Home செய்திகள் இலங்கையில் தீவிரவாத தாக்குதல் மீண்டும் இடம்பெற வாய்ப்புண்டு; சரத் வீரசேகர எச்சரிக்கை

இலங்கையில் தீவிரவாத தாக்குதல் மீண்டும் இடம்பெற வாய்ப்புண்டு; சரத் வீரசேகர எச்சரிக்கை

தீவிரவாத தாக்குதல்
நியூஸிலாந்தில் அண்மையில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல், இலங்கையில்தான் நடத்தப்பட வாய்ப்புகள் இருந்தன என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு நேற்று கருத்து வெளியிட்ட அவர், உயிர்த்த ஞாயிறு தீவிரவாத தாக்குதல்கள் பற்றி இலங்கை அரசு நடத்திவரும் விசாரணைகள் போதுமானதாக இல்லை என்று முன்வைக்கப்படும் விமர்சனங்களை நிராகரித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்-

ஞானசார தேரர் குறிப்பிடுவதுபோல இலங்கையில் எந்தச் சந்தர்ப்பத்திலும் மீண்டுமொரு தீவிரவாத தாக்குதல் மேற்கொள்ள வாய்ப்புகள் இருக்கின்றன. ஏனென்றால் ஐ.எஸ் தீவிரவாத போதனைகளைக் கொண்டிருப்பவர்கள் இருக்கலாம். அவர்களால் தாக்குதல் எந்தச் சந்தர்ப்பத்திலும் ஏற்படும் அபாயம் காணப்படுகின்றது. நான் அனைத்து முஸ்லிம் மக்களையும் குற்றம் சுமத்துவதில்லை. ஆனால் சிங்களவர்கள், தமிழ் மக்கள் தவிர முஸ்லிம் மக்களே இந்த அடிப்படைவாத போதனைகளில் ஈர்க்கப்படுகின்றனர்.

கடந்த மாதம் நியூஸிலாந்தில் நடந்த கத்திக்குத்து தாக்குதலுக்கு முன்னதாக அவர் நாடு கடத்தப்படவிருந்தார். அவ்வாறு நாடு கடத்தப்பட்டிருந்தால் இலங்கையில்தான் அந்தத் தாக்குதலை அவர் நடத்தியிருந்திருப்பார். சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா சஹ்ரானுடன் தொடர்பில் இருந்தார். அவர் ஊடாகவே ஐ.எஸ் போதனைகள் செய்யப்பட்டிருக்கின்றன.

அதேபோல உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் பற்றி இதுவரை 09 வழக்குகள் 05 மேல் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதுவரை 79 சந்தேக நபர்கள் தடுப்பிலும், 200 பேர்வரை விளக்கமறியலிலும் வைக்கப்பட்டுள்ளனர். எம்மால் முடிந்த அனைத்து நடவடிக்கையையும் மேற்கொண்டுள்ளோம். ஒரு இலட்சத்து 10 ஆயிரம் தொலைபேசி அழைப்புக்கள் பற்றி விசாரிக்கின்றோம். சந்தேக நபர்களுக்கு எதிராக 23000 குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருக்கின்றோம்.

இந்த விவகாரம் பற்றி குற்றப் புலனாய்வுப் பிரிவின் 58 பேர் சட்டமா அதிபர் அலுவலகத்தில் இரண்டரை மாதங்களாக இராப்பகலாக பணிகளை செய்தார்கள். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளை தாமதப்படுத்துகின்றார்கள் என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை முற்றாக நிராகரிக்கின்றேன். கர்தினாலிடமும் இந்த விடயத்தை தெரிவித்திருக்கின்றேன்-என்றார்.

Exit mobile version