தமிழினப் படுகொலைக் கையேடு: 22 வயது நிரம்பிய இளைய தட்சாயினியின் சாதனை

படுகொலைக் கையேடு0 தமிழினப் படுகொலைக் கையேடு: 22 வயது நிரம்பிய இளைய தட்சாயினியின் சாதனை

Voice தமிழினப் படுகொலைக் கையேடு: 22 வயது நிரம்பிய இளைய தட்சாயினியின் சாதனைதமிழினப் படுகொலைக் கையேடு: ஈழத்தமிழ்ப் பெற்றோரின் பிள்ளைகளில் ஒருவளாக ஜேர்மனியில் பிறந்து, வளர்ந்த தட்சாயினிக்குத் தற்போது 22 வயது. ‘தமிழினப் படுகொலைக் கையேடு’ என்ற மிகவும் பெறுமதி வாய்ந்த ஒரு ஆவணத்தை ‘Voice உலகத் தமிழர் உரிமைக்குரல்’ என்ற அமைப்பின் உதவியோடு ஜேர்மனியில் கடந்த மாதம் 23ம் திகதி தட்சாயினி வெளியிட்டிருக்கிறார்.

தமிழிலே சரளமாகப் பேசுகின்ற, எழுதுகின்ற ஆற்றலைக்கொண்டுள்ள தட்சாயினி தான் யோசிப்பது கூட தமிழ்மொழியிலே தான் என ஆணித்தரமாகக் கூறுகிறார். இலக்கு மின்னிதழின் மாவீரர் வாரச் சிறப்பிதழுக்கு தட்சாயினி பிரத்தியேகமாக அளித்த செவ்வியை எமது வாசகர்களுக்காக இங்கே தருகிறோம்.

கேள்வி:
உங்களைப் பற்றிக் கொஞ்சம் சொல்லமுடியுமா?

பதில்:
அம்மா அப்பா தான் இதற்குக் காரணம். சின்னனிலயிருந்து வீட்டில தமிழ் தான் கதைக்க வேணும். என்னோட தமிழில கதைப்பினம். நாட்டில நடந்த பிரச்சினைகள் சொல்லுவினம். அதே மாதிரி எனக்கு வாசிக்கிறது நிறையப் பிடிக்கும். அதே மாதிரித் தமிழில வாசிக்கிறது தான் விருப்பம். ஜேர்மன் மொழியில வாசிக்கிறதை விட தமிழில வாசிக்கிறது தான் விருப்பம். அப்பிடி வாசிச்சு வாசிச்சு, அதையும் தாண்டித் தமிழ்ப் பள்ளிக்கூடத்தில 12ம் வகுப்பு மட்டும் முடிச்சு ஒரு ஆசிரியராயும் பணியாற்றுறன்.

ஆ…வாழ்த்துக்கள்

தமிழாலயத்தில ஆசிரியராயும் பணியாற்றுறன். கொரோனா காலத்தில கொஞ்சமெல்லாம் இல்லைத் தானே. ஒண்டரை வருசமாய் இரண்டு வருசமாய். அதுவும் செய்துவந்தனான்.

நல்லது. முதலில சந்தோசமாய் இருக்குது. இந்த interview ஐ முழுமையாக தமிழில செய்யக்கூடியமாதிரி இருக்கு, தமிழில கதைக்கக்கூடிய மாதிரி இருக்கு. தமிழில எழுதக்கூடிய மாதிரி இருக்கு. அது உங்கட வேலையைப் போல முக்கியமானதாகத் தான் நாங்கள் பார்க்கிறோம். மொழியில உள்ள அந்த ஈடுபாடும் அந்தப் பரிச்சயமும். இந்த interview ஐ இலக்கு மின்னிதழுக்கு எடுக்கிற படியால இந்த ஆர்வம் அதாவது படுகொலையை ஆவணப்படுத்த வேண்டும் என்ற ஆர்வம் எப்படி உங்களுக்கு வந்தது?

எப்படி வந்ததெண்டால் நான் படிக்கிறது வந்து Business Law. அதே மாதிரி சின்ன வயசில பள்ளிக்கூடத்தில கூட Politics தான் மெயின் பாடமாக எடுத்துக் கொண்டு வந்தனான். 13ம் வகுப்பு மட்டும். கூட வந்து எங்கட நாட்டில நடந்த பிரச்சினையைப் பற்றி நிறை ஆராய்ச்சிகள் எல்லாம் செய்தனான். பள்ளிக்கூடங்களில ஒரு புறொஜெக்ட் செய்யேக்கையோ அல்லாட்டி ஒரு Thesis  எழுதேக்கயோ வந்து இப்ப ஜேர்மன்ல வந்து ரீச்சர் ஆக்கள் கேப்பினம் எங்களுக்கு ஜேர்மன் மொழியில இருக்கிற ஒரு புத்தகத்தை நீங்கள் தந்தால் தான் நாங்கள் அதை ஒரு source ஆக எடுக்கலாம். அப்பிடித் தேடிக் கொண்டு போகேக்க உண்மையாகவே ஜேர்மன் மொழியில எங்கட பிரச்சினையை, அதுவும் எங்கட பிரச்சினையைப் பற்றிச் சரியாக எழுதியிருக்கிற ஒரு நூல் வந்து இல்லை.

