தமிழர் பகுதிகளில் உள்ள தொல்பொருட்களை தமிழர்கள் பாதுகாப்பார்கள்

தொல்பொருட்களை தமிழர்கள் பாதுகாப்பார்கள்

தமிழர் பகுதிகளில் உள்ள தொல்பொருட்களை தமிழர்கள் பாதுகாப்பார்கள். முடியுமானால் தென் பகுதியில் உள்ள தொல்பொருட்களை பாதுகாக்க இராணுவத்தினரையும் காவல் துறையினரையும் கொண்டு காவலரண் அமைத்து பாதுகாருங்கள் என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்  இரா.துரைரெட்னம் தெரிவித்தார்.

இன்று மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்  கருத்து தெரிவித்த அவர்,

“ஒரு நாடு ஒரே சட்டம் என்னும் செயலணியை உருவாக்கி அதற்குத் தலைவராக பௌத்த வெறித்தனமுள்ள ஒரு மதகுருவை நியமித்தது என்பது இலங்கையில் பல மொழி, பல கலாச்சாரம், பல இனங்கள் வாழவில்லை என்ற தோற்றப்பாட்டை நிலைநாட்டக் கூடியதாக இருக்கின்றது.

இது தமிழ் மக்கள் தொடர்பில் பாரிய ஒரு அபகீர்த்தியை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்த செயலணி முழு நாட்டிற்கும் சேவை செய்யக் கூடிய செயலணி என்ற தோற்றப்பாட்டுடன் அமைக்கப்பட்டு பௌத்த வெறித்தனம் கொண்டவரை தலைவராக நியமித்தது மட்டுமல்லாமல் எந்தவொரு தமிழரையும் அதில் நியமிக்காததென்பது இலங்கையில் தமிழர்கள் வாழவில்லையா என்ற சந்தேகத்தை எழுப்புகின்றது. இந்த அரசு மீண்டும் தமிழர்களுக்கெதிரான துரோகத்தினைச் செய்திருக்கின்றது. எனவே இந்தச் செயற்பாட்டை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

மட்டக்களப்பு மாவட்டம் விவசாயத்துறையின் மூலம் இலங்கையின் பொருளாதாரத்திற்குக் கணிசமானதொரு பங்களிப்பைச் செய்வதோடு உணவுப் பற்றாக்குறை இல்லாத ஒரு நிலைமையை உருவாக்கி வந்த பெருமையோடும் இருக்கின்றது.

இந்நிலையில், இயற்கை உரம் சட்டத்தை திடீரென   கொண்டு வந்து குறிப்பாக மட்டக்களப்பு மக்களுக்கென்றே அத்திட்டம் அமுலாக்கப்பட்டுள்ளது போன்றே இருக்கின்றது. ஏனெனில் சிங்களவர்கள் பகுதிகளில் நூறு எக்கர் கணக்கான காணிகள் அவர்களுக்க இல்லை. அங்கிருப்பவர்கள் பத்து பதினைந்து ஏக்கருக்கு உட்பட்ட காணிகளிலேயே விவசாயம் செய்கின்றார்கள். அவர்களுக்கு இயற்கை உரத்தைப் பயன்படுத்தவதற்கு இலகுவான சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. ஆனால் மட்டக்களப்பைப் பொருத்தவரையில் கணிசமான காணி இருப்பதால் அவர்கள் வியாபர நோக்கத்துடனேயே விவசாயம் செய்யப்படுகின்றது.

வியாபார நோக்கத்தில் கூடுதல் இலாபம்பெற வேண்டுமாக இருந்தால் மானிய அடிப்படையில் இராசாயன உரம் பயன்படுத்துவதன் ஊடாகவே நல்ல விளைச்சலைப் பெற முடியும்.

அதே நேரம் மட்டக்களப்பில் தொல்பொருள் என்ற போர்வையில் பல இடங்களில் அடையாளப்படுத்தப்பட்டு எல்லைக்கல் இடும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தில் 18இடங்களுக்கு மேல் தொல்பொருள் இடங்கள் உள்ளன.

அந்த இடங்களை எல்லைக்கல் இட்டு பௌத்த மதகுருக்கள் சென்று அவற்றினை பௌத்த இடங்களாக அடையாளப்படுத்தும் முயற்சிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றன.

மட்டக்களப்பில் உள்ள தொல்பொருள் இடங்களை பௌத்தர்களுக்குரியது என திணிக்க முற்படும்போது தமிழ் மக்களை சந்தேககண்கொண்டு பார்க்கும் நிலையினை உருவாக்கியவர்கள் இந்த பௌத்த குருமார்களாகும்.

தொல்பொருள் என்பது வரலாற்று ரீதியான பகுதிகள் அதனை பாதுகாக்கவேண்டிய கடமை தமிழ் மக்களுக்கும் உள்ளது. தொல்பொருளை பாதுகாக்கவேண்டியவர்கள் அப்பகுதியில் உள்ள மக்கள்.கடந்த காலத்தில் தமிழ் மக்கள் அதனை பாதுகாத்திருக்கின்றார்கள், பாதுகாப்போம். அதனைவிடுத்து இராணுவத்தினரைக் கொண்டு பாதுகாப்பு அரண்அமைத்து தொல்பொருளை பாதுகாப்பது என்றால் அதனை ஏன் சிங்களப்பகுதியில் செய்யவில்லை. தென்னிலங்கையில் அவ்வாறான பல பகுதிகள் உள்ளன.முடியுமானால் இராணுவத்தினரையும்  காவல்துறையினரையும்  கொண்டு பாதுகாப்பு அரண்களை அமைத்து அங்கு  பாதுகாருங்கள்” என்றார்.

ilakku Weekly Epaper 154 october 31 2021 Ad தமிழர் பகுதிகளில் உள்ள தொல்பொருட்களை தமிழர்கள் பாதுகாப்பார்கள்