போலந்து – பெலரூஸ் எல்லை: அகதிகள் நெருக்கடியில் அதிகரிக்கும் பதற்றம் – தமிழில்: ஜெயந்திரன்

அகதிகள் நெருக்கடியில் அதிகரிக்கும் பதற்றம்

போலந்து – பெலரூஸ் எல்லை:

அகதிகள் நெருக்கடியில் அதிகரிக்கும் பதற்றம்

தமிழில்: ஜெயந்திரன்

போலந்து நாட்டுக்குச் சென்று, அங்கிருந்து மைய ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்லும் எண்ணத்தோடு, மத்திய கிழக்கு நாடுகளையும் ஆசியாவையும் சேர்ந்த பெரும் எண்ணிக்கையிலான குடிபெயர்வாளர்கள், பெலரூஸ் நாட்டிலிருந்து போலந்து நாட்டுக்குள் செல்லும் ‘குஸ்நிற்ஸா’ (Kuznica) எல்லைக் கடவையில் திரண்டிருக்கிறார்கள். கடந்த வாரம் அதிகாரிகள் இந்தக் கடவையை மூடியிருப்பதோடு, பெரும் எண்ணிக்கையிலான மக்கள் அங்கு ஒன்று கூடியிருப்பதை வானவூர்திகளிலிருந்து எடுக்கப்பட்ட ஒளிப்படங்கள் காட்டுகின்றன. ஐரோப்பாவின் எல்லைப் புறத்தில் தற்போது உருவாகிக் கொண்டிருக்கும் ஒரு பாரிய மனித அவலத்தை இந்தக் கட்டுரை ஆராய்கின்றது.

மிக மோசமான புறச்சூழலை எதிர் கொள்ளுகின்ற குடிபெயர்வாளர்கள்

அகதிகள் நெருக்கடியில் அதிகரிக்கும் பதற்றம்

இந்த எல்லையில் சிக்கியுள்ள மக்கள், கடுங் குளிர், உணவுப் பற்றாக்குறை, மருத்துவ வசதிகள் இன்மை போன்ற நெருக்கடிகளைச் சந்தித்துக் கொண்டிருக்கும் அதேவேளை, அங்குள்ளவர்கள் தாக்கப்படுவதாகவும் நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து கொண்டிருப் பதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஏறத்தாழ 3500 பேர் திங்கட்கிழமை, குஸ்நிற்ஸா எல்லைக்கடவையில் திரண்டிருப்பதாக போலந்து நாட்டின் காவல்துறையினர் தெரிவித்திருக்கிறார்கள். இக்குறிப்பிட்ட எல்லைக் கடவையில் அண்ணளவாக 2000 எண்ணிக்கையிலான மக்கள் திரண்டிருப்பதாகவும் அவர்களில் 200 சிறுவர்களும் 600 பெண்களும் உள்ளடங்குகிறார்கள் என்று பெலரூஸ் நாட்டைச் சேர்ந்த எல்லைக்கண்காணிப்பு அதிகாரிகள் சிஎன்என் ஊடகத்துக்குத் தகவல் வழங்கியிருக்கிறார்கள். சிறுவர்களுள் பச்சிளம் குழந்தைகள் பலரும் அடங்குகிறார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அகதிகள் நெருக்கடியில் அதிகரிக்கும் பதற்றம்தாங்கள் போலந்து எல்லைக்கு வந்து சேர்ந்த போது, தன்னையும் தன்னுடனிருந்த இன்னும் மூவரையும் காவலாளர்கள் பிடித்ததாக, தனது மூன்றாவது முயற்சியின் பின்னர் போலந்து நாட்டுக்குள் மிக அண்மையில் வந்து சேர்ந்த சிரியா நாட்டைச் சேர்ந்த தஞ்சக் கோரிக்கையாளர் ஒருவர் எமது ஊடகத்துக்குக் கூறினார். அங்கே, தான் தாக்கப்பட்டதாகவும், தனது முகத்தில் காயங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் தனது மூக்கு உடைந்திருப்பதாகவும் தனது விலா எலும்புகளில் பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

