செம்மலை பிள்ளையார் ஆலைய பொங்கல் விழா இன்று; ஏற்பாடுகளைக் குழப்பிய அதிரடிப்படை

செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தின் பொங்கல் விழா இன்று வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நேற்று இடம்பெற்ற போது, அவற்றைக் குழப்பும் விதமாக விசேட அதிரடிப் படையினரும் பொலிஸாரும் நடந்து கொண்டனர் எனத் தெரிவிக்கப்பட்டது.

சர்ச்சைக்குரிய முல்லைத்தீவு செம்மலை – நீராவியடி பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்தப் பொங்கல் விழா இன்று இடம்பெறவுள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகளில் ஆலய நிர்வாகமும் ஊர் மக்களும் நேற்று ஈடுபட்டனர்.

அச்சமயம், ஆயுதங்களுடன் அங்கு வந்த விசேட அதிரடிப் படையினரும் பொலிஸாரும் அங்கு பணிகளை குழப்பியதுடன் பந்தல் அமைப்பதையும் தடுத்து நிறுத்தினர். எனினும், அங்கிருந்தவர்கள் அவர்களுக்கு விடயத்தை தெளிவுபடுத்தியபோதும் பந்தல் அமைப்பதற்கு பொலிஸார் அனுமதிக்கவில்லை.

இவ்வாறு பந்தல் அமைப்பதை நிறுத்துமாறு எழுத்து மூலம் தருமாறு ஆலய நிர்வாமும் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினரும் கோரினர். அதற்கு மறுத்த பொலிஸார் சிறிது நேரம் கழித்து பந்தலை அமைக்க அனுமதித்து வெளியேறினர்.

அருகில் ஆக்கிரமிப்பாக அமைக்கப்பட்ட குருகந்த ரஜமகா விகாரை பிக்குவின் தூண்டுதலின் பேரிலேயே பொலிஸார் இவ்விதம் நடந்து கொண்டனர் என்றும் அங்கிருந்தவர்கள் குற்றஞ்சாட்டியமை குறிப்பிடத்தக்கது.