Home செய்திகள் ரணிலுக்கு இராஜதந்திர நெருக்கடியை  ஏற்படுத்தியுள்ள சீனக்கப்பல் விவகாரம்- அகிலன்

ரணிலுக்கு இராஜதந்திர நெருக்கடியை  ஏற்படுத்தியுள்ள சீனக்கப்பல் விவகாரம்- அகிலன்

001c08fb 1600 ரணிலுக்கு இராஜதந்திர நெருக்கடியை  ஏற்படுத்தியுள்ள சீனக்கப்பல் விவகாரம்- அகிலன்
இராஜதந்திரச் சிக்கல் ஒன்றில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இப்போது மாட்டிக்கொண்டிருக்கின்றார். இலங்கையை மையப்படுத்திய சீன – இந்திய ஆதிக்கப்போட்டியில் முக்கியமான ஒரு கட்டத்தில் இப்போது நாம் இருக்கின்றோம். அடுத்த வாரம் இலங்கைக்கு வரவிருக்கும் சீனாவின் கண்காணிப்பு – ஆய்வுக் கப்பல் இந்த விவகாரத்தை பூதாகரமாக்கியிருக்கின்றது. இவ்விடயத்தில் இந்தியாவின் கரிசனையை கொழும்பு இலகுவாக புறக்கணித்துச்சென்றுவிட முடியாது. அதேவேளையில், அம்பாந்தோட்டையில் சீனாவுக்குள்ள உரிமையையும் இலங்கையால் மறுதலிக்க முடியாது!
ரணில் தொடர்பில் இந்தியாவுக்கு ஏற்கனவே சில சந்தேகங்கள் இருந்துள்ளன. இதன் தொடர்ச்சியாக சீனக் கப்பலுக்கு கொழும்பு இடமளித்தால், புதுடில்லியிலிருந்து வரக்கூடிய பிரதிபலிப்பு பாரதூரமானதாக இருக்கும் என இராஜதந்திரிகள் கருதுகின்றார்கள்.
பாராளுமன்றத்தில் ஜனாதிபதிப் பதவிக்கான தேர்தலில் ரணிலைத் தோற்கடித்து சஜித்தின் ஆதரவுடன் களமிறங்கிய டல்லஸ் அழகப்பெருமவை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என புதுடில்லி செயற்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. அதற்கு காரணம் என்ன என்ற கேள்வி இந்த இடத்தில் பரவலாக எழுகின்றது.
இதற்கு இரண்டு மூன்று காரணங்கள் சொல்லப்பட்டாலும், பிரதான காரணமாகச் சொல்லப்படுவது அம்பாந்தோட்டை துறைமுக விவகாரம்தான். இந்த துறைமுகம் மகிந்த ராஜபக்சவின் காலத்தில் அமைக்கப்பட்டதாக இருந்தாலும், அதனை 99 வருடகாலக் குத்தகைக்கு சீனாவுக்குக் கொடுக்கும் முடிவு ‘நல்லாட்சி’க்காலத்தில் ரணில் விக்கிரமசிங்கவினால்தான் எடுக்கப்பட்டது. சீனாவிடமிருந்து பெறப்பட்ட கடனை மீளளிக்க முடியாத நிலையில் அதனைக்கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ரணிலுக்கு ஏற்பட்டிருந்தது.
கப்பல்களே வராத துறைமுகத்தை வைத்துப் பராமரிப்பதற்கு மாதாந்தம் ஏற்படும் பாரிய செலவீனத்தைத் தவிர்ப்பதற்கு இந்த முடிவை ரணில் எடுத்திருந்தார் எனக்கூறப்பட்டாலும்கூட, இவ்விடயத்தில் புதுடில்லிக்கு சில சந்தேகங்கள் இருந்துள்ளது. இப்போதும் இருக்கின்றது. குறிப்பாக கொழும்பு துறைமுக நகரம், அம்பாந்தோட்டை என்பன சீனாவுக்குக் குத்தகைக்குக் கொடுக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்பட்டாலும், இவற்றில் சீனாவின் ஆதிக்கத்தை யாராலும் கட்டுப்படுத்த முடியாது! கண்காணிக்கவும் முடியாது!