போலந்து நாட்டு எல்லைப்புறத்தில் 7 குடிபெயர்வாளர்கள் இறந்திருந்ததை தாங்கள் கண்டதாக போலந்து நாட்டைச் சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்தார்கள். பெலரூஸ் நாட்டின் எல்லைப் புறத்திலும் பல இறப்புகள் ஏற்பட்டிருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

போலந்து அதிகாரிகளின் கூற்றுப்படி, எல்லையைக் கடப்பதற்கு நவம்பர் மாதத்தின் ஆரம்பத்தில் இருந்து, மேற்கொள்ளப்பட்ட பல்லாயிரக் கணக்கான முயற்சிகள் பதிவாகி இருக்கின்றன.

‘குஸ்நிற்ஸா’ எல்லையைக் கடப்பதற்கு பெரும் எண்ணிக்கையிலான மக்கள் கடந்த வாரஇறுதியில் பலவந்தமாகத் தூண்டப்பட்டதாக போலந்து எல்லைக்காவற் படையின் பேச்சாளர் ஒருவர் கருத்துத் தெரிவித்ததோடு, எல்லையிலே மிகப் பதற்றமானதும் அதே நேரம் மிகவும் ஆபத்தானதுமான சூழல் நிலவுவதாகவும் தெரிவித்தார்.

போலந்து எல்லையை நோக்கிச் செல்லக் குடிபெயர்வாளர்களை பெலரூஸ் அரசைச் அகதிகள் நெருக்கடியில் அதிகரிக்கும் பதற்றம்சேர்ந்தவர்கள் கட்டாயப்படுத்தியதாக போலந்து எல்லைக் காவற் படையின் பிரதிநிதிகள் கடந்த வாரம் சிஎன்என் ஊடகத்துக்குத் தெரிவித்திருந்தார்கள்.

குறிப்பிட்ட எல்லையில் மக்கள் பெருமளவில் திரள்வதைத் தடுப்பதற்கு பெலரூஸ் வேண்டியது அனைத்தையும் செய்து வருகின்றது என்று அந்த நாட்டு அதிபரான அலெக்சாண்டர் லூக்காஷெங்கோ (Alexander Lukashenko) தெரிவித்தார்.

மிகச் சிறிய எண்ணிக்கையிலான மக்களையே போலந்து அதிகாரிகள் தடுத்து வைத்திருப்பதுடன் மிகச்சிறிய எண்ணிக்கையிலான மக்களே போலந்து நாட்டில் தஞ்சக் கோரிக்கைக்கு விண்ணப்பிக்கவும் அனுமதிக்கப் பட்டிருக்கிறார்கள். மற்றவர்கள் உடனடியாக பெலரூஸ் நாட்டுக்குத் திருப்பி அனுப்பப் பட்டிருக்கிறார்கள். போலந்து எல்லைக்குச் செல்லும் வழிவகைகள் அனைத்தும் கட்டுப்படுத்தப் பட்டிருக்கின்றன. ஊடகவியலாளர்களும் உதவி அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் அந்த இடத்துக்குச் செல்ல முடியாத நிலை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

தனது நாட்டின் தேசியத்துக்கு அதீத முன்னுரிமை கொடுக்கும் போலந்து அரசு

தனது நாட்டின் இராணுவம், காவல்துறை, எல்லைக்காவற் படையினர் போன்றவர்களுடன் தான் கூட இருப்பதாகக் காட்டும் நோக்குடன், போலந்து அதிபரான அஞ்சே டூடா (Andrzej Duda) கடந்த வியாழக்கிழமை குறிப்பிட்ட எல்லைக்குப் பயணம் செய்திருக்கிறார். அதற்கு முன்னதாக தங்கள் சுதந்திர தினத்தைக் கொண்டாட வோசோவில் (Warsaw) கூடியிருந்த மக்கள் நடுவில் டூடா உரையாற்றியிருந்தார். “எமது பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் போன்றவற்றுக்கும் அடிப்படையாக விளங்குகின்ற கிறீஸ்தவ விழுமியங்களின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்ட ஐரோப்பாவின் ஒரு பகுதியாகவே கடந்த காலங்களில் நாங்கள் இருந்திருக்கிறோம். எதிர்காலத்திலும் அப்படித்தான் இருப்போம்” என்று பெலரூசுடன் தாம் பகிர்ந்து கொள்ளும் எல்லைப் பகுதியை மூடிவைத்திருக்கும் தமது கடுமையான கொள்கைக்கு ஆதரவாகப் பேசும் போது தேசியத் தொனியுடன் ஆற்றிய உரையில் அதிபர் டூடா குறிப்பிட்டார்.

