இது இனவாத, மதவாத அரச பயங்கரவாதத்தினதும் அதற்கு துணை நிற்கும் இயந்திரமான இராணுவத்தினதும் கொடூர முகத்தை மீண்டும் உறுதி செய்துள்ளது.

இத்தகைய நாகரீகம் அற்ற செயலை மலையக சமூக ஆய்வு மையம் மற்றும் மலையக தமிழர் பண்பாட்டுப் பேரவை என்பன வன்மையாக கண்டிப்பதோடு துன்புற்றிருக்கும் மக்களின் வேதனையோடு நாமும் நிற்கின்றோம் என கூறுவதோடு அரசு இந்து மக்களிடத்தும், தமிழ் மக்களிடத்தும் இச்செயல் தொடர்பாக மன்னிப்பு கோருவதோடு அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி மாளிகை முற்றாக அங்கிருந்து அகற்றி அங்கு இந்து மக்களின் சுதந்திர வழிபாட்டுக்கும் இடம் அளிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கின்றது.

இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசம் என்பது பாதுகாப்பான பிரதேசம் என்று பொருள்படும். அத்தகைய பிரதேசத்தில் பயங்கரவாத செயலுக்கு இடம் உண்டா? இராணுவ தேவைக்கு அப்பால் கட்டிடம் நிர்மாணிக்கப்படுமாயின் அதற்கு அனுமதி அளித்தது யார்? அத்தகைய கட்டிடம் அமைக்க தொன்மை வாய்ந்த இந்து ஆலயத்தினை அழிப்பதற்கு அனுமதி அளித்தது யார்? தொல்லியல் திணைக்களம் அனுமதி அளித்ததா? எத்தகைய அனுமதியும் இல்லாத கட்டிடம் அமைக்கப்பட்டு தொன்மை வாய்ந்த ஆலயம் அழிக்கப்பட்டிருப்பின் அவ்வாறு செய்தவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும்.அவ்வாறு நீதியின் முன் நிறுத்தப்படுவார்களா? நிறுத்தப்பட்டாலும் நீதி கிடைக்குமா? என்பதே எம்மை சூழ்ந்துள்ள கேள்விகள்.

வடகிழக்கின் பிரதேசங்களை தொல்லியல் திணைக்களம் கையகப்படுத்த முனைவதும் , சிங்கள பௌத்த பிரதேசங்களாக அடையாளப்படுத்த முனைவதும் நாம் அறிந்ததே.

நாட்டின் எல்லா சந்திகளிலும், உயர்ந்த மலைகளிலும் புத்தர் சிலைகளை அமைக்கும திட்டமிட்ட செயல் தொடர்கின்றது. மலையக பிரதேசம் ஆக்கிரமிக்கும் நோக்கில் இச் செயற்பாடு தீவிரபடுத்தப்பட்டிருக்கின்றது.

இவற்றிற்கும் மேலாக குருந்தூர் மலைப்பிரதேசத்தில் எத்தகைய கட்டிட பணிகளும் நடக்கக் கூடாது எனும் நீதிமன்ற கட்டளையை மீறி விகாரை அமைக்கும் பணி முடிவுறு நிலையில் உள்ளது. இதுவும் இராணுவத்தின் உதவியுடன் என்பது தெரிய வந்துள்ளது. தமிழ் மக்கள் விடயத்தில் தொல்லியல் திணைக்களம், நீதித்துறை என்பன சட்டங்களுக்கு வெளியில் என்றே சிந்திக்கத் தோன்றுகின்றது.

தமிழ் மக்களின் வாக்குகளை வேட்டையாட வடகிழக்கு நோக்கி படையெடுக்கும் பெரும்பான்மை கட்சிகள் தமிழ் மக்களின் நிலங்களை தொல்லியல் திணைக்களம் கையகப்படுத்துவது தொடர்பாகவோ, குருந்தூர் மலை விடையமாகவோ, கீரி மலை சிவன் ஆலயம் சம்பந்தமாகவோ குரல் கொடுக்கப் போவதில்லை.

இந்நிலையில், அவர்களுக்கு ஆதரவு திரட்டும் சக்திகளும், அவர்களுக்கு பின்னால் செல்லும் மக்களும் தமிழர்களின் தேசிய தொடர்பில் சிந்திக்க வேண்டும். இல்லையெனில் தமிழர்களின் சாபத்தை அனுபவிக்க வேண்டி நேரிடும்.

நாம் மீண்டும் ஆட்சியாளர்களிடம் கேட்கின்றோம். கடந்த 75 ஆண்டு காலமாக செய்து வரும் இன அழைப்பு போதாதா? இன்னும் எவற்றையெல்லாம் செய்வதற்கு திட்டமிட்டுள்ளீர்கள்? தமிழர்கள் தங்களையும், தங்களுடைய அடையாளத்தையும், நிலத்தையும் பாதுகாக்க எத்தகைய போராட்டம் நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கின்றீர்கள்? நாட்டின் தற்போதைய நிலைக்கு உங்களின் இனவாத யுத்தமே காரணம் என்பதை இன்னும் உணர மறுப்பதேன்? தற்போதைய சிவன் ஆலய சம்பவம் தேசத்திற்கான போராட்டத்தை இன்னும் கூர்மை அடையவே செய்யும்.

Exit mobile version