அப்ப எனக்கு ஒரு சின்ன எண்ணம் இருந்தது. சரி மெல்லமெல்லமாய்த் தேடி எஙகளால முடியுமெண்டால் ஜேர்மன் மொழியில எப்படியாச்சும் கொண்டுவரவேணும் எண்ட எண்ணம் இருந்தது. அப்பிடியும் இருக்க நான் நிறைய genocide  பற்றி ஆராய்ச்சிகள் செய்து கொண்டு வரேக்க, இப்ப ஈழத்தமிழர்களுக்கு நடந்தது என்பதைத் தாண்டி, வேற இனங்களுக்கு  நடந்த இனப்படுகொலை பற்றியும் நான் தேடி வாசிச்சிருக்கிறன் நிறைய.

கேள்வி:
வேற யாருடைய இனப்படுகொலையை நீங்கள் படிச்சிருக்கிறீங்க?

பதில்:
உதாரணத்துக்கு யூதருக்கு நடந்தது. அது நாங்கள் ஜேர்மன் பள்ளிக்கூடத்திலேயே படிக்கிறோம். ஆர்மீனிய இனத்தவருக்கு நடந்தது எல்லாத்தையும் பற்றி, நாங்கள் ஆராய்ச்சி செய்துகொண்டு போகேக்க அந்த இனப்படுகொலையையும் எங்கட இனப்படுகொலையையும் ஒப்பிட்டுப் பாக்கேக்க, எங்கட இனப்படுகொலையைப் பற்றிச் சொல்ற நூல்களோ அல்லது திரைப்படங்களோ அல்லது குறும்படங்களோ எல்லாமே சரியான குறைவு. Internet இல தேடினாக்கூட எடுக்கிறது வந்து குறைவு. அப்பிடியும் தேடிக்கொண்டு போனனான். அப்பிடித் தேடிக்கொண்டு போகேக்க இதை நானே மெல்லமெல்லமாய் ஒரு புத்தகமாக்கலாம் என்ற ஒரு நோக்கம் வந்தது. அதையும் தாண்டி நான் ‘ஊறுகாய்’ என்ற ஒரு இணையத்தளத்துக்கு கட்டுரைகள் எழுதுறனான்.

தமிழிலயும் Deutsche இல (ஜேர்மானிய மொழி), அப்ப அதை எழுதிக்கொண்டு போகேக்க தான் எனக்கென்ன தோன்றினதெண்டா, எனக்கு இதில ஆர்வம் இருக்கிறதால நான் ஒரு கட்டுரையை எழுதுறன். இல்லாட்டி அந்தக் கட்டுரையை எடுத்து வாசிப்பன். ஆனால் இப்ப இளம் ஆக்களும் சரி பெரியாக்களுக்கும் சரி அவைக்கு அந்த கட்டுரையைப் போய் வாசிக்கிறதுக்கான நேரம் சரியான குறைவாக இருக்கும் எண்டு நான் ஆக்களைப் பாக்கேக்க தெரிஞ்சுகொண்டனான். அதனால தான் இதனை ஒரு social media வுக்குக் கொண்டுவரவேண்டும் எண்டு 30sec2remember எண்ட ஒரு தளத்தை உருவாக்கினனான். ஒவ்வொரு நாளும் 30 வினாடிகளே காணும் எங்கட இனப்படுகொலையை நாங்கள் ஒருக்கால் நினைவுகூருகிறதுக்கு, இண்டைக்கு என்ன நடந்தது எண்டதைப் பாக்கிறதுக்கு.

கேள்வி:
அதை எப்ப நீங்கள் தொடங்கின்னீங்க?

பதில்:
அது வந்து introduce பண்ணினது மே மாதம் 2020. போன வருசம்.  அப்பிடி 30 செக்கண்டை full ஆய் ஒரு வருசம் செய்துகொண்டு வந்திட்டு, அதுக்காகத் தேடிக்கொண்டு போகேக்க எனக்கு நிறைய நிறைய details வந்தாப்பிறகு அதை அப்பிடியே வடிவாய்த் தொகுத்து ஒரு புத்தகமாய் இப்ப வெளிவிட்டிருக்கிறம்.