அம்பாந்தோட்டை துறைமுகமும் இந்தியாவின் தென்பகுதியில் முக்கியமான கடல்போக்குவரத்துப் பாதையில் அமைந்திருக்கின்றது. சீன தனது பட்டுப்பாதை திட்டத்தை நடைமுறைப்படுத்;துவதற்கு இது முக்கிய பலத்தைக்கொடுக்கக்கூடியது. இந்து சமுத்திரப் பிராந்தியம் என்பது பாரம்பரியமாக இந்தியாவின் மறைமுக ஆளுகைக்கு உட்பட்டதாகத்தான் இருந்துவருகின்றது. இதில் சீனா ஊடுருவுவதை புதுடில்லி ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது என்பது பாதுகாப்புத்துறை ஆய்வாளர்களின் கருத்து.
இதே அம்பாந்தோட்டை துறைமுகத்தை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இராஜதந்திர நெருக்கடிதான் இன்று இந்தியாவை உசாரடைய வைத்துள்ளது. ரணிலுக்கு நெருக்கடியைக் கொடுக்கப்போவதும் இதுதான்!
அம்பாந்தோட்டை துறைமுகத்தை அடுத்த வாரம் வந்தடையவுள்ள ‘யுவான் வாங் 5’ என்ற சீனாவின் உளவுக் கப்பல் தொடர்பில் இலங்கை அரசாங்கத்துக்கு கடும் எதிர்ப்பை இந்தியா எற்கனவே தெரிவித்துவிட்டது. இந்தியா எதற்காக அஞ்சியதோ அது இப்போது நடைபெறுவதாகவே புதுடில்லி கருதுகின்றது.
‘யுவான் வாங் 5’  என்ற இந்த கண்காணிப்பு – ஆய்வுக் கப்பல் 750 கிலோ மீட்டர் வரையில் வான்வழியாக கண்காணிக்கக்கூடிய வலுவைக்கொண்டது. இதனால் தென்னிந்தியாவின் கல்பாக்கம், கூடன்குளம் பகுதிகளில் இருக்கக்கூடிய அணுசக்தி திட்டங்கள் குறித்த தகவல்களை அதிலிருந்து அறிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும் என்பதுதான் இந்தியாவின் அச்சத்துக்கு பிரதான காரணம். இதனைவிட தென்னிந்தியாவிலிருக்கும் ஆறு துறைமுகங்களில் என்ன நடைபெறுகின்றது – அதன் பாதுகாப்புக் கட்டமைப்புக்கள் எவ்வாறுள்ளன என்பன போன்ற தகவல்களையும் சேகரிக்கக்கூடிய தொழில்நுட்ப வல்லமை இந்தக் கப்பலுக்குள்ளது. விமான நிலையங்கள் உட்பட தென்னிந்தியாவின் முக்கியமான நிலையங்களை ‘நோட்டம்’ விடக்கூடிய ஆற்றலும் இந்தக் கப்பலுக்குள்ளது. இதில் உள்ள செயற்கை;கோள் தொடர்புகள் மூலமாகப் பெறப்படும் தகவல்கள் இந்தியா அதன் தென்பகுதியின் பாதுகாப்பு கட்டமைப்புக்களை மாற்றியமைக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தலாம் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகின்றது.
இந்தப் பிராந்தியத்தில் ஆய்வை மேற்கொள்வதற்காகவே கப்பல் அம்பாந்தோட்டை பகுதிக்கு வருவதாகச் சொல்லப்படுகின்றது. ஆனால், எரிபொருள் நிரப்புவதற்காகததான் இது வருவதாக இலங்கை அரசங்கத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அவ்வாறாக இருந்தாலும் கூட தமது புலனாய்வுத் தகவல்களைச் சேகரிக்கும் பணியை இந்தக் கப்பல் முன்னெடுக்கும் என்பதுதான் ஆய்வாளர்களின் கருத்து.
ஆக, இராணுவ ரீதியாகவும், கேந்திர அடிப்படையிலும் சீனாவின் இந்த உளவுக்கப்பலின் இலங்கை வருகையின் தாற்பரியங்கள் மிகவும் பாரதுரமானதாக இருக்கும் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றார்கள். அதனால், ஓகஸ்ட் 11 முதல் ஒரு வாரத்துக்கு இந்தக்கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் நிற்கப்போவது இந்தியாவின் பாதுகாப்புக்கு கடும் அச்சுறுத்தலாக இருக்கும் என இந்திய ஆய்வாளர்களும், புலனாய்வு நிறுவனங்களும் நரேந்திர மோடி அரசுக்கு கடுமையான எச்சரிக்கையைக் கொடுத்திருக்கின்றன. அதனையடுத்தே இந்திய அரசு இவ்விடயத்தில் உசாரடைந்திருக்கின்றது.
