பயங்கரவாதச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் – தமிழ்க் கட்சிகள் கோரிக்கை

“பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்காக எந்தவொரு முன்மொழிவுகளையும் சமர்ப்பிக்கப்போவதில்லை. அந்தச் சட்ட வரைவு கைவிடப்பட வேண்டும். அதேவேளை, தற்போது அமுலில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டமும் முழுமையாக நீக்கப்பட வேண்டும்.” – இவ்வாறு தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

பயங்கரவாத எதிர்ப்பு சட்ட வரைவுக்கு எழுந்த எதிர்ப்பையடுத்து அதனை முன்வைத்துள்ள பிற்போட்டுள்ள அரசு, சட்டவரைவு தொடர்பில் திருத்தங்களை முன்வைக்குமாறு கோரியுள்ள நிலையிலேயே தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் அதன் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவிக்கையில்,

“பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மாற்றுவோம் என்று இலங்கை அரசு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையிலும் வாக்குறுதிகளை அளித்திருந்தாலும் அதனைத் தற்போது வரையில் நிறைவேற்றவில்லை.

பயங்கரவாதத்  தடைச் சட்டத்தை மாற்றியமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் புதிதாக உருவாக்கப்படும் சட்ட வரைவு ஏற்கனவே உள்ளதைவிட மோசமானது.

இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள சட்ட ஏற்பாடுகளுக்கு அமைவாக பயங்கரவாதத்தைத் தடுப்பதற்குப்  புதிதாக பிறிதொரு சட்டத்தை உருவாக்கத் தேவையில்லை.” – என்றார்.