எங்கட இனத்துக்கான நீதிக்கான ஒரு தேடலில, நாங்கள் 2009க்குப் பிறகு பல கோணங்களில முயற்சி எடுத்துக்கொண்டிருக்கிறம். அப்ப அந்த தேடலுக்கு உங்களுடைய இந்த முயற்சி, இந்த ஆவணம் ஒரு முக்கியமான பங்கு வகிக்கும் என்று எங்களுக்கு நம்பிக்கை இருக்குது. இதை நீங்க செய்து முடிச்சு புத்தகத்தை நீங்கள் வெளியிடுகிற அண்டைக்கு உங்கட உணர்வு எப்படி இருந்தது?

உண்மையாய், நீங்கள் சில நேரம் பாத்திருப்பீங்க எண்டு நினைக்கிறன், வீடியோக்கள். பெரிய ஒரு நிகழ்வாத்தான் நடந்தது. இங்க ஜேர்மனில, நிறைய ஆக்கள் வந்தவை. எல்லாமே நான் organize பண்ணினதால எல்லாமே நான் hall இல இருந்து decoration இல இருந்து மேடை அமைப்பில இருந்து எல்லாமே நானே organize பண்ணினதால அந்த அண்டு நான் என்ன செய்தனான். எப்பிடி நாங்கள் செய்து முடிச்சனாங்கள் எண்டதைக்கூட இப்ப இருந்து யோசிக்கேக்க என்னால நம்பமுடியேல்ல. எப்பிடியெல்லாம் செய்து முடிச்சனாங்கள் எண்டு. நிறைய வாழ்த்துகள் வந்தது. நான் எதிர்பார்க்கவேயில்லை. நிறைய வாழ்த்துகள் வந்தது. உண்மையாவே எப்பிடி செய்து முடிச்சனாங்கள் எண்டு தெரியேல்லை.

கேள்வி:
அந்த மனநிறைவு முக்கியமானது, நீங்கள் அடுத்த கட்டங்களுக்குப் போறதுக்கு அதுவும் நீங்க 22 வயதில இதைச் செய்திருக்கிறீங்க. அந்த உணர்வு தேவையான ஒண்டு. அடுத்ததை நோக்கி நகர்றதுக்கு நாங்கள் செய்யிறவற்றை இருந்து மீட்டிப்பாக்கிறதும். அந்த வகையில அந்த நாள் உங்களுக்கு நிச்சயமாக மறக்க முடியாத ஒரு நாளாக இருக்கும். இந்த Genocide Chronicle அல்லது ‘தமிழினப் படுகொலைக் கையேடு’ என்ற இதை வெளியிட்டிருக்கிறீங்க. உலகத்தமிழர் இதை எப்பிடியெல்லாம் பயன்படுத்தலாம் எண்டு உலகத்தமிழருக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புறீங்க?

பதில்:
உலத்தமிழர் இந்தப் புத்தகம் எண்றதுக்கு முதல் வந்து என்ன செய்யவேணும் எண்டால் இப்ப புலம்பெயர் மண்ணில பிறந்து வளர்ற பிள்ளையளுக்கு வந்து, எங்கட நாட்டில நடந்த பிரச்சினை என்ன? நாங்க என்ன காரணத்துக்காக புலம் பெயர்ந்து இங்க வந்திருக்கிறம்? எண்ட காரணத்தை அந்தப் பிள்ளையளுக்கு தெளிவாய்ச் சொல்லவேணும். இப்ப எங்கட இனத்துக்கு நடந்தது ஒரு இனப்படுகொலை.  இப்பிடி இப்பிடியெல்லாம் நடந்தது எண்டதை எங்கட பிள்ளையளுக்கு எடுத்துச் சொல்ல வேணும் அப்பிடி எடுத்துச் சொல்லிக்கொண்டு போகேக்க வந்து, நான் இப்ப உருவாக்கின Genocide Chronicle எண்ட நூல் அவையளுக்கு வந்து ஒரு பெரிய உதவியாயிருக்கும்.

ஏனெண்டால் நான் நினைச்சிருந்தால் கூட இதை ஒரு கதைப்புத்தகம் மாதிரி, கட்டுரை கட்டுரையாய் எழுதியிருக்கலாம்.  ஆனால் என்ர நோக்கம் என்னவாய் இருந்ததெண்டா, ஒரு படத்தைப் பாக்கேக்க அல்லது என்ர புத்தகத்தில ஒரு page ஐ எடுத்துப் பாக்கேக்க கெதியில அவைய டக்கெண்டு ஒருக்கா இந்த date இல இந்த ஆண்டு, இன்ன இன்ன நடந்தது எண்டு short ஆய் ஒரு குறுகிய நேரத்தில வாசிச்சு அறியக்கூடியதாக இருக்கவேண்டும் எண்டது தான் என்ர பெரிய நோக்கம்.