“உங்கள் தாய்நாட்டைப் பாதுகாக்க வேண்டிய நேரம் இப்போது வந்திருக்கிறது. கடந்த காலத்தை விட இன்னும் அதிகமாக எங்களது எல்லைகளை இப்போது நாங்கள் பாதுகாக்க வேண்டும். அர்ப்பணிப்புடனும், தூக்கமற்ற இரவுகளுடனும், குளிர், மற்றும் இன்னோரன்ன கஷ்டங்கள் நடுவிலும் நாங்கள் இதனைச் செய்ய வேண்டும். எமது நாடான போலந்து நாட்டுக்கு எதிராகவும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு எதிராகவும் மிகவும் நன்றி கெட்டதனமாக நடந்து கொள்கின்ற பெலரூஸ் அரசின் நடவடிக்கைகளால் இப்படியான நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டிருக்கிறோம”  என்று அதிபர் தனது உரையில் குறிப்பிட்டார்.

அதே நேரம், பாதுகாப்பைக் கோருகின்ற தஞ்சக் கோரிக்கையாளர்களின் விண்ணப்பத்தை ஏற்றுக் கொள்ளாது, மீண்டும் பலவந்தமாக அவர்களை பெலரூஸ் நாட்டுக்குத் திருப்பி அனுப்புவதன் மூலம், அந்தத் தஞ்சக் கோரிக்கையாளர்களுக்கு இருக்கின்ற பன்னாட்டு உரிமையை மறுப்பதாக, போலந்து நாட்டின் ஆளுங்கட்சியை மனித உரிமை அமைப்புகள் குற்றஞ்சாட்டுகின்றன.

தங்கள் நாட்டில் துன்புறுத்தல்களைச் சந்திக்கும் போது பிறிதொரு நாட்டில் ஒருவர் தஞ்சக் கோரிக்கையை முன்வைக்கலாம் என்று மனித உரிமைச் சாசனத்தின் 14வது பிரிவு சுட்டிக் காட்டுகிறது. போலந்தோ தனது செயற்பாடுகள் சட்டபூர்வமானவை எனக்கூறுகின்றது.

மிகப்பெரும் அரசியல் நெருக்கடி உருவாகிக்கொண்டிருக்கிறது

பெலரூஸ் நாட்டின் எல்லையில் அயல் நாடுகளான போலந்து, லத்வியா, லித்துவேனியா ஆகிய நாடுகளின் அதிபர்களால் ஒரு நெருக்கடி உருவாக்கப் படுவதற்கும், பின்னர் பெலரூசுடனான தமது எல்லையில் ஒரு தடுப்புச் சுவரை எழுப்புவதற்கான சட்டத்தைப் போலந்து அதிபர் கொண்டுவருவதற்குமான நெருக்கடியின் காரணகர்த்தாவாக பெலரூஸ் அதிபர் லூக்காஷெங்கோவே இருப்பதாக குற்றஞ் சுமத்தப்பட்டிருக்கிறது.

