வரலாற்றை இளையவர்கள் சரியாக அறிந்து கொள்ள வழிகாட்டியாக அமைந்துள்ள நூலகம்

மெய்நிகர் நூலகத்தின் நோக்கம் என்ன?www.telibrary.com: வரலாற்றை இளையவர்கள் சரியாக அறிந்து கொள்ள வழிகாட்டியாக அமைந்துள்ள நூலகம். மெய்நிகர் நூலகத்தின் நோக்கம் என்ன? www.telibrary.com எனும் மெய்நிகர் நூலகத்தின் செயற்பாட்டாளர்கள் இலக்கு ஊடகத்திற்கு வழங்கிய செவ்வியின் முழுவடிவம்.

மெய்நிகர் நூலகத்தின் நோக்கம் என்ன?

வரலாறு மீண்டும் தமிழர்களுக்கு உயர்வு நல்கும்

கேள்வி?
www.telibrary.com எனும் மெய்நிகர் நூலகத்தின் நோக்கம் என்ன?

பதில்:
இன்றைய தமிழர் வரலாறு அழிவின் விளிம்பில் இருக்கின்றது. தமிழீழத்தின் மிகவும் பொக்கிசமான கட்டிடக்கலை மற்றும் தமிழ் கலாச்சாரம், வரலாறு மற்றும் மொழி ஆகியவற்றின் மிக மதிப்புமிக்க ஆவணங்கள் உடைமைகளைக் கொண்டிருந்த யாழ். பொது நூலகம் எரியூட்டப்பட்டு 40  ஆண்டுகள் ஆகிவிட்டன. தமிழர்களின் பாரம்பரியம், கலாச்சாரம் சிங்கள இனவாதத்தால் திட்டமிட்டு தீக்கிரையாக்கப்பட்டது.

தென்னாசியாவிலேயே மூன்றாவது பெரிய நூலகமாக சிறந்து விளங்கிய யாழ். பொது நூலகம், ஈழத்தமிழர்களின் வரலாறு, பண்பாடு, பாரம்பரியமிக்க மருத்துவக் குறிப்புகள், ஓலைச்சுவடிகள் போன்ற 97 ஆயிரத்திற்கும் மேலான விலை மதிக்க முடியாத பொக்கிச நூல்கள் எரித்து சாம்பலாக்கப்பட்டன. தமிழர் வரலாற்றின் அடையாளச் சின்னமாக விளங்கிய யாழ். பொது நூலகம் 31 மே 1981 நள்ளிரவு 10 மணியளவில் தீ மூட்டப்பட்டது.

சிங்கள இனவெறியர்களால் திட்டமிட்டு கட்டவிழ்க்கப்பட்ட இந்த கொடிய வன்செயல் தமிழர்களின் அடையாளங்கள், கலாச்சார அழிப்பாக மட்டுமல்லாமல் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலையின் இன்னொரு வடிவமாகவும் அமைகிறது.

அந்த வரலாறு மீண்டும் தமிழர்களுக்கு உயர்வு நல்கும் நன்னாளாக மலரவே, www.telibrary.com எனும் மெய்நிகர் நூலகம் அதன் நினைவாகவே உருவாக்கப்பட்டது.

கேள்வி:
தமிழ் இனத்தின் வரலாற்று ஆவணங்களைப் பாதுகாப்பதும், அடுத்த சந்ததியினருக்கு கொண்டு சேர்ப்பதும் அவசியமானது. இந்த முயற்சியில் உங்கள் பங்களிப்பு எத்தகையது?

பதில்:
யாழ். நூலக அழிப்பின் 40ஆவது வருட நிறைவைச் சுமந்தபடி, தமிழீழ மெய்நிகர் நூலகத்தை -www.Telibrary.com, இந்த ஆண்டு (31/05/2021) புலம்பெயர் தேசங்களில் வாழும் இளையோர்கள் ஒன்றிணைந்து, இணையவழியாக எம் வரலாற்றினை எதிர் வரும் தலைமுறையினர் சரியான முறையில் அறிந்து கொள்ளக்கூடியவாறு அமைத்திருக்கிறோம் .