பெற்றோராய் இருந்தால் புத்தகத்தை எடுத்து பிள்ளையளுக்குச் சொல்லலாம். முதலாம் திகதி முதலாம் மாசம் இந்த இடத்தில இப்படி ஒரு படுகொலை நடந்தது. சில பெயர் விபரங்கள் இருக்கும். இல்லாட்டில் படங்கள் இருக்கும். சில படுகொலையளுக்கு அப்பிடி அதை வந்து பிள்ளையளுக்கு எடுத்துக்கொண்டு போகேக்க தான் பிள்ளையளுக்கும் கூட பள்ளிக்கூடத்திலயும் சரி பிறகு அவையள் படிச்சு வளந்து ஒரு சட்டத்துறையில சில நேரம் படிச்சு வந்து எங்களுக்கு நடந்த இனப்படுகொலைக்கு அப்பதான் எங்களுக்கு ஒரு நீதிக்காக நாங்கள் போராட முடியும். எங்களுக்கு அந்த வரலாறு தெரியாம, எங்களுக்கு என்ன நடந்தது எண்டு தெரியாம, எங்கட நீதிக்கான போராட்டத்தை நாங்கள் முன்னகர்த்தேலாது எண்டது என்ர ஒரு கருத்து.

அதனால உலகத்தில இருக்கிற எல்லாரும் ஏலுமெண்டால் இந்தப் புத்தகத்தை வாங்கி, அவையளின்ர பிள்ளையளுக்கும் சரி அவையளும் வாசிச்சு அறிஞ்சுகொண்டிருந்தா அது ஒரு நல்ல விடயமாய் இருக்கும்.

அதையும் இப்ப தாண்டி தமிழர்களுக்கு மட்டும் எண்டு இல்லாம வேற்று மொழி பேசுறவர்களுக்குக் கூட இந்தப் புத்தகம் பெரிய ஒரு உதவியாக இருக்கும். ஜேர்மன்ல எல்லாரும் கேப்பினம் ஏன் நீங்கள் உங்கட நாட்டைவிட்டுட்டு ஜேர்மன்ல வந்து இருக்கிறீங்க எண்டு கேப்பினம். சில பேர் வந்து விடுமுறைக்கு, ஜேர்மன்காரர் கூட, விடுமுறைக்கு சிறீலங்கா போயிற்று வந்து சொல்லுவினம், உங்கட நாடு எவ்வளவு வடிவான ஒரு நாடு paradise மாதிரி இருக்கு. ஏன் அங்கு இருக்காம இங்க வந்த இருக்கிறீங்க எண்ட ஒரு கேள்வி கூடக் கேப்பினம். அப்ப அவயளுக்குக்கூட இது வந்து ஒரு dictionary அவையள் பாக்கக்கூடிய மாதிரி இந்த இனத்துக்கு இவ்வளவு நடந்திருக்கு இவ்வளவு அவலங்கள் நடந்திருக்குது.

இப்ப நீங்க மொழிகள் எண்டு சொல்ற படியால நீங்க முதற்கட்டமாக நாலு மொழியில ஜேர்மன், பிரெஞ், ஆங்கிலம், தமிழ் எண்டு நாலு மொழியில வெளியிட்டிருக்கிறீங்க. வேற மொழியில உதாரணமா இன்னும் இரண்டு மொழியை நான் யோசிக்கிறன் உதாரணமாய் சீன மொழி. ஏனெண்டால் இண்டைக்கு உலகத்தை ஆட்டிப்படைக்கிற ஒரு நாடு எண்டால் சீன மொழி, ஸ்பானிய மொழி, இப்பிடியான மொழிகளிலும் வந்து… உங்களுக்கு எனி அது இலகுவாக இருக்கும். ஏனெண்டால் ஏற்கனவே அது ஒரு ஆவணமாக இருக்குது. என்னைப் பொறுத்தவரை கட்டாயம் சீனமொழியில இது, ஏனெண்டால் உலகத்திலே அதிகமானோர் பேசுற எண்டு பாக்கேக்க, ஆங்கிலத்துக்கு அடுத்ததாக சீன மொழி எண்ணிக்கை எண்டு பாக்கேக்க. அப்ப சீன மொழி, ஸ்பானிய மொழி இவை இரண்டையும் இப்ப யோசிக்கக் கூடியதாக இருக்கிறது. இப்படியான வெவ்வேற மொழிகளிலயும் இதை வெளியிறதுக்கு வாய்ப்பு இருக்குதா?