“குடிபெயர்வாளர்களை ஒரு கலப்பு உத்தியாக பெலரூஸ் கையாள்வதை ஏற்றுக் கொள்ள முடியாது” என்று நேற்றோவின் செயலாளர் நாயகமான ஜென்ஸ் ஸ்ரோல்ற்றன் பேர்க் (Jens Stoltenberg) தெரிவித்திருக்கிறார். இவ்வாறான குற்றச்சாட்டுக்களைத் தொடர்ந்து மறுத்து வரும் லூக்காஷெங்கோவின் அரசு, குடிபெயர்வாளர்களின் பயணங்களுக்கும் அவர்கள் சந்திக்கும் இன்னல்களுக்கும் மேற்குலகே காரணம் எனப் பதிலுக்குக் குற்றஞ்சாட்டுகிறது. அரசியல் ரீதியாகவும் பொருண்மிய ரீதியாகவும் பெலரூசின் மிகப் பெரியதும் மிக முக்கியமானதுமான நட்பு நாடாக விளங்குகின்ற ரஷ்யா, பெலரூஸ் அதிபர் இப்பிரச்சினையைக் கையாளும் விதத்துக்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்ததோடு, இந்த நெருக்கடிக்கும் தமக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை எனவும் தெரிவித்திருக்கிறது.

“பெலரூஸ்-போலந்து எல்லையில் தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கிற இந்த நெருக்கடியுடன் ரஷ்யா எந்தவிதத்திலும் சம்பந்தப்பட்டிருக்கவில்லை” என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் (Vladimir Putin) சனிக்கிழமை குறிப்பிட்டார்.

பெலரூஸ் வான்வெளியில் அந்த நாட்டின் விமானப்படையுடன் இணைந்து ஒரு விமானப்படை நடவடிக்கையை சென்ற வாரம், மேற்கொண்டதன் மூலம் லூக்காஷெங்கோ அரசுக்கு தனது ஆதரவை ரஷ்யா கோடிட்டுக்காட்டியிருக்கிறது.

Tu-22M3  என்ற பெயரைக் கொண்ட மிக நீண்ட தூரத்துக்குக் குண்டுவீசித் தாக்கக் கூடிய ஆற்றலைக் கொண்ட Tupolev  வகையைச் சேர்ந்த இரண்டு மிகையொலி குண்டுவீச்சு விமானங்கள், கடந்த புதன்கிழமை, இரண்டு நாட்டு ஆயதப் படையினரும் இணைந்து மேற்கொண்ட ஒரு பயிற்சி நடவடிக்கையில் தரைக் கட்டுப்பாட்டு மையங்களுடன் இணைந்து செயற்படும் நடவடிக்கையை ஒத்திகை பார்த்ததாக, ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு செய்தி வெளியிட்டது. பெலரூசுக்கு மேலாகப் பறந்து ரஷ்ய விமானங்கள் ஒத்திகை பார்த்தது இது இரண்டாவது தடவையாகும்.

வெள்ளிக்கிழமை போலந்து எல்லைக்கு அருகாக பாரசூட் வீரர்களுக்கான ஒரு ஒத்திகையை இரண்டு நாடுகளும் இணைந்து மேற்கொண்டன. இது இப்படியிருக்க, உக்ரேயின் (Ukraine) நாடும் பெலரூஸ் நாட்டுடன் தாம் பகிர்ந்து கொள்ளும் எல்லைக்கு அருகில் தமது இராணுவ நடவடிக்கைகளை அதிகரித்திருக்கின்றன. குடிபெயர்வாளர்கள் தொடர்பாக அப்பிரதேசத்தில் ஏற்படக்கூடிய ஒரு நெருக்கடியைத் தவிர்ப்பதற்காக போலந்து, பெலரூஸ் ஆகிய நாடுகளுடன் தாம் பகிர்ந்துகொள்ளும் எல்லைக்கு அருகில் உள்ள ஒரு இடத்தில் 8500 எண்ணிக்கையிலான படையினரைக் கொண்ட ஒரு இராணுவப் பயிற்சி நடவடிக்கையை மேற்கொள்ள இருப்பதாக யூக்ரேயின் வியாழக்கிழமை அறிவித்தது.

“யூக்ரேயின் எல்லைக்கு அருகில் தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கின்ற அசாதாரணமான இராணுவ நகர்வுகளை தாம் மிகவும் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருப்பதாகவும் என்ன நிகழ்ந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கத் தாம் தயாராக இருப்பதாகவும்” ‘Axios on HBO’ என்ற தொலைக்காட்சி நிகழ்வில் கலந்து உரையாற்றிய ஸ்ரோல்ற்றன்பேர்க் (நேற்றோ அமைப்பின் செயலாளர் நாயகம்) தெரிவித்தார்.