அந் நூலகத்தில் எமது வரலாற்று ஆவணங்கள் மற்றும் எமது பண்டைக்காலம் தொட்டு இன்று வரையான தமிழரின் தொல்லியல் ஆவணங்கள் உட்பட எமது தமிழீழப் போராட்டத்தின் அனைத்துத் தரவுகளும் ஆவணப்படுத்த வேண்டும் என்ற ஓர் உயர்ந்த சிந்தனையில் உருவாக்கி இருக்கிறோம்.

கேள்வி:
உங்கள் இந்த முயற்சிக்கு மக்களின் பங்களிப்பு எவ்வாறு உள்ளது?

பதில்:
எங்களுடைய ஆவணப்படுத்தல் என்ற பாரிய முயற்சியில் மக்களின் பங்களிப்பு மிகவும் உன்னதமானது.  ஆரம்ப காலத்தை விட எமது நூலகம் வெளியானதன் பின் அவர்களின் ஆதரவு மிகவும் அதிகமாக உள்ளது. பல துறைசார்ந்த அறிஞர்கள், பேராசிரியர்கள், கல்வியாளர்கள் எனப் பலர் எம்முடன் இணைந்து செயற்படுகிறார்கள்.

கேள்வி:
உங்களின் இந்தப் பணிக்குத் தாயக மற்றும் புலம்பெயர் உறவுகளிடம் இருந்து எத்தகைய உதவிகளை எதிர்பார்க்கிறீர்கள்?

பதில்:
ஆவணப்படுப்படுத்தல் என்ற இப்பணியானது, எம் குழந்தைகளுக்கானது. ஏன்னென்றால், நாம் எம் வரலாற்றை கண்ணூடாக கண்டு வந்தவர்கள், ஆனால் அடுத்த தலைமுறையினர் பெரும்பாலானோர் அவர்களுக்குள் எம் இன உணர்வோ, மொழியுணர்வோ ஊட்டப்பட வேண்டும் என்பது ஒவ்வொரு தமிழனுக்கும் இருக்கவேண்டிய கடமைகளில் ஒன்று. அந்த வகையில் தாயகத்திலும் சரி, புலம்பெயர் நாடுகளிலும் வாழும் தமிழர்களாக இருந்தாலும் சரி எங்களுடைய ஆவணப்படுத்தலுக்கு பக்கபலமாக இருப்பதுடன், இவற்றை தங்களுடைய பிள்ளைகளுக்குக் காட்டி அதனைப் படிக்கும் ஆவலை ஏற்படுத்த வேண்டும். அவர்களால் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் பதிவேற்றம் செய்கிறோம். அத்துடன் உலகத்தமிழர்கள் அனைவரும் தங்களிடம் இருக்கும் எமது வரலாறு சார்ந்த ஆவணங்களை எமக்கு அனுப்பி வைத்து உதவுமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.

கேள்வி:
இந்த ஆவணங்களை அடுத்த தலைமுறையிடம் கொண்டு சேர்ப்பதற்காக என்ன பொறிமுறைகளைப் பயன்படுத்தப் போகிறீர்கள்?

பதில்:
இன்றைய நவீன உலகத்தில் சமூக வலைத்தளங்கள் பெரும் பங்களிப்புச் செய்கின்றன, அந்தவகையில் அனைத்து சமூகவலைத்தளங்களிலும் ஊடகங்கள், நண்பர்கள் மற்றும் சமூகம் சார்ந்த பொதுக்குழுக்கள் ஊடாகவும் இதனை மக்கள் மத்தியில் கொண்டு செல்கிறோம் .

இன்னும் இவை மக்களிடம் கொண்டுசெல்ல வேண்டிய கடமைப்பாட்டிலும் இருக்கிறோம்.  அதனால் இது பற்றித் தகவல் தெரிந்தவர்கள் எங்களுடைய நூலகமான மெய்நிகர் நூலகத்தை ஒர் தமிழரின் வரலாற்று ஆவணமாகப் பாதுகாத்து, உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள்.

ilakku Weekly Epaper 151 october 10 2021 Ad வரலாற்றை இளையவர்கள் சரியாக அறிந்து கொள்ள வழிகாட்டியாக அமைந்துள்ள நூலகம்