வாய்ப்புகள் இருக்குது. உதாரணத்துக்கு எங்கட social media இல பாத்தா பெரிய பெரிய படுகொலைகள் உதாரணத்துக்கு 1983ம் ஆண்டு நடந்த இனப்படுகொலை வந்து நான் நினைக்கிறன் 9 மொழிகளில மொழிபெயர்த்துப் போட்டனாங்கள். அதாவது ஜேர்மன், ஆங்கிலம்,  பிரெஞ், தமிழ் சிங்களத்திலயும் போட்டனாங்கள். ஹிந்தியிலயும் போட்டனாங்கள். Chinese மொழியிலயும் போட்டனாங்கள். என்னோட படிக்கிற ஆக்களும் சரி மற்றது ‘Voice  உலகத்தமிழ் உரிமைக்குரல்’ எண்ட அமைப்புக்குத் தெரிஞ்ச ஆக்களும் எங்களுக்கு ஒருநாள் help பண்ணினவை. எங்களோட சேர்ந்து வேலைசெய்யிறதுக்கு உதாரணத்துக்கு இப் செய்யிறதெண்டால் சீனமொழியோ அல்லது Spanish அந்த மொழியில அவயளுக்கு சரியான ஒரு ஆற்றல் இருக்க வேண்டும். அப்படியான ஆக்களோட தொடர்புகொண்டு அவயளோட சேர்ந்து வேலை செய்யேக்க எங்களால செய்யேலும் எண்டு வந்திச்செண்டா கட்டாயம் Spanish அல்லது சீன மொழியில வாறதுக்கான வாய்ப்புகள் இருக்குது எண்டு நினைக்கிறன்.

கேள்வி:
நீங்க ஒரு சில இடங்களில குறிப்பிட்டிருக்கிறீங்க. இந்த ஆவணத்தை நீங்கள் செய்து முடிச்சிருக்கிறீங்க. சில வேளையில ஒரு சில படுகொலைகள்   தவற விடப்பட்டிருக்கலாம். எப்பிடி இதை இன்னும் முழுமைப்படுத்தலாம் எண்டு நினைக்கிறீங்க?

பதில்:
புத்தகம் நாங்கள் 23ம் திகதி பத்தாம் மாதம் வெளியிட்டனாங்கள். இந்தப் புத்தகம் அச்சுக்குப் போனாப்பிறகு கூட இப்ப நான் சரி புத்தகத்தை முடிச்சிற்றன் எண்டு இருக்கேல்ல. அதுக்குப் பிறகு கூட தேடல் இருந்து கொண்டிருக்குது. இப்பவும் இன்னும் தேடிக்கொண்டிருக்கிறம். இப்ப நாங்கள் படுகொலைகளைத் தேடேக்க சில நேரம் ஒண்டிரண்டு விடுபட்டிருக்கலாம்.

இப்ப நான் எங்கேயிருந்து படுகொலைகளை எடுத்தனானெண்டால் உதாரணத்துக்கு Tamilnet, 1997 இலிருந்து இயங்கிவாற ஒரு இணையத்தளம் இண்டு வரைக்கும். வேற NESOHR வந்து ஒரு புத்தகம் விட்டிருந்தது ‘Massacres of Tamils’ எண்டு அந்தப் புத்தகம். அது வந்து 2008 மட்டும் தான் இருக்குது. 2009 இல முள்ளிவாய்க்காலில நடந்த அவ்வளவு படுகொலைகளும் இல்லை. அதையும் தாண்டி வந்து newspapers, உதாரணத்துக்கு ஈழநாதம், ஈழநாடு, சுதந்திரன், உதயன், முரசொலி எண்டு newspaper களும் எங்களுக்குக் கிடைச்சது. அப்ப அதுகளில தேடேக்க கூட சில நேரம் எதாச்சும் விடுபட்டிருக்கலாம். இப்ப ஒரு நியூஸ்பேப்பர் வந்து எட்டுப் பக்கம் எண்டால் சில நேரம் கடைசிப்பக்கத்தில ஒரு குட்டியாய்க் கொண்டுபோய்ப் போட்டிருப்பினம் ஒரு படுகொலையை. அப்ப சில நேரம் வாசிச்சு கொண்டு போகேக்க விடுபட்டிருக்கலாம். அதையும் தாண்டி நிறைய நியூஸ்பேப்பர்கள் வந்து எங்கட கையுக்குக் கிடைக்கேல்ல.

என்னட்ட ஜேர்மன் மொழியில கூட ஒரு கட்டுரை எழுதச் சொன்னா, இல்லாட்டி ஒரு வீட்டுவேலையோ எதாச்சும் நான் செய்யேக்க நான் யோசிக்கிற மொழி வந்து தமிழாய்த்தான் இருக்கும். நான் யோசிக்கேக்க தமிழில தான் யோசிப்பன். யோசிச்சுப் போட்டுத்தான் ஜேர்மன் மொழியில எழுதுவன்.