“தற்போது மேற்கொண்டு வரும் இராணுவ நகர்வுகளைக் கைவிட்டு, பதற்றத்தைக் குறைத்து, யூக்ரேயினில் உள்ளும் புறமும் தாம் மேற்கொண்டு வரும் இராணுவச் செயற்பாடுகள் தொடர்பாக வெளிப்படைத் தன்மையைப் பேண வேண்டும்” என்று யூக்ரேயின் வெளிவிவகார அமைச்சருடன் பிரஸ்ஸல்ஸ் நகரில் தான் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, ரஷ்யாவை நோக்கி ஸ்ரோல்ற்றன்பேர்க் அழைப்பு விடுத்தார். யூக்ரேயின் (NATO) நேற்றோ அமைப்பின் ஓர் அங்கத்துவ நாடு அல்ல. இருப்பினும் அந்த நாட்டுக்கு உதவத் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார். ‘ரஷ்யா இந்தப் பிரதேசத்தில் தனது இராணுவ நடவடிக்கையை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது’ என்று ரஷ்யாவை அமெரிக்கா குற்றஞ்சாட்டிவரும் பின்புலத்தில், ஏற்கனவே மிகப் பலவீனமான அரசியல் ஒழுங்கைக் கொண்டிருக்கின்ற இப்பிரதேசத்தை, போலந்து-பெலரூஸ் எல்லையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி, மேலும் கேள்விக்கு உள்ளாக்கி, பாரிய பூகோள அரசியல் நெருக்கடி ஒன்றைத் தோற்றுவிக்கக் கூடிய ஆபத்து இருக்கின்றது என்று அரசியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள்.

ரஷ்யா மேற்கொண்டு வரும் அசாதாரண இராணுவ நகர்வுகள் தொடர்பாகத் தாம் கவலையடைவதாகவும், 2014ம் ஆண்டு யூக்ரேயினைத் தாம் ஆக்கிரமித்தது போன்றதொரு நகர்வை மீண்டும் செய்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்றும் அமெரிக்காவின் அரசாங்க அமைச்சர் அன்ரனி பிளிங்கன்  (Antony Blinken) கடந்த புதன்கிழமை தெரிவித்தார். “யூக்ரேயினைத் தாம் ஆக்கிரமிக்கலாம் என்று முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் வெறுமையானவை, ஆதாரமற்றவை, பதற்றத்தை ஏற்படுத்துபவை” என்று கடந்த வெள்ளிக்கிழமை ரஷ்யா கருத்துத் தெரிவித்தது.

புதிய தடைகளை எதிர்கொள்ளும் பெலரூஸ்

“பெலரூஸ் நாடு மேற்கொண்டு வருகின்ற மனித உரிமை மீறல்களுக்கு எதிராக விதிக்கப்பட்ட தடைகளுக்குப் பழிவாங்கும் நோக்கத்துடனேயே குடிபெயர் வாளர்களின் இந்த நெருக்கடியை வேண்டுமென்றே பெலரூஸ் உருவாக்கியிருக்கிறது” என்று ஐரோப்பியத் தலைவர்கள் பெலரூஸ் மீது குற்றம் சுமத்தியிருக்கிறார்கள். பெலரூஸ் அரசோ இக்குற்றச்சாட்டை தொடர்ந்து மறுத்து வருகிறது,

அகதிகள் நெருக்கடியில் அதிகரிக்கும் பதற்றம்பெலரூஸ்-போலந்து எல்லையில் தற்போது உருவாக்கப்பட்டுள்ள நெருக்கடிக்குப் பதிலிறுக்கும் விதமாக பெலரூசுக்கு எதிராகப் புதிய தடைகளை அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் கடந்த வாரம் விதித்திருக்கின்றன. “ஐரோப்பிய ஒன்றியம் பெலரூஸ் மீது ஏற்கனவே விதித்திருக்கும் தடைகளைத் தொடரப் போவதாக” ஒன்றியத்தின் வெளிநாட்டுக் கொள்கைக்குத் தலைமை தாங்குகின்ற ஜோசப் பொறல் (Joseph Borrell) தெரிவித்தார்.

“தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிகழ்வுகளுக்குப் பொறுப்பாக பெலரூஸ் மக்கள் நடுவில் இருப்பவர்களுக்கு எதிராக, ஒரு தொகுதி புதிய தடைகளை விதிக்க இருக்கிறோம்… சட்டவிரோதமான முறையில் எமது எல்லைகளை நோக்கி குடிபெயர்வாளர்களை நகர்த்திக் கொண்டிருக்கும் ஏனையவர்கள், விமான நிறுவனங்கள், பயண ஒழுங்கமைப்பு நிறுவனங்கள், என்று அனைவருக்கும் எதிராக புதிய வடிவமைப்பிலான தடைகளை நாங்கள் அமுல் நடத்தவிருக்கிறோம்”  என்று அவர் மேலும் தெரிவித்தார்.

சனநாயகம், மனித உரிமைகள், பன்னாட்டு ஒழுங்குவிதிகள் என்பவற்றுக்கு எதிராகத் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்ற பெலரூஸ் நாட்டின் தலைவர்கள், அவற்றுக்குப் பொறுப்புக்கூறும் வகையில, ஏற்கனவே விதிக்கப்பட்ட தடைகளின் தொடர்ச்சியாக மேலும் தடைகளை விதிக்க இருப்பதாக வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்புக் குழு தெரிவித்தது. புதிய தடைகள் எப்போது அமுல்நடத்தப்படும் என்பது தொடர்பாக அக்குழுவின் குரல்தரவல்ல அதிகாரி தெரிவிக்கவில்லை. “லூக்காஷெங்கோ அரசு முன்னெடுத்து வருகின்ற மனிதாயத்துக்கு எதிரான நடவடிக்கைகளால் நாம் ஆழமாகக் கவலையடைந்திருக்கிறோம். அத்துடன் இலகுவில் பாதிக்கப்படக் கூடிய இந்த மக்களை ஈனஇரக்கமின்றி வற்புறுத்துகின்ற நடவடிக்கையை மிகவும் வன்மையாக நாங்கள் கண்டிக்கிறோம்” என்று அதன் குரல்தரவல்ல அதிகாரி தெரிவித்தார்.

கடந்த ஒரு சில மாதங்களில் அமெரிக்கா இரண்டாவது சுற்றாக இந்த அறிவித்தல்களை மேற்கொண்டிருக்கிறது. மனித உரிமைகள், சனநாயகம் என்பவற்றுக்கு எதிராக ஒடுக்குமுறைகளை மேற்கொண்டு வருகின்ற பெலரூஸ் அரசைச் சேர்ந்தவர்களை இலக்கு வைத்து, ஒரு மிகப் பலமான நிறைவேற்றுக் கட்டளையை (Executive Order) வெள்ளை மாளிகை கடந்த ஆவணி மாதம் அறிவித்திருந்தது.

பெலரூசில் நாடு முழுவதும் பெருமளவான ஆர்ப்பாட்டங்களைத் தோற்றுவித்த தேர்தல் நடைபெற்று ஒராண்டு நிறைவடைந்த நாளில், இந்த நிறைவேற்றுக் கட்டளை வெளியிடப்பட்டது. அக்குறிப்பிட்ட தேர்தல் மோசடி நிறைந்தது என்று அமெரிக்காவும் பன்னாட்டு சமூகத்தைச் சேர்ந்தவர்களும் கண்டனம் செய்தது இங்கு நினைவு கூரத்தக்கது.

நன்றி:சிஎன்என்.கொம்.

ilakku Weekly Epaper 157 November 21 2021 Ad 1 போலந்து – பெலரூஸ் எல்லை: அகதிகள் நெருக்கடியில் அதிகரிக்கும் பதற்றம் - தமிழில்: ஜெயந்திரன்