சமஷ்டி பிரிவினையல்ல என்கிறது சட்டத் தீர்ப்பு;சமஷ்டியை கேட்கமுடியாது என்பது இனவாதம்

”சமஷ்டி கோரிக்கை எங்களுடைய நீண்டகால கோரிக்கை. சமஷ்டி கோருவதற்கு நாங்கள் உரித்துடையவர்களெனவும், அது பிரிவினையல்ல எனவும் வழக் கொன்றில் தீர்ப்புள்ளது.அந்த வழக்கில் நான் முன்னிலையாகி நடத்தியிருக்கின்றேன்” என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் கூட்டமைப்பு வேட்பாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

சமகால அரசியல் நிலமைகள் தொடர்பாக அவருடைய அலுவல கத்தில் நேற்று ஊடகங்களுடனான சந்திப்பின் போது, சமஷ்டி தீர்வை வழங்கமாட்டோமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கூறிய கருத்து தொடர்பாகவும், சமஷ்டி கேட்டால் வடக்கு, கிழக்கில் இரத்த ஆறு ஓடுமென பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கூறிய கருத்து தொடர்பாகவும் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது மேலும் அவர் கூறுகையில்,

சமஷ்டி கோரிக்கை எங்களுடைய நீண்டகால கோரிக்கை. சமஷ்டி கோருவதற்கு நாங்கள் உரித்துடையவர்களெனவும், அது பிரிவினையல்ல எனவும் வழக் கொன்றில் தீர்ப்புள்ளது.

அந்த வழக்கில் நான் முன்னிலையாகி நடத்தியிருக்கின்றேன். அவ்வாறு இலங்கை நீதிமன்றத்தின் தீர்ப்பு இருக்கையில்,

சமஷ்டியை கேட்க முடியாது. வழங்க முடியாதென கூறுவதானது இனவாதத்தை கக்கி தீவிரவாத சக்திகளின் ஆதவை பெறுவதை நோக்கமாக கொண்டதாக நாங்கள் கருதுகிறோம்.

மேலும் பௌத்த மதம் என்பது சமாதானத்தை உச்ச அளவில் போதிக்கின்ற ஒரு சமயமாக நாங்கள் அறிந்திருக்கின்றோம்.

பூச்சி, புழுவை கூடக் கொல்லக் கூடாதென போதிக்கின்ற மதம் அது. அத்தகைய மதத்தை பின்பற்றுகிறவர்கள் சமஷ்டி கேட்டால் இரத்த ஆறு ஓடும் என எச்சரிப்பது இந்த நாட்டில் பௌத்த சமயம் எவ்வாறான நிலையிலுள்ளது என்பதை உணர்த்துவதாக இருக்கின்றதென அவர் மேலும் கூறியுள்ளார்.