இப்ப உதாரணத்துக்கு சொல்லலாம் எண்டால் ஒரு பெரிய date  வந்து 1981ம் ஆண்டு யாழ்நூலகம் எரிக்கப்பட்டது ஜூன் முதலாம் திகதி. அப்ப ஜூன் முதலாம் திகதியிலிருந்து  ஜூன் 8ம் திகதி மட்டும் நான் சொன்ன இந்த ஐஞ்சு நியூஸ்பேப்பரும் இல்லை. இந்த ஐஞ்சு நியூஸ்பேப்பர்கள் வேணுமெண்டு காணாமல் ஆக்கப்பட்டிருக்குதோ, சில நேரம் அந்த நாட்களில ஏதாச்சும் பெரிய படுகொலை நடந்ததனால வேணுமெண்டு காணாமல் ஆக்கப்பட்டிருக்குதோ அல்லாட்டி அது உண்மையாக இல்லாமல் போயிற்றுதோ எண்டு தெரியேல்ல.

அதே மாதிரி சில படுகொலைகள் அல்லாட்டி ஒரு ஆள் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தால் அல்லது காணாமல் ஆக்கப்பட்டிருந்தால் சில பேர் வந்து அதைப் பதிவு செய்யாமலும் இருந்திருக்கலாம். பயத்தில போய் அதைப் பதிவு செய்யப் பயத்தில. அப்பிடி நிறையப் படுகொலைகள் விடுபட்டிருக்கும் எண்டு நாங்கள் நினைக்கிறம். அதே மாதிரித் தேடிக்கொண்டிருக்கிறோம். இந்தப் புத்தகத்தைப் பாத்திற்று சில நேரம் எங்கட உறவினர் ஒராள் காணாமல் ஆக்கப்பட்டது இல்லாட்டி எங்கட ஊரில நடந்த ஒரு படுகொலை இல்லை எண்டு பொதுமக்கள் எங்களுக்கு அந்தப் படுகொலைகளைத் தந்தால் கூட நாங்கள் அடுத்தடுத்த வெளியீடுகளில வந்து இணைச்சுக் கொள்வோம்.

கேள்வி:
அது நல்ல ஒரு அணுகுமுறை. நீங்கள் ஜேர்மனியில பிறந்து வளர்ந்தவர் எண்ட வகையில இரண்டாம் உலக மகாயுத்தக் காலத்தில ஜேர்மனியில இருந்த ஆட்சியாளர்களால உலகத்தில ஒரு பெரிய கொடுமை ஒண்டு புரியப்பட்டது. அந்த அறிவும் எங்கட தமிழ் மக்களுக்கான அந்தப் படுகொலையும் வந்து அதை நீங்கள் ஒப்பிட்டுப் பாக்கேக்க என்ன விஷயங்கள் உங்களுக்கு அதில நீங்கள் இரண்டிலயும் பாக்கக்கூடியதாக இருக்குது. அல்லது ஒற்றுமைகள் அல்லது வேற்றுமைகள்.  ஏனெண்டால் நீங்கள் அந்த நாட்டில பிறந்து வளந்த படியால நிச்சயமாக உங்களுக்கு அது பற்றிய அறிவு இருக்கும். அதை எப்பிடிப் பாக்கிறீங்கள்?

பதில்:
என்னைப் பொறுத்த மட்டில ஜேர்மன்ல வந்து, அதாவது இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில நடந்த இனப்படுகொலையையும் எங்கட ஈழத்தமிழருக்கு நடந்த இனப்படுகொலையையும் ஒப்பிட ஏலாது எண்டு நான் நினைக்கிறன். ஏனெண்டால் ஜேர்மன்ல ஹிட்லர் இனப்படுகொலை செய்தது யூதர்களை. அப்ப யூதர்கள் ஜேர்மன்ல அது அவர்களுடைய பூர்வீக நாடு இல்லை. வேற நாட்டில யூதர்களை ஜேர்மன் இனப்படுகொலை செய்தது. ஆனால் எங்கட நாட்டில பாத்தால் நாங்கள் தான் பூர்வீகக் குடிகள். தமிழர்கள் தான் பூர்வீகக் குடிகள். எங்கட நாட்டில எங்களையே இனப்படுகொலையை ஒரு சிங்கள அரசாங்கம் செய்யேக்க இந்த ஒரு point இல அந்த இரண்டு இனப்படுகொலையையும் ஒப்பிட ஏலாது எண்டு நினைக்கிறன். அது தான் என்ர கருத்து.

கேள்வி:
அது சரி. அது ஒரு முக்கியமான அவதானிப்பு என்னெண்டால் எங்களுடைய தாயகத்தில நாங்கள் இனப்படுகொலை செய்யப்பட்டோம். அது தான் உண்மை. அப்ப யூத மக்களுடைய இனப்படுகொலைக்கும் அதுக்கும் ஒரு பெரிய வித்தியாசம் இருக்குது. நீங்கள் அதைச் சரியாகக் குறிப்பிட்டிருக்கிறீங்க. கடைசியாக வந்து இன்றைய புலம்பெயர்ந்து வாழுகின்ற தமிழ் இளையோருக்கு நீங்கள் பொதுப்படையாக என்ன சொல்ல விரும்புறீங்க?

