சீனத் தூதுவரின் வடக்கு விஜயம்: இது முடிவு மட்டுமல்ல ஆரம்பமும் – அகிலன்

சீனத் தூதுவரின் வடக்கு விஜயம்

அகிலன்

சீனத் தூதுவரின் வடக்கு விஜயம்: இந்தியக் கடல் எல்லையில் உள்ள இராமர் பாலத்தை வெள்ளிக்கிழமை நண்பகல் இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ ஷங் ஹொங் பார்வையிட்டு, வடபகுதிக்கான தமது பயணத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார். அப்போது அவர் தெரிவித்த வசனம்தான் “இது முடிவு மட்டுமல்ல ஆரம்பமும்” என்பது. தனது தற்போதைய விஜயத்தை முடிவுக்குக் கொண்டு வந்தாலும், வடக்கில் சீனாவின் செயற்பாடுகள் தொடரும் என்பதை இதன் மூலமாக அவர் சர்வதேசத்துக்குத் தெளிவாக உணர்த்தியிருக்கின்றார். இந்தியாவுக்கு சவால்விடும் வகையில் அதிவேக வோர்ட்டர் ஜெட் படகில் இந்திய கடல் எல்லை வரை வென்று இராமர் பாலத்தை பார்வையிடடு, அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் தரித்து நின்றும் வந்திருக்கின்றார்.

IMG 20211215 WA0046 1 சீனத் தூதுவரின் வடக்கு விஜயம்: இது முடிவு மட்டுமல்ல ஆரம்பமும் - அகிலன்இராஜதந்திரிகள் வடபகுதிக்கு விஜயம் செய்வதும் புதிதல்ல. வழமையானது தான். ஆனால், சீனத் தூதுவரின் விஜயமும், வட பகுதியில் அவர் மேற்கொண்ட செயற்பாடுகளும், அவர் தெரிவித்த கருத்துக்களும் பிராந்திய அரசியலில் வட பகுதியை மையப்படுத்திய ஒரு வியூகத்தை சீனா அமைக்கின்றது என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றது. அத்துடன், வடபகுதியில் இந்தியாவுக்குச் சவால்விடும் வகையில் அவரது செயற்பாடுகள் அமைந்திருப்பதையும் காணக் கூடியதாக இருந்தது. வடக்கில் இந்தியா மட்டும்தான் முதலீடுகளைச் செய்ய முடியும் என்ற வகையில் காணப்படும் நிலைப்பாட்டுக்கு சவால்விடுவதாக அவரது இந்த விஜயம் அமைந்திருந்தது.

சீனத் தூதுவரின் வடபகுதி விஜயம் இடம்பெற்ற சந்தர்ப்பம் முக்கியமானது. இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகளில் அண்மைக் காலமாக ஒரு இடைவெளி ஏற்பட்டிருப்பது இரகசியமானதல்ல. சேதனப் பசளையுடனான சீனக் கப்பல் கொழும்புத் துறைமுகத்தில் வைத்து திருப்பி அனுப்பப்பட்டதுடன், இந்த முரண்பாடுகள் ஆரம்பமாகின. ஆதன் தொடர்ச்சியாக, இலங்கையின் மக்கள் வங்கிக்கு சீன நிறுவனம் தடை விதித்தமை போன்றன இடம்பெற்றன. இதே வேளையில், நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச இந்தியாவுக்கான விஜயம் ஒன்றையும் மேற்கொண்டிருந்தார். இதன் தொடர்ச்சியாக இலங்கை எதிர்கொள்ளும் நிதிப் பிரச்சினைக்குத் தீர்வைக் காணக்கூடிய வகையிலான திட்டம் ஒன்றை, இந்தியா தயாரித்திருப்பதாகத் தெரிகின்றது.

சீனாவின் நிவாரணங்கள்

சீனத் தூதுவரின் வடக்கு விஜயம்இவ்வாறான ஒரு பின்னணியில் தான் சீனத் தூதரின் யாழ்ப்பாண விஜயம் இடம் பெற்றது. அவரது இந்த விஜயத்தில் மூன்று நோக்கங்கள் பிரதானமாக இருந்துள்ளன. ஓன்று – வடபகுதி மக்களுடனான உறவுகளை வலுப்படுத்திக் கொள்வது. நம்பிக்கையைப் பெற்றுக்கொள்வது. இரண்டாவது, முதலீடுகளுக்கான வாய்ப்புக்கள் குறித்து ஆராய்வது. மூன்று – வடக்கின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை நேரில் சென்று பார்வையிடுவதன் மூலமாக இலங்கை மக்களுக்கும் சர்வதேசத்துக்கும் ஒரு செய்தியைச் சொல்வது. இந்த மூன்று இலக்குகளையும் தூதுவரும் குழுவினரும் கச்சியதாகச் செய்திருப்பதாகவே தெரிகின்றது.