தமது பாதுகாப்பு நலன்கள் குறித்த அக்கறையை புதுடில்லி ஏற்கனவே கொழும்புக்குத் தெரிவித்துவிட்டது. இருந்த போதிலும் இவ்விடயத்தை எவ்வாறு கையாள்வது என்பதில் ரணில் விக்கிரமசிங்க குழம்பிப்போயிருப்பதாகத் தெரிகின்றது.
தீவிரமான பொருளாதார நெருக்கடிக்குள் இலங்கை சிக்கியிருக்கும் நிலையில் இந்தியாதான் உடனடியாக உதவிகளைக் கொண்டுவந்தது. மோடியின் ‘அயல்நாட்டுக்கு முன்னுரிமை’ என்ற வெளியுறவுக்கொள்கையின் அடிப்படையில் கொடுக்கப்பட்ட கடன் உதவிகளால்தான் எரிபொருட்களையும், மருந்துகளையும் கொள்வனவு செய்து இலங்கையால் மூச்சுவிட முடிந்தது. இதனைவிட தமிழகமும் பல கோடி டொலர் பெறுமதியான உணவு மருந்துப்பொருட்களைக் கொடுத்தது. இந்த நிலையில், இந்தியாவின் நலன்களைப் பாதிக்கும் வகையிலான சீனாவின் செயற்பாட்டுக்கு வழிவிடுவது எதிர்காலத்தில் இந்தியாவின் உதவிகளைப் பெருமளவுக்கு பாதிக்கலாம்.
மறுபுறத்தில் அம்பாந்தோட்டையை சீனாவுக்குக் கொடுத்துள்ள நிலையில் அந்த நாட்டின் கப்பல் வருவதை தடுக்க முடியாத இக்கட்டான நிலை இலங்கைக்கு. இதனைவிட, சர்வதேச நாணய நிதியத்தைதான் இலங்கை தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு பெரிதும் நம்பியுள்ளது. ‘சீனாவுக்கான கடன் மறுசீரமைப்பைச் செய்துகொண்டு வாருங்கள்’ என்ற நிபந்தனை ஒன்றை ஐ.எம்.எப். போட்டுள்ளது. இதற்காக சீனாவுடன் பேச வேண்டிய நிலை ரணிலுக்குள்ளது. ஆக, சீனாவையும் பகைக்க முடியாத நிலை.
இவ்வாறு இக்கட்டான நிலையில் ரணில் திண்டாடிக்கொண்டிருக்கும் போது, இவ்விடயத்தில் இப்போது அமெரிக்காவும் தலையை நீட்டியுள்ளது. இந்தக் கப்பலை அனுமதிக்கக்கூடாது என அமெரிக்காவும் தெரிவிக்கவுள்ளது. இந்த ஆட்சேபனையை இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சாங் இலங்கை வெளிவிவகாரத்துறை அமைச்சிடம் தெரிவிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை அரசாங்கம் அனைத்துலக நாணய நிதியத்திடம் ஆதரவை கோரிய வேளையில்இ அந்த நிதியில் வலுவான செல்வாக்கு செலுத்தக்கூடிய மற்றும் அதற்கு பெரும் பங்களிப்பை வழங்கும் அமெரிக்கா அதிருப்தியை வெளியிடுவது இந்த நேரத்தில் இலங்கைக்கு மிகவும் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும்.
மேலும்இ ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் பிரதான குழு நாடுகளில் அமெரிக்காவும் உள்ளதாகவும்இ அதன் மூலம் ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் பெரும் செல்வாக்கை செலுத்த முடியும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடும் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ள இலங்கை சீனக்கப்பல் விவகாரத்தினால் புதிதாக இராஜதந்திர நெருக்கடி ஒன்றுக்குள் அகப்பட்டுள்ளது. இந்தியாவையும் பகைக்காமல், சீனாவையும் பகைக்காமல் இந்த நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு ரணிலிடம் இருக்கக்கூடிய உபாயம் என்ன?
Exit mobile version