பதில்:
என்ன சொல்ல விரும்புறன் எண்டால் நாங்கள் எல்லாரும் இப்ப வெளிநாட்டில பிறந்து வளந்து வாறம். எங்களுக்கு எல்லா வசதியுமே இருக்குது.  உண்மையைச் சொல்லப்போனால் ஒரு நூலை எடுத்து வாசிக்கவோ அல்லாட்டி internet மூலமோ எங்களுக்கு எல்லா வசதியும் இருக்குது. குறை எண்டு சொல்றதுக்கு எதுவுமே இல்லை. எல்லா இளையோரும் என்ன செய்ய வேண்டும் எண்டால் எங்களுக்கு நடந்த எங்கட இனத்துக்கு நடந்த அவலங்களை நாங்கள் தெரிஞ்சு வைச்சிருக்க வேணும். எங்களோட படிக்கிற பிள்ளைகளுக்கோ சரி அல்லது நாங்கள் வேலை செய்யிற இடத்திலயோ சரி எங்கட பிரச்சினையை எடுத்துக் கொண்டு போகவேணும். கட்டாயம் எங்கட பிரச்சினையை வேற்று நாட்டவருக்கு எடுத்துக் கொண்டு போகவேணும். முக்கியமாக எங்களோட படிக்கிற ஆக்கள் எங்களோட வேலை செய்யிற ஆக்கள் எங்கட ஆசிரியர்மார் எல்லாருக்கும் எங்கட பிரச்சினை தெரிஞ்சால் தான் ஏதாவது ஒரு வழியில எங்களுக்கு ஒரு நீதி கிடைக்கும் எண்டு நான் நினைக்கிறன். நிறையப் பேருக்குத் தெரியாது.

இஞ்ச ஜேர்மன்லயே தமிழரிட்ட கூடுதலாய் ஆக்கள் கேக்கிற கேள்வி அது தான். நீங்கள் ஏன் வந்தனீங்கள் எங்கட நாட்டுக்கு? எங்கட நாட்டில நடந்த பிரச்சினை 2009 எங்கட போர் மௌனிச்சது எண்டால் அது கூட நிறையப் பேருக்குத் தெரியாது. 2009 இல இவ்வளவு பெரிய அவலம் நடந்தது எண்டு கூட மேற்குலக நாடுகளுக்குத் தெரியாது. முள்ளிவாய்க்காலில நடந்தது கூட. அதெல்லாம் நாங்கள் நெடுகலும் remember பண்ணிக்கொண்டே இருக்க வேணும். சொல்லிக்கொண்டே இருக்க வேணும். Social media வில post பண்ணிக்கொண்டே இருக்க வேணும். மறக்கக் கூடாது அது தான் முக்கியம். அதே மாதிரி மொழியும். ஆனால் மொழியை விட இன்னும் முக்கியம் வரலாறு. நாங்கள் எங்கேயிருந்து வந்தனாங்கள் எண்டதை மறக்கக்கூடாது.

கேள்வி:
நீங்கள் ஒரு முக்கியமான விஷயத்தைச் சுட்டிக்காட்டியிருக்கிறீங்க. மொழியும் வரலாறும், அதிலயும் வரலாறு முக்கியமானது எண்டு சொல்லி. இப்ப உங்களுடைய தமிழ்மொழி அறிவும் இந்த விடயத்தில உங்களுக்குப் பெரியளவில கைகொடுத்திருக்கு. இந்த ஆவணத்தை நீங்கள் செய்து முடிக்க உங்கட தமிழ்மொழி அறிவு ஒரு முக்கியமான பங்கு வகிச்சிருக்கு எண்டு நினைக்கிறன். விடயங்களைத் தேடிக் கண்டுபிடிச்சு எடுக்கேக்க. இண்டைக்கு எங்கட தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து பல்வேறு நாடுகளில வாழ்ந்து கொண்டிருக்கினம் அப்ப இளையோர் வந்து கூடுதலாக நாங்கள் தாய்மொழி தமிழ் எண்டு சொன்னாக்கூட கூடுதலான இளையோர் அந்த நாட்டு மொழியைத் தான் தாய்மொழியாக அவை இலகுவாக எந்தப் பிரச்சினையும் இல்லாமல் கதைக்கக்கூடியது அந்த நாட்டு மொழிதான்.

நீங்கள் வந்து விதிவிலக்கு. நீங்கள் ஜேர்மனியில பிறந்தாலும் நீங்க தமிழ்மொழியை தாய்மொழியாகக் கதைக்கிறீங்க. அப்பிடி எல்லா இளையோரும் உண்மையில இல்லை. இந்த மொழி அறிவும் உங்களுக்கு இந்த விஷயத்தில வந்து துணைநிண்டிருக்குது. அந்த வகையில வந்து எங்களுடைய புலம்பெயர்ந்து வாழ்கின்ற சிறுவர்களுக்கும் இளையோருக்கும் இந்த மொழியறிவு தொடர்பாக அல்லது அதைக் கற்பிக்கிற ஆசிரியர்களுக்கும் நீங்கள் ஒரு ஆசிரியரும் கூட என்ன சொல்ல விரும்புறீங்க?