வடபகுதியில் சீனா முன்னெடுத்த பல்வேறு திட்டங்களும் மக்களுடைய எதிர்ப்பைச் சந்தித்திருந்தன. கடலட்டைப் பண்ணையை அமைப்பதற்காக அவர்கள் முன்னெடுத்த திட்டங்கள் கூட தமிழ் ஊடகங்களாலும், தமிழ்த் தேசியக் கட்சிகளாலும் விமர்சிக்கப் பட்டதுடன், சந்தேகத்துடனேயே பார்க்கப்பட்டன. இலங்கை அரசாங்கத்துக்கு ஆதரவாக, ஜெனிவா போன்ற சர்வதேச அரங்குகளில் சீனா குரல் கொடுப்பதும், போர்க் காலத்தில் செய்த உதவிகளும்தான் சீனா குறித்த சந்தேகங்களுக்குக் காரணம். வடபகுதியில் தமது திட்டங்களை நிறைவேற்ற வேண்டுமானால், வடக்கு மக்களின் நம்பிக்கையை முதலில் பெறவேண்டும் என்ற உபாயத்துடன்தான் சீனத் தூதுவர் இந்த முறை களமிறங்கியிருந்தார்.

வடபகுதியில் அண்மைக்காலத்தில் அதிகளவுக்குப் பாதிக்கப்பட்ட தரப்பாக இருப்பவர்கள் மீனவர்கள். இந்திய மீனவர்களின் ஆக்கிரமிப்பும் அவர்களை வெகுவாகப் பாதித்திருக்கின்றது. இந்தப் பின்னணியில், மீனவர்களுக்கான உதவித் திட்டங்கள் பலவற்றுடன்தான் சீனத்தூதுவர் வடபகுதிக்குச் சென்றிருந்தார். யாழ்ப்பாணத்திலும், மன்னாரிலும் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்காக பெருமளவு நிவாரணங்கள் வழங்கப்பட்டன. குறிப்பாக, பெறுமதியான மீன்பிடி வலைகள் கொடுக்கப்பட்டன. இதன் மூலமாக மக்களுடைய நம்பிக்கையைப் பெற்றுக்கொள்ள முடியும் என சீனா கருதுகின்றது.

இரண்டாவதாக முதலீட்டுக்கான வாய்ப்புக்களை ஆராய்வது சீனத்தூதுவரின் முக்கிய நேர்கங்களில் ஒன்றாக இருந்தது. வடபகுதியில் சீனாவின் முதலீடுகள் என்றவுடன் அதனை சந்தேகக் கண்களுடன் பார்க்கும் மன நிலையும், எதிர்ப்பதும் தமிழ் மக்களுடைய வழமையாக இருக்கின்றது. அதனால்தான் சீன நிறுவனம் ஒன்று தமது கடலட்டைப் பண்ணைகளை அண்மைக்காலம் வரையில் இரகசியமாகவே நடத்தியது. அதனை விடவும், மேலும் சில முதலீடுகளைச் செய்வதற்கும் சீனா திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் மக்களின் நாடித்துடிப்பை அறிவது. அவர்களுடைய நம்பிக்கையை வெல்வது. முதலீட்டுக்கான வாய்ப்புக்களை ஆராய்வது என்பது அவரது விஜயத்தின் நோக்கங்களில் ஒன்றாக இருந்துள்ளது.

3 தீவுகளில் சீனா

சீனத் தூதுவரின் வடக்கு விஜயம்யாழ்ப்பாணத்தில் உள்ள மூன்று தீவுகளில் ஏற்கனவே காற்றாலை, சூரிய சக்தி மின்னுற்பத்தி நிலையம் ஒன்றை அமைப்பதற்கான உடன்படிக்கை ஒன்றை சீனா செய்திருந்தது. அது இடை நிறுத்தப் பட்டிருப்பதாக இரு வாரங்களுக்கு முன்னர் செய்தி வெளியாகியிருந்த போதிலும், அது தவறான செய்தி என சீனத் தூதுவர் யாழ்ப்பாணத்தில் தனியார் ஊடக நிறுவனம் ஒன்றின் பிரதானிகளுடனான சந்திப்பின் போது தெரிவித்தார். குறிப்பிட்ட திட்டத்தை தாம் கைவிட்டு விடவில்லை எனவும் அது முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். அதேவேளையில், யாழ்ப்பாணத்தில் உள்ள மற்றொரு தீவையும் பெறுவதற்கான முயற்சிகளை சீனா மேற் கொண்டிருப்பாக மற்றொரு தகவல் வெளியாகியிருக்கின்றது.

