மியன்மார் மோதல்களால் பல்லாயிரம் பேர் தாய்லாந்துக்கு தப்பியோட்டம்

மியன்மாரில் அந்நாட்டு இராணுவத்துக்கும் கிளர்ச்சிக் குழுக்களுக்கும் இடையிலான மோதல் காரணமாக பல்லாயிரக்கணக்கான பர்மிய பொதுமக்கள் தாய்லாந்துக்கு தப்பிச் சென்றுள்ளனர் என தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

ஆங் சான் சுங்கின் அரசாங்கம் 2 வருடங்களுக்கு முன்னர் இராணுவப் புரட்சி மூலம் கவிழ்க்கப்பட்ட பின்னர் மியன்மாரில் கொந்தளிப்பான நிலை நீடித்து வருகிறது.

 இராணுவப் புரட்சிக்கு எதிராக இனத்துவ கிளர்ச்சிக் குழுக்களும் பொதுமக்கள் பாதுகாப்புப் படைகளும் போராடுகின்றன. இக்குழுக்கள் மியன்மார் இராணுவத்துடன் அடிக்கடி மோதல்களில் ஈடுபடுகின்றன.

மியன்மாரின் தென்கிழக்கு பிராந்தியத்திலுள்ள கரேன் மாநிலத்தில் சில தினங்களாக இராணுவத்துக்கும் கிளர்ச்சிக் குழுக்களுக்கும் இடையில் மோதல்கள் தீவிரமடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அப்பகுதியில் மோதல்கள் நடந்ததை, இராணுவ ஆட்சியாளர்களுக்கு எதிரான கரேன் தேசிய இராணுவத்தின் தலைவர் ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில், பெரும் எண்ணிக்கையான மக்கள் எல்லையைக் கடந்து தாய்லாந்துக்கு தப்பிச் சென்றுள்ளனர்.

சுமார் 3,998 பேர் தற்காலிக புகலிடம் நாடி தாய்லாந்துக்கு வந்துள்ளனர் என தாய்லாந்தின் தாக் மாகாண அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தாய்லாந்து, ஆயுதப்படைகள், பொலிஸார் மற்றம் சிவில் நிர்வாககத்தினர் நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருகின்றனர் என தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.