பதில்:
நீங்கள் சொன்ன point அது ஒரு முக்கியமான point. இஞ்ச இருக்கிற இளையோர் கூட அவை எந்த நாட்டில இருக்கினமோ அந்த நாட்டு மொழியைத் தான் அவை தங்கள் தாய்மொழியாக எண்ணுகினம். எண்ணி, அதில தான் அவை கூட இப்ப அவையின்ரை friends ஓடயோ சரி உரையாடுகிறது வந்து கூட நான் நினைக்கிறன் அது ஆசிரியர் இப்ப தமிழ் பாடசாலை எண்டால் தமிழ்ப் பாடசாலையில மட்டும் நாங்க சொல்லாம அம்மா அப்பாவுக்கும் சொல்லவேணும். அந்தப் பிள்ளைகளுக்கு வந்து வீட்டில தமிழ் கதைக்கச் சொல்லி. என்னட்ட ஜேர்மன் மொழியில கூட ஒரு கட்டுரை எழுதச் சொன்னா, இல்லாட்டி ஒரு வீட்டுவேலையோ எதாச்சும் நான் செய்யேக்க நான் யோசிக்கிற மொழி வந்து தமிழாய்த்தான் இருக்கும்.

நான் யோசிக்கேக்க தமிழில தான் யோசிப்பன். யோசிச்சுப் போட்டுத்தான் ஜேர்மன் மொழியில எழுதுவன். இப்ப என்னோட இருக்கிற பிள்ளைகளை நான் பார்க்கேக்க கூட உதாரணத்துக்கு என்ர சகோதரர்களோ அல்லாட்டி எனக்குத் தெரிஞ்ச நண்பர்களைப் பாக்கேக்க, அவை வந்து என்ன செய்யினம் எண்டால் அவை தமிழில எழுதேக்க கூட Deutsche இல யோசிச்சிட்டுத் தான் தமிழில எழுதுவினம். அல்லது டொய்ச்சில யோசிச்சிட்டு டொய்ச்சில எழுதுவினம்.  ஆனால் எனக்கு அப்பிடி இல்லை. எனக்கு டொய்ச்சில யோசிக்கிறதுக்கு வராது. நான் என்ன செய்தாலும் தமிழில தான் யோசிப்பேன். நான் நினைக்கிறன் அது தான் காரணம் எனக்கு

எனக்கு இதில இவ்வளவு ஈடுபாடு இருக்கிறதுக்கு. அதனால இப்ப நாங்கள் தமிழ் பாடசாலையில கூடச் சொல்லேலாது பிள்ளையளைத் தமிழ் கதையுங்கோ கதையுங்கோ என்று சொன்னாலும் அது ஏதோ ஒரு விதத்தில வீட்டில இருந்து தான் வரவேணும். சின்ன வயசில இருந்தே பெற்றோர் தமிழுக்கான முக்கியத்துவத்தைக் குடுத்துக்கொண்டு வரவேணும் வீட்டில. அது தான் நினைக்கிறன் வீட்டில. பிறகு கட்டாயம் தமிழ் பாடசாலையிலயும் பிள்ளைகள் இஞ்ச ஜேர்மன்ல தமிழ் தான் கதைப்பினம். தமிழ் பாடசாலையிலும் ஆசிரியர்கள் வந்து அதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கேள்வி:
பாடசாலை நேரத்திலயாவது தமிழ் கதைக்கிறதை ஊக்குவிக்க வேண்டும்.

பதில்:
ஓம் கதைக்கிறது. வேற எங்களுக்கு நடந்த பிரச்சினைகள் பற்றி எடுத்துச் சொல்ல வேணும். வேற தமிழில வந்து கொஞ்சமாய்ச்சும் அந்த எங்கட நாட்டில நடந்த பிரச்சினை, ஒரு அரசியல் ரீதியாகவும் அந்தப் பிள்ளைகளுக்கு அது தெரிஞ்சிருக்க வேணும். Politics. தமிழில கூட இப்ப நாங்கள் ஜேர்மன் school இல படிக்கிறோம் தானே Politics எண்டொரு பாடம். அப்பிடிக்கூட கொண்டு வந்தா அது இன்னும் சிறப்பாக இருக்கும் எண்டு நினைக்கிறன்.

நன்றி.

 

ilakku Weekly Epaper 157 November 21 2021 Ad 1 தமிழினப் படுகொலைக் கையேடு: 22 வயது நிரம்பிய இளைய தட்சாயினியின் சாதனை