யாழ்ப்பாணத்தின் கரையோரப் பகுதிகளையும், மன்னார் கடற்பகுதிகளும்தான் சீனத்தூதுவரின் கவனத்துக்குரிய இடங்களாக இருந்துள்ளதை அவரது மூன்றுநாள் விஜயத்தின் போது அவதானிக்க முடிந்தது. குறிப்பாக யாழ்ப்பாணத்தில் பருத்தித்துறை துறைமுகத்துக்குச் சென்ற அவர், அங்கிருந்து இந்தியக் கரை தெரிகின்றதா என தொலைநோக்கி ஊடாகப் பார்த்தார். இங்கிருந்து இந்தியா எவ்வளவு தூதரம் எனவும் கேள்வி எழுப்பினார். அது அவருக்குத் தெரியாததல்ல. ஆனால், அந்தக் கேள்வியின் ஊடாக அவர் உணர்த்த முனைந்த செய்தி முக்கியமானது.

சீனத் தூதுவரின் வடக்கு விஜயம்அதேபோல அரியாலையில் சீன நிறுவனம் ஒன்றினால் மேற்கொள்ளப்படும் கடலட்டைப் பண்ணைக்கும் அவர் சென்றார். யாழ்ப்பாண மக்களுக்கு வேலைவாய்ப்பு, வாழ்வாதாரம் என்பவற்றுடன், நாட்டுக்கு அந்நியச் செலவாணி வருமானமும் இதன்மூலம் பெருமளவுக்குக் கிடைக்கின்றது என்பதை அவர் அங்கு தெரிவித்தார். இங்கு உற்பத்தியாகும் கடலட்டைகள் முழுமையாக சீனாவுக்கே ஏற்றுமதி செய்யப்படுகின்றன என்பது முக்கியமானது. கடலட்டைப் பண்ணைகளை வடக்கில் பல இடங்களுக்கும் விஸ்தரிப்பதுதான் சீனாவின் நோக்கம்.

இராமர் பாலம்

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் உள்ள சரித்திரப் புகழ் பெற்ற இராமர் பாலத்தை எதற்காக சீனத்தூதுவர் நேரில் சென்று பார்வையிட்டார் என்பதுதான் புதிராக உள்ளது. சுமார் ஒரு மணி நேரம் கடலில் பயணித்து இந்திய எல்லை வரை சென்ற அவர், குறிப்பிட்ட மணல் திட்டில் இறங்கி அரை மணி நேரம் அங்கிருந்துள்ளார். இதன் மூலமாக இந்தியாவுக்கு அவர் சொல்ல முற்பட்ட செய்தி என்ன? இந்தியாவை சீண்டிப் பார்க்கும் ஒரு நகர்வாகவே இது கருதப்படுகின்றது.

சீனத் தூதுவரின் வடக்கு விஜயம்இராமர் பாலத்தை பார்வையிட்ட பின்னர் தலைமன்னார் திரும்பிய அவர், “இது முடிவு மட்டுமல்ல. ஆரம்பமும் கூட” என்று தெரிவித்ததன் அர்த்தம் என்ன?

சீனத் தூதுவரின் பயணம் குறித்த செய்திகள் உடனுக்குடன் இந்தியத் தரப்புக்கு கிடைத்துக் கொண்டிருந்தன. அதற்கான ஏற்பாடுகளை இந்தியா இரகசியமாகச் செய்திருந்து. இராமர் பாலத்துக்கு சீனத் தூதுவர் வரப்போகின்றார் என்ற செய்தியும் இந்தியாவுக்கு கிடைத்திருந்தது. அதனையடுத்து இந்திய கடற்படையும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.

சீனத் தூதுவரின் வடக்கு விஜயம் டில்லியை நன்கு குழப்பியுள்ளது.  இந்தியாவின் பிரதிபலிப்பு எவ்வாறாகவுள்ளது என்பதை சில தினங்களில் பார்க்கக்கூடியதாக இருக்கும்.

சீனாவின் சவால்கள்

ஏனைய நாடுகளின் தூதுவர்கள் வடபகுதிக்கு வருவதற்கும் சீனத் தூதுவரின் வருகைக்கும் இடையில் முக்கியமான முரண்பாடு ஒன்றுள்ளது. மேற்கு நாடுகளின் தூதுவர்கள் எப்போதும் தமிழ் மக்களுடைய அபிலாசைகள், மனித உரிமை விவகாரங்கள் குறித்து அக்கறை வெளியிடுபவர்களாக இருந்துள்ளார்கள். அதற்காக கொழும்புக்கு அழுத்தம் கொடுத்துள்ளார்கள். சுர்வதேச அரங்குகளில் அதற்காக குரல் கொடுத்துள்ளார்கள். ஆனால், சீனா ஒருபோதும் தமிழர்களுடைய அரசியல் பிரச்சினைகள் குறித்தோ மனித உரிமைகள் குறித்தோ அக்கறை வெளியிட்ட ஒரு நாடல்ல